விருத்தாசலம் - விருத்தாசலம் தென்கோட்டை வீதியில் சாலை விரிவாக்கம் செய்தும், தாறுமாறாக வாகனங்களை நிறுத்துவதால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.கடலுார் - விருத்தாசலம் - சேலம் (சி.வி.எஸ்.,) தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் முடிந்தது. அதில், விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து பெரியார் நகர், கடலுார் ரோடு, தென்கோட்டை வீதி, மணவாளநல்லுார் பிரிவு சாலை வரை நடந்தது.இதற்காக, மின்கம்பம் இடமாற்றம், புதிதாக கல்வெர்ட் மற்றும் இருபுறம் வாகனங்கள் நிறுத்த வசதியாக பிளாட்பாரம் ஆகியவை போடப்பட்டன.அதில், தென்கோட்டை வீதியில் விரிவாக்கம் செய்த சாலையின் இருபுறம் தள்ளுவண்டிகள், ஆட்டோ, கார், வேன், இருசக்கர வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுகின்றன.இதனால், இருவழிச்சாலையில், ஒருபுறம் முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டது. எஞ்சிய பகுதியில் மட்டுமே எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதனால், அரசு பொது மருத்துவமனைக்கு அவசர சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லும் ஆம்புலன்சுகள், ஒருங்கிணைந்த நீதிமன்றம், பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்ல வேண்டிய வாகனங்கள் நெரிசலில் சிக்குகின்றன.இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானதும், அதிகாரிகள் அவ்வப்போது வாகன நெரிசலை சீரமைத்தாலும், அதன்பின் கண்டுகொள்வதில்லை.இதனால், காலை, மாலை வேளைகளில் 200 மீட்டர் துார தென்கோட்டை வீதியைக் கடந்து செல்ல 20 நிமிடம் தேவைப்படுகிறது. எனவே, பொது மக்கள், நோயாளிகள் நலன் கருதி தென்கோட்டை வீதியில் விரிவாக்கம் செய்த சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, வாகன நெரிசலை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE