80 லட்சம் பேரை பரிசோதிக்க திட்டம் | Dinamalar

தமிழ்நாடு

80 லட்சம் பேரை பரிசோதிக்க திட்டம்

Added : ஏப் 09, 2021
Share
சென்னை- சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க, வீடு, வீடாக, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணி, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது. சென்னையில் வசிக்கும், 80 லட்சம் மக்களையும் பரிசோதிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கான பணியில், 12 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில், இந்தாண்டு, பிப்., மாதத்தில், கொரோனா தொற்றில் சிகிச்சை பெறுவோர்
 80 லட்சம் பேரை பரிசோதிக்க திட்டம்

சென்னை- சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றை தடுக்க, வீடு, வீடாக, தொற்று அறிகுறி உள்ளவர்களை கண்டறியும் பணி, நேற்று முதல் துவங்கப்பட்டுள்ளது.

சென்னையில் வசிக்கும், 80 லட்சம் மக்களையும் பரிசோதிக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.இதற்கான பணியில், 12 ஆயிரம் களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.சென்னையில், இந்தாண்டு, பிப்., மாதத்தில், கொரோனா தொற்றில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 1,700 ஆக இருந்த நிலையில், தொற்று பரவலின் வேகம் அதிகரித்து, தற்போது, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர்.

தினசரி பாதிப்பும், 100 என்ற நிலையில் இருந்து, 1,400 என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் வரை, 10 ஆயிரத்து, 685 பேர் சிகிச்சை பெறுகின்றனர்.தொற்று பரவல் வேகம் அதிகரித்துள்ள நிலையில், அவற்றை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி, 2020ல், தொற்று கட்டுப்படுத்த உதவிய, அதே நடவடிக்கையை, மாநகராட்சி மீண்டும் கையில் எடுத்துள்ளது.அதன் ஒரு பகுதியாக, தொற்று பரவும் பகுதியில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, அனைவருக்கும் பரிசோதிக்கப்படுகிறது.அதேபோல், 12 ஆயிரம் களப்பணியாளர்கள் மீண்டும் நியமிக்கப்பட்டு, வீடு, வீடாக, காய்ச்சல், சளி, பல்ஸ் ஆக்ஸிமீட்டர் வாயிலாக, ஆக்சிஜன் அளவு கண்டறியும் பரிசோதனை உள்ளிட்டவை மேற்கொள்ளப்படுகின்றன.இப்பணிகள் சென்னை மாநகராட்சியில் நேற்று முதல் துவங்கியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள, 80 லட்சம் மக்களையும் பரிசோதிக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.இதற்கிடையே, சென்னையில், வயது வாரியாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் விபரங்களை மாநகராட்சி, 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டுள்ளது.இதில், 30 முதல், 39 வயது வரையிலானவர்கள் அதிகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அண்ணா நகர், தேனாம்பேட்டை மண்டலங்களில் தீவிரமாகவும், அம்பத்துார், ராயபுரம், வளசரவாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் அதிகளவு பாதிப்பு உள்ளது. மேலும், 59.54 சதவீதம் ஆண்களும், 40.46 சதவீதம் பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொத்து கொத்தாக பரவல்ராயபுரம் உதவி செயற்பொறியாளர் பழனி கூறியதாவது:ராயபுரத்தில் உள்ள ஓசியன் டவர், புராணி அடுக்குமாடி குடியிருப்பு, கொண்டித்தோப்பு காவலர் குடியிருப்பு, மின்ட் மார்டன் சிட்டி உள்ளிட்ட பகுதிகளில், தினமும், 15க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். 'க்ளஸ்டர்' எனப்படும், கொத்து கொத்தாக பரவும் பகுதிகளை கண்டறிந்து, அங்கு நேரடியான சிகிச்சை வழங்கப்படுகிறது.மேலும், குடிசை பகுதிகளான மூலக்கொத்தளம், காத்பாடா, ராமதாஸ் நகர், போஜராஜன் நகர் உள்ளிட்ட பகுதிகளில், தொடர் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தினமும் ஒரு களப்பணியாளர், 200 வீடுகளை கண்காணிக்கும் பணியை மேற்கொள்வார்.இவ்வாறு, அவர் கூறினார்.

களம் இறங்கியது காவல் துறை

பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களான, சுற்றுலா தலங்கள், மால்கள், மார்க்கெட் பகுதிகளில், போலீசார் ஒலிபெருக்கி வாயிலாக கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று, வடபழநி, செங்குன்றம், திருவள்ளூர் கூட்டுச்சாலை சந்திப்பு உள்ளிட்ட பல பகுதிகளில், போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளிடம், கொரோனா பரவல் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முககவசம் அணியாமல் சென்றவர்களை எச்சரித்து, அறிவுரை வழங்கி அனுப்பினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X