எண்ணுார்; மாநகராட்சி உடற்பயிற்சி கூடத்தின், ஜன்னல் கண்ணாடிகள், சமூக விரோதிகளால் சேதப்படுத்தப்பட்டுள்ளன.சென்னை, எண்ணுார் பேருந்து நிலையம் அருகே, மாநகராட்சி வணிக வளாகத்தில், 2015 -2016ம் ஆண்டு, 2வது வார்டு மாமன்ற உறுப்பினர், மேம்பாட்டு நிதியின் கீழ், உடற்பயிற்சி கூடம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.இந்த உடற்பயிற்சி கூடத்தில், போதுமான உபகரணங்கள் கிடையாது. பல நேரங்களில், திறக்கப்படுவதில்லை என, பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. இந்நிலையில், உடற்பயிற்சி கூடத்தின் கட்டடத்தில், ஜன்னல் கண்ணாடிகளை, சமூக விரோதிகள் சிலர், கல் எறிந்து சேதப்படுத்தியுள்ளனர்.அவை, அபாயகரமான நிலையில், உடைந்து தொங்கியபடி உள்ளன. இந்த வழியே, அம்மா உணவகம், நியாயவிலை கடை, கோவில் மற்றும் கடைகளுக்கு, மக்கள் சென்று வருகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, உடைந்த ஜன்னல் கண்ணாடிகளை அகற்றி, இரும்பில் ஜன்னல்களை அமைக்க வேண்டும். அப்பகுதி வாலிபர்கள் பயன்பெறும் வகையில், உடற் பயிற்சி கூடத்தை, தினமும் திறந்து வைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE