குப்பைக்கூளமாக மாறிய பள்ளிகள்: தேர்தலுக்குப் பின் ஆசிரியர்கள் அவதி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைக்கூளமாக மாறிய பள்ளிகள்: தேர்தலுக்குப் பின் ஆசிரியர்கள் அவதி

Added : ஏப் 09, 2021
Share
கோவை: தேர்தல் பணிகள் முடிந்ததும், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாமல், சில அரசுப்பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.தமிழக சட்டசபை தேர்தலில், பெரும்பாலும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளே ஓட்டுச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன. நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, மேல்நிலைப்பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன.வாக்குச்சாவடி
குப்பைக்கூளமாக மாறிய பள்ளிகள்: தேர்தலுக்குப் பின் ஆசிரியர்கள் அவதி

கோவை: தேர்தல் பணிகள் முடிந்ததும், கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யாமல், சில அரசுப்பள்ளிகள் ஒப்படைக்கப்பட்டதால், ஆசிரியர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர்.

தமிழக சட்டசபை தேர்தலில், பெரும்பாலும், தொடக்க, நடுநிலைப்பள்ளிகளே ஓட்டுச்சாவடி மையங்களாக பயன்படுத்தப்பட்டன. நகர்ப்புற பகுதிகளில் மட்டுமே, மேல்நிலைப்பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக செயல்பட்டன.வாக்குச்சாவடி மையமாக செயல்படும் பள்ளி வளாகம், சுத்தம் செய்த பிறகே ஒப்படைக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில், கல்வித்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதை உறுதி செய்ய, தலைமையாசிரியர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. ஆனால், மாநகராட்சி பள்ளிகள் மட்டுமே, முழுமையாக சுத்தம் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.சில அரசுப்பள்ளிகளில், கிருமிநாசினி மட்டுமே தெளிக்கப்பட்டதாகவும், வகுப்பறைகள் சுத்தப்படுத்தப்படவில்லை எனறும் புகார் எழுந்துள்ளது.

தொடக்க, நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் ஓட்டுச்சாவடி மையமாக செயல்பட்ட வகுப்பறைகளில், நோட்டீஸ் அகற்றுதல், வகுப்பறைகளின் இருக்கைகள் சரி செய்தல் உள்ளிட்ட பணிகளை, ஆசிரியர்களே மேற்கொண்டனர்.கொரோனா தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், ஓட்டுச்சாவடி மைய வளாகங்களை முழுமையாக சுத்தம் செய்யாதது, ஆசிரியர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், 'கோவை நகர்ப்பகுதி பள்ளிகளில், கடமைக்கு சில பள்ளிகளில், காலையில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. ஓட்டுச்சாவடி மையங்களில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்கள், முழுமையாக அகற்றப்படவில்லை. 'கையுறை, மாஸ்க் குப்பை, முறையாக அப்புறப்படுத்தவில்லை. தொகுதி வாரியாக வாக்குச்சாவடி மையங்களை, ஆய்வு செய்து, கிருமிநாசினியால் முழுமையாக சுத்தப்படுத்தி தர வேண்டும்' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X