சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி, 'இங்கிலாந்து மகளிர் நெட்வொர்க்' அமைப்பின் சார்பில், மூத்த பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கடவுளின் பரிபூரண ஆசியால், தனக்கு இந்த விருது கிடைத்ததுள்ளதாக, பி.சுசீலா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் உள்ள, இங்கிலாந்து மகளிர் நெட்வொர்க் அமைப்பின் சார்பில், ஆண்டுதோறும், பிரிட்டன் நாட்டில் சாதனை படைத்த பெண்களுக்கு விருது வழங்கி, பாராட்டு விழா நடத்துவர்.இவ்விழா, அங்குள்ள பார்லிமென்ட் கட்டடத்தில், உறுப்பினர்கள் முன்னிலையில் நடைபெறும்.இந்தாண்டு, பிரிட்டனுக்கு வெளியே சாதனை படைத்த பிற நாட்டு பெண்களையும் கவுரவிக்க முடிவெடுத்தனர். அதன்படி, நம் நாட்டை சேர்ந்த, பிரபல பின்னணி பாடகி, பி.சுசீலா மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், பெண் இசையமைப்பாளருமான ரெஹானா உள்ளிட்டோர் கவுரவிக்கப்பட்டனர்.கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் விழா, 'விரிச்சுவல்' முறையில், ஆன்லைனில் நடைபெற்றது. சென்னையிலிருக்கும் இக்குழுவின் ஒருங்கினைப்பாளர்கள், நஸ்ரின் மற்றும் அஷ்ரப் ஆகியோர், விருதாளர்களை நேரில் கவுரவித்தனர்.
இந்த விருது பெற்றது குறித்து, பி.சுசீலா கூறியதாவது: வெளிநாடுகளைச் சேர்ந்த, சாதனைப் பெண்மணிகளுக்கு, விருது வழங்க முடிவு செய்த முதல் ஆண்டிலேயே, என்னை தேர்ந்தெடுத்து, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளனர். இதைவிட பெருமை வேறென்ன இருக்க முடியும். இந்த விருது கிடைத்தது, கடவுளின் ஆசி என்றே கருதுகிறேன். தற்போதுள்ள கொரோனா சூழல் காரணமாக, நிகழ்ச்சி நேரடியாக நடைபெறாமல், இணைய வழியில் நடந்துள்ளது, சற்று சங்கடமாகவே உள்ளது.நான் விருது பெறுவதை கண்டு ரசிக்கும் என் ரசிகர்களை, என்னால் நேரடியாக காண முடியவில்லையே என்ற வருத்தம் எனக்குள்ளது. எனினும், சூழலை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மற்றொரு விருதாளரான, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரெஹானா கூறியதாவது: இங்கிலாந்தில் உள்ள மகளிர் அமைப்பில் இருந்து அழைத்து, விருது கொடுத்தது சந்தோஷமாக இருந்தது. அதிலும், பெண்கள் தினத்தில் அவ்விருது கிடைத்தது கூடுதல் மகிழ்ச்சி. இசைத்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும். பாடகியாக நிறைய பேர் வருகின்றனர். ஆனால், இசையமைப்பாளராக யாரும் முன்வருவதில்லை. பெண்கள் இசைத்துறைக்கு வந்தால், நிச்சயம் புதிய இசை பிறக்கும்; துறையும் அழகாக மாறும்.என் அண்ணன், ஏ.ஆர்.ரஹ்மானிடம் நான் கற்ற முக்கியமான விஷயம் ஒழுக்கம், கடின உழைப்பு, புதுமைக்கு முக்கியத்துவம். இந்த மூன்றும் தான் அவரது வெற்றிக்கும் காரணம்.பெண்கள் அனைத்து துறையிலும் சாதிக்க வேண்டும். அதில் அரசியல் மட்டும் விதிவிலக்கல்ல. பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும்; அவர்களை வரவேற்க வேண்டியது நம் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE