ஆரோக்கியமாக இருப்பது உங்கள் கடமை. உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம், உங்கள் உடலுக்கும், மனதுக்கும், உணர்வுகளுக்கும், உயிருக்கும் புத்துயிர் ஊட்டி, உயர்ந்த நிலையில் செயல் புரியச் செய்கிறீர்கள்.
- ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ்
'அருமையான பதிவு. இதையே, ஆரோக்கியம் தான் செல்வம் என, நம் முன்னோர் கூறியுள்ளனர்...' என, கூறத் தோன்றும் வகையில், ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அறிக்கை.
தேர்தல் பிரசாரத்தின் போது, பொதுமக்கள் தன்னெழுச்சியாக எனக்கு ஆதரவு தெரிவித்தனர். மீண்டும் கொரோனா தடுப்பு பணிகள் தொடங்கும். மீண்டும் களத்திற்கு வந்து தடுப்பு பணிகளை மேற்கொள்வேன்.
- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
'தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலையையும் தடுத்து நிறுத்தி விட்டால், 'கொரோனா நாயகன்' பட்டம் உங்களுக்குத் தான்...' என, சொல்லத் தோன்றும் வகையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி.
தமிழகத்தின் உரிமைக்காக மட்டுமல்ல, அடுத்த இரண்டு, மூன்றாண்டுகளில் இந்தியாவின் மதச்சார்பின்மையை, அரசியல் சட்டத்தின் மாண்புகளை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, தமிழகம் மிகப்பெரிய உணர்ச்சிப் பிழம்பாக இருக்கிறது.
- தி.மு.க., - எம்.பி., ராசா
'உங்களின், 'தாய்' பேச்சால், தி.மு.க., தான் உணர்ச்சி பிழம்பாக இருக்கிறது. ஆட்சிக்கு வரவில்லை என்றால், உங்கள் கதி அதோ கதி தான்...' என, கூறத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.பி., ராசா பேட்டி.
நச்சரவம் தீண்டாமல் நாட்டைக் காப்போம்; தாயுள்ளம் மேலோங்க தமிழைக் காப்போம்; சமூகநீதி வீழாமல் உரிமை காப்போம்; சனாதனத்தை வேரறுத்து சமத்துவம் மீட்போம்.
- விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

'சனாதனத்தை வேரறுத்தால் மட்டும், சமத்துவம் வந்து விடுமா; அவ்வாறு தான், அந்த கொள்கையை வேரறுக்க முடியுமா; நடக்க கூடிய விஷயத்தை பேசுங்கள் சார்...' என, அறிவுரை கூறத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை.
இந்த நாட்டை மறுகட்டுமானம் செய்ய, பா.ஜ., 41 ஆண்டுகளாக கடும் முயற்சிகள் எடுத்து வந்துள்ளது. பா.ஜ., மட்டும் தான், 1947க்கு முன்னரும் இந்தியா என்ற நாடு, கட்டமைப்புடன் இருந்தது என்ற எண்ணத்தை கொண்டுள்ளது.
- பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா
'பல கட்சிகள், 1947க்கு பிறகு தான், இந்தியா சிறப்பானதாக உருமாறியது என, எண்ணிக் கொண்டிருக்கின்றன. அதற்கு, பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, இந்தியா உன்னத நிலையில் தான் இருந்தது...' என, ஒப்புக் கொள்ளத் துாண்டும் வகையில், பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா பேச்சு.
கொரோனா விதிமுறைகளை மக்கள் சரியாக பின்பற்றுவதில்லை. முக கவசங்களை அணிவதில்லை; அணிந்தாலும் சரிவர அணிவதில்லை.
- மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
'சரியான முறையில் முக கவசம் அணியாதது; சரியான முக கவசம் அணியாதது தான், நம்மவர்களின் பிரச்னையே...' என, கூறத் தோன்றும் வகையில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பேச்சு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE