வீரபாண்டி: சாலை பணியின்போது, கேமராக்களின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், காட்சி பொருளாக கேமராக்கள் மாறிவிட்டன. ஆட்டையாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் எதிரே உள்ள ரவுண்டானாவில், 2018ல், சேலம், திருச்செங்கோடு, ராசிபுரம் சாலைகளில், விபத்து, குற்றச்சம்பவங்களை கண்காணிக்க, மூன்று திசைகளில் தலா ஒரு கேமரா, உயரமாக ஒரு சுழலும் கேமரா அமைக்கப்பட்டது. அதேபோல், ஆட்டையாம்பட்டி பஸ் ஸ்டாண்ட், காகாபாளையம் சாலைகளை கண்காணிக்க, ஆங்காங்கே கேமராக்கள் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டன. அதில் பதிவாகும் காட்சிகளை, போலீஸ் ஸ்டேஷனில் பார்க்கும்படி, திரை வைக்கப்பட்டுள்ளது. கடந்த, 20 நாளுக்கு முன், போலீஸ் ஸ்டேஷன் ரவுண்டானவை சுற்றி, சாலை விரிவாக்கம் செய்து, சாலை அமைக்கும் பணி நடந்தது. அப்போது, கேமராக்களில் இருந்து, போலீஸ் ஸ்டேஷனுக்கு கொடுக்கப்பட்டிருந்த இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. இதனால், ரவுண்டானாவில் வைக்கப்பட்டுள்ள நான்கு கேமராக்களும், காட்சிப்பொருளாக மாறிவிட்டன. இதனால், போக்குவரத்து பாதிப்பு, விபத்தை தெரிந்து கொள்ள முடியாமல் போலீசார் சிரமப்படுகின்றனர். மேலும், குற்றச்சம்பவங்களுக்கு வழிவகுக்கும் என்பதால், கண்காணிப்பு கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE