புதுடில்லி : 'இந்திய அரசுடனான ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை' என விமானங்களை விற்பனை செய்த பிரான்ஸ் நிறுவனமான 'டசால்ட் ஏவியேஷன்' விளக்கம் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரான்சைச் சேர்ந்த 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடம் இருந்து 59 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 36 ரபேல் போர் விமானங்களை வாங்க 2016ல் மத்திய அரசு ஒப்பந்தம் போட்டது.இதுவரை நான்கு தவணைகளில் 14 ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.இந்நிலையில் ரபேல் விமான ஒப்பந்தத்தில் இந்திய இடைத்தரகருக்கு ஒன்பது கோடி ரூபாய் லஞ்சமாக வழங்கப்பட்டதாகவும் இது தொடர்பாக பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை நடப்பதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டது. இந்த குற்றச்சாட்டு நம் நாட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரம்:பிரான்ஸ் ஊழல் தடுப்பு பிரிவு உட்பட நாட்டின் பல்வேறு நிறுவனங்களின் கட்டுப்பாட்டுடனேயே ரபேல் போர் விமான ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்டது.இதில் எவ்வித முறைகேடுகளும் நடக்கவில்லை. ஓ.இ.சி.டி. எனப்படும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு லஞ்ச ஒழிப்பு குழு மற்றும் தேசிய சட்ட வழிகாட்டுதல்களை 'டசால்ட் ஏவியேஷன்' கறாராக பின்பற்றுகிறது.ஊழல் மற்றும் முறைகேடுகளை தவிர்க்க 2000ம் ஆண்டு முதலே கடுமையான நடைமுறைகளை 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனம் வகுத்துள்ளது.தொழில்துறை மற்றும் வணிக உறவுகளில் நிறுவனத்தின் நேர்மை நெறிமுறைகள் மற்றும் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாமல் செயல்பட உறுதி ஏற்றுள்ளது.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE