கொரோனா பரவல் ஒருபுறம், சுட்டெரிக்கும் வெயில் மறுபுறம் என்பதால், அரசு பஸ்களில், பயணிப்போரின் எண்ணிக்கை சரிந்து, வருவாய் வீழ்ச்சியால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தமிழக அரசின், போக்குவரத்துத்துறை, கொள்கை விளக்க குறிப்பேடு தகவல்படி, 2020 மார்ச், 1ல், போக்குவரத்துக்கழகங்களின், 20 ஆயிரத்து, 944 பஸ்களில், 1,448 'ஸ்பேர்' பஸ்களாக இருந்த நிலையில், 19 ஆயிரத்து, 496 தடங்களில் இயக்கப்பட்டன. தினமும், 84.07 லட்சம் கி.மீ., பஸ்கள் இயங்கிய நிலையில், 2.13 கோடி பேர் பயணித்ததால், தினசரி வருவாய், 29 கோடி ரூபாயாக இருந்தது. ஆனால், 2020 மார்ச் இறுதியில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு அமல்படுத்திய பின், பஸ்களின் இயக்கம் சொல்லிக்கொள்ளும்படி இல்லை. இதனால், எட்டு மாதங்கள், வருவாய் முற்றிலும் முடங்கின. செப்டம்பரில், அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில், பயணியர் வருகை, 1.44 கோடியாக சரிந்ததால், வருவாய் குறைந்தது. நடப்பாண்டு மார்ச் இரண்டாம் வாரம், தமிழகத்தில், வெயில் தாக்கம் அதிகரித்த நிலையில், கொரோனா இரண்டாவது அலையாக பரவத்தொடங்கியுள்ளது. இதனால், அரசு பஸ்களின் பயணிப்போரின் எண்ணிக்கை, 80 லட்சமாக குறைய, எஸ்.இ.டி.சி.,யை தவிர்த்து, மற்றவற்றில், வருவாய் பெரும் அளவில் குறைந்துள்ளது. கடந்த, 2020 மார்ச்சில், தினசரி வருவாய், 27.79 கோடியாக இருந்தது, 2021 மார்ச்சில், 23.62 கோடியாக சரிந்துள்ளது. தற்போது, வெயில், கொரோனாவால், அரசு பஸ்களில் பயணிப்போரின் எண்ணிக்கை, மேலும் சரிய, ஏப்., 1ல், 21.50 கோடி ரூபாயாக, வருவாய் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில், 'நாளை முதல், பஸ்களில், இருக்கையை மட்டும் நிரப்ப வேண்டும். யாரும் நின்று பயணிக்க அனுமதி இல்லை' என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வருவாய் மேலும் சரியும் என்பதால், அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர். போக்குவரத்துக்கழக நலன்கருதி, மத்திய, மாநில அரசுகள், கொரோனா பேரிடர் நிதியில் இருந்து, உரிய தொகையை ஒதுக்க, தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
அரசு பஸ் வருவாய் வீழ்ச்சி விபரம்
கோட்டம் 2020 மார்ச் 16 - 2021 மார்ச் 16 ரூ.,/கோடி ரூ.,/கோடி
எஸ்.இ.டி.சி., - 1.33 1.46
விழுப்புரம் - 5.14 4.42
சென்னை - 5.21 3.68
கும்பகோணம் - 4.55 4.32
சேலம் - 2.90 2.37
கோவை - 3.78 2.76
மதுரை - 2.77 2.61
நெல்லை - 2.06 1.96
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE