'கருத்துக்கணிப்புகளை தூக்கி குப்பையில் போடுங்கள். கொங்கு மண்டலத்தின், பெரும்பான்மை தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெறும்' என, அமைச்சர்கள், வேட்பாளர்களிடம், முதல்வர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த, 6ல் நடந்த சட்டசபை தேர்தலில், சேலம் மாவட்டம், இடைப்பாடியில் உள்ள, சிலுவம்பாளையத்தில், ஓட்டுப்போட்ட பின், அங்கு முதல்வர் பழனிசாமி ஓய்வில் இருந்தார். நேற்று முன்தினம், அவரை, அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பண்ணன், நடராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் சந்தித்தனர். இதில், மாவட்டம் வாரியாக, வெற்றி வாய்ப்பு குறித்து ஆலோசித்தார். நேற்று, சேலம், நெடுஞ்சாலை நகரில் உள்ள, முதல்வரின் வீட்டில், அமைச்சர்கள் சம்பத், உதயகுமார், வீரமணி, ஈரோடு த.மா.கா., வேட்பாளர் யுவராஜா, சேலம் மேற்கு தொகுதி, பா.ம.க., வேட்பாளர் அருள் சந்தித்தனர்.
அமைச்சர்கள், வேட்பாளர்கள், கட்சி நிர்வாகிகளிடம், முதல்வர் கூறியதாக, கட்சி பிரமுகர் ஒருவர் கூறியது: 'தி.மு.க., தான் ஆட்சி அமைக்கும். அ.தி.மு.க., 50 தொகுதிகளில் தான் வெல்லும்' என, வெளியான கருத்துக்கணிப்புகளை தூக்கி குப்பையில் போடுங்கள். கொங்கு மண்டலத்தின், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பெரும்பான்மை தொகுதிகளில், அ.தி.மு.க., வெற்றி பெறும். இந்த மாவட்டங்களில், தி.மு.க., ஒற்றை இலக்கத்தை தாண்டாது என, பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. பிரசாரத்தின்போது, வரவேற்பு கலந்த மகிழ்ச்சியுடன், என் பேச்சை, மக்கள் கேட்டனர். விவசாயிகள், பெண்கள், முதல் தலைமுறையினர் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு தான் கிடைத்துள்ளன. ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது, நம் வெற்றியை பிரகாசப்படுத்துவதாக உள்ளது. கடந்த கால தேர்தல்களில் கிடைத்த அனுபவப்படி, தேர்தல் முடிவு, அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருக்கும் என நம்புகிறேன். மே, 2ல், முடிவு வெளியானதும், மீண்டும், அ.தி.மு.க., ஆட்சி அமைக்கும். இந்த விஷயத்தில் சந்தேகம் வேண்டாம். கவலைப்படாமல், 20 நாளை கடப்போம். இடைப்பட்ட நாளில், மாநிலம் முழுதும், அ.தி.மு.க., வெற்றிக்கு உண்மையாக உழைத்தவர் யாரென்பதை, பட்டியலாக தயாரித்து வையுங்கள். ஆட்சி அமைந்ததும், உண்மையானவர்களுக்கு, சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது என்பதை மட்டும், உங்களை சந்திக்க வரும் நிர்வாகிகளிடம் கூறுங்கள். தேர்தல் முடிவை பற்றி கவலைப்பட வேண்டாம். இவ்வாறு முதல்வர் கூறியதாக, கட்சி பிரமுகர் தெரிவித்தார். முதல்வர் பழனிசாமி, இன்று காலை, துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் மாமியார் இறுதிச்சடங்கில் பங்கேற்கே கார் மூலம், தேனி செல்கிறார்.
- நமது சிறப்பு நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE