புதுடில்லி: சரியான திட்டமிடுதல் இல்லாததால் மஹாராஷ்டிரா அரசு 5 லட்சம் தடுப்பூசி டோஸ்களை வீணடித்துவிட்டதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மஹாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 31 லட்சத்து 73 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரே நாளில் 59 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தங்கள் மாநிலத்தில் தடுப்பூசி டோஸ்கள் பற்றாக்குறை இருப்பதாக மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தோப் குற்றம் சாட்டியுள்ளார். தங்களிடம் வெறும் 14 லட்சம் டோஸ்கள் மட்டுமே இருப்பதாகவும், இது 3 நாட்களுக்கு மட்டுமே போதுமானது எனவும் தெரிவித்திருந்தார்.

மஹா., அமைச்சரின் குற்றச்சாட்டுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில், 'மத்திய அரசின் முந்தைய ஒதுக்கீட்டை ஒப்பிடுகையில் மஹா.,வுக்கு அதிகமான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு உள்ளன. அங்கு தற்போது 23 லட்சம் டோஸ்கள் கையிருப்பு உள்ளன. இது இன்னும் 5 முதல் 6 நாட்களுக்கு போதுமானதாக இருக்கும்.
மாவட்டங்களுக்கும், கிராமங்களுக்கும் அதை வினியோகிக்க வேண்டியது மாநில அரசின் கடமை ஆகும். சரியான திட்டமிடுதல் இல்லாததால் அந்த அரசு 5 லட்சம் தடுப்பூசிகளை வீணடித்தது. இது சிறு தொகை அல்ல. தடுப்பூசி திட்டத்தை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE