மத்திய, பா.ஜ., அரசு கூறிக் கொள்வது போல, தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லையெனில், ஏன் நாடு முழுவதும் அனைவருக்கும் தடுப்பூசித் திட்டம் அமலாக்கப்படவில்லை?-மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி
'இப்போது தான், தடுப்பூசி வந்துள்ளது. உடனே, 130 கோடி பேருக்கும் கேட்டால் முடியுமா...' என, பதிலடி கொடுக்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீத்தாராம் யெச்சூரி அறிக்கை
மேற்கு வங்கத்தில், பா.ஜ., வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்ட போது, அங்கிருக்கும், பா.ஜ., ஆதரவு நிலை, எனக்கு ஆச்சர்யத்தை அளித்தது. அங்கு, பா.ஜ., ஆட்சி அமைவது உறுதி.-மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு
'அப்படித் தான் அங்கிருந்து வரும் செய்திகள் சொல்கின்றன; மம்தா இந்த முறை, தோல்வி தான் என்பது, அவரது பதற்றத்திலேயே தென்படுகிறது...' என, சொல்லத் துாண்டும் வகையில், மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு அறிக்கை
இந்தியாவில் அனைத்து மக்களுக்கும், கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய முடியவில்லை. நாங்கள் லாபம் வைத்து விற்கவில்லை. ஆனால், உற்பத்திக்காவது, 3,000 கோடி தேவை என, 'சீரம் இன்ஸ்டிடியூட்' மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. உடனடியாக மத்திய அரசு இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யவேண்டும்.-கரூர் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி
'நீங்கள் கேட்டு தான், மத்திய அரசு கொடுக்க வேண்டும் என்றில்லை; கேட்காமலேயே கொரோனா ஒழிப்புக்கு ஏராளமாக செய்து வருகிறது, மத்திய அரசு...' என, நினைவூட்டத் தோன்றும் வகையில், கரூர் காங்., பெண் எம்.பி., ஜோதிமணி அறிக்கை
மக்களிடம் ஓட்டு கேட்பதில் காண்பித்த ஆர்வத்தில், 10ல் ஒரு பங்கையாவது, தடுப்பூசி செலுத்தி கொள்ள செய்வதில் காண்பிக்க முன்வருவரா தமிழக அரசியல்வாதிகள்?-பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி

'தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம், அரசியல் தலைவர்களின் பிரசாரம் மற்றும் அதற்கு கூடிய கூட்டம் தானே; பிறகு இவர்கள் எப்படி, தடுப்பூசிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவர்...' என, கூறத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை
காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு, புதுச்சேரி மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். எங்களின் பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டுள்ளது. அதனால், எங்களுக்கு தான், மக்கள் ஓட்டளித்துள்ளனர். வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்போம்.-புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

'நம்பிக்கை தான் வாழ்க்கை. அதிலும், அரசியலில் அதிகம் வேண்டும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேட்டி
மத்திய அரசின் பிடிவாதமான நிலைப்பாட்டின் காரணமாக, நாட்டில், ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரு பெரிய பேரழிவு நாட்டுக்கு காத்திருக்கிறது. இதற்கு காரணமான மோடி அரசு போன்ற கடுமையான ஜனநாயக நாடு உலகில் இல்லை.- காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம்
'மத்திய அரசு மீதான உங்களின் காட்டத்திற்கு காரணம், உங்கள் மீது பாயும் வழக்குகள் மீதான விசாரணையாகத் தான் இருக்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் அறிக்கை
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE