மனிதனின் விலை மதிப்பற்ற, ஈடு இணையற்ற பொக்கிஷங்கள் தாய், தந்தையரே. தங்கள் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக, எவ்வித தியாகத்தையும் செய்ய தயங்காதவர்கள் அவர்கள்.
அதற்கு அடுத்த இடத்தை வகிப்பவர் குரு. அதனால் தான், நாம் வணங்கும் தெய்வங்களாக மாதா, பிதா, குரு, தெய்வம் என, நால்வரும் போற்றப்படுகின்றனர்.தங்கள் குழந்தைகள் நன்றாக படித்து, பட்டம் பெற்று, பெரிய வேலைகளில் இருக்க வேண்டும் என்று கனவு காணாத பெற்றோரே இருக்க முடியாது; என் பெற்றோரும் இதற்கு விலக்கல்ல.
பெருமைப்படுகிறேன்
எனக்கு இப்போது, 92 வயது. 1928ல் பிறந்த நான், தமிழை அடிப்படை கல்வியாக படித்தவன். அதனால் என்னை, தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அப்போது புழக்கத்தில் இருந்த, மும்மொழி கல்வித் திட்டத்தின் மூலம், தமிழ், ஆங்கிலத்துடன் சமஸ்கிருதமும் பயின்றேன்; ஹிந்தியை தனியாக படித்தேன். ஒரு மரத்திற்கு அதன் வேர் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம், அந்த நாட்டின், அதன் எதிர்கால துாண்களாக விளங்கும், இன்றைய குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும், இளமையிலிருந்தே கற்பிக்கப்படும் கல்வி. மாணவரின் வாழ்வாதாரமே, அவர்கள் கற்கும் கல்வியிலும், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து, தகுதி பெற்று, தேர்ச்சி அடைவதிலும் தான் இருக்கிறது. அதுபோல, ஒரு நாட்டின் முதுகெலும்பாகக் கருதப்படுவதும் கல்வி தான்.
மொழிகள் தான் கல்வியின் ஜீவ நாடி. எத்தனை மொழிகள் கற்றாலும், நம் வாழ்வாதாரத்திற்கு அவை நன்மையே பயக்கும். அதுவும், கொரோனா நோய்த் தொற்று காலத்தில், உலக பொருளாதாரங்களே அடிமட்டத்தில் இருக்கும் இந்த காலத்தில், எந்தெந்த மொழிகள் நமக்கு பயனளிக்க வல்லவையோ எல்லாவற்றையும் கற்பது தான் சிறந்தது.இந்த வயதில், கல்வி தொடர்பாக நான் இந்த கட்டுரையை எழுதுவதன் நோக்கமே, தமிழகத்தில் பின்பற்றப்படும், ஹிந்தி மொழி எதிர்ப்பு தவறானது என்பதை வலியுறுத்துவதற்காகத் தான்.
அதுவும், கடந்த, 70 ஆண்டுகளாகத் தான் இந்நிலை, ஹிந்தி மொழியை தமிழகத்தில் பேசினால், படித்தால், தமிழ் அழிந்து விடுமோ என்ற கவலை, பல தரப்பினருக்கு உள்ளது.அப்படிப் பார்த்தால், ஆங்கிலத்தை தனித்து பேசுகிறோம்; தமிழுடன் கலந்தும் பேசுகிறோம்; தமிழ் மொழி அழிந்து விட்டதா?ஆங்கிலேயர் நம் நாட்டை ஆண்டதால் ஆங்கிலம் வேரூன்றி விட்டது.
ஆனால் அதுவும், ஒரு விதத்தில் நமக்கு நன்மையாகவே முடிந்தது. நமக்கு ஆங்கில மொழி அறிவு சிறப்பாக இல்லாமல் போயிருந்தால், லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு, வெளிநாடுகளில் வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டிருக்குமே!ஆங்கில மொழி அறிவு இருப்பதால் தான், உலக அரங்கில், பெரிய நிறுவனங்களில் எல்லாம், தலைமைப் பீடங்களில் தமிழர்கள் இருக்கின்றனர். அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது, நம் மீது திணிக்கப்பட்ட அந்த ஆங்கிலம் தான், இன்றளவும் இந்தியர்களையும், முக்கியமாக நம் தமிழர்களையும் காப்பாற்றி வருகிறது.
இந்த நேரத்தில் முக்கியமான ஒன்றை, நாம் நினைவுகூர வேண்டும். கோடிக்கணக்கான இந்தியர்கள் ஆங்கிலம் கற்க, ஆங்கிலேயர் பல்லாயிரக்கணக்கான பள்ளிகளையும், கல்லுாரிகளையும்,நுாற்றுக்கணக்கான பல்கலைகளையும் நாடு முழுதும் நிறுவி, ஆங்கில மொழியை கட்டாயமாக கற்க வேண்டும் என்ற, மும்மொழிக் கல்வித் திட்டத்தையும் வகுத்து, கல்வியை வளர்த்தனர். எந்த நோக்கத்தில் ஆங்கிலேயர்கள், ஆங்கிலத்தை நம் மீது திணித்திருந்தாலும், அதனால் பயனடைந்தவர்கள் நாம் தானே.
வேலைவாய்ப்பு
உலகளவில் ஆங்கிலம் எப்படியோ, அதேபோல, இந்திய அளவில் ஹிந்தி மொழியை அறிந்து கொள்வது, பல விதங்களில் நன்மை பயக்கவே செய்யும். அதனால், தமிழுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஏனெனில், 300 ஆண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள போதிலும், தமிழை யாராலும் அழிக்க முடியவில்லை; நித்தமும் வளர்ந்து தானே வருகிறது.நம் நாட்டின், 138 கோடி மக்களில், 50 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழி ஹிந்தி தான். அப்போது மட்டுமின்றி, இப்போதும், நம் வட மாநிலங்களில் அபரிமிதமான வேலைவாய்ப்புகள் உள்ளன.அந்த வாய்ப்புகள், நம் மாணவர்களின் நன்மைக்காக பயன்பட வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் தான் இதை எழுதுகிறேன்; என் சுய விளம்பரத்திற்காக அல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
இது, எனக்கு எப்படி தெரியும் என்றால், நானே, 1955 முதல், 25 ஆண்டுகள், வட மாநிலங்களில் வேலை செய்துள்ளேன். நான் கனவிலும் எதிர்பார்க்காத உயரத்திற்கு என்னையும், என் குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றவை, ஹிந்தி மொழி பேசும் அந்த மாநிலங்கள் தான்.
கடந்த, 1955 - 1970 வரை, பிரமாண்டமான, புதிதாக, நான்கு எக்கு ஆலைகள் வட மாநிலங்களில் கட்டப்பட்டன. ஒவ்வொரு ஆலையும், 10 ஆயிரத்திற்கும் குறைவில்லாத தொழிலாளர்களையும், 1,500க்கும் குறைவில்லாத அதிகாரிகளையும் கொண்டவை. இவற்றில் பிலாய் எக்கு ஆலையிலும், பொகாரோ ஆலையிலும் நான் பணி புரிந்தேன். அந்தக் காலங்களிலேயே, ஆயிரக்கணக்கான தமிழர்களும், மற்ற தென் மாநிலத்தினரும் அங்கு வேலை செய்து கொண்டு இருந்தனர்.
இவை தவிர, இப்போது, ஏராளமான தனியார் எக்கு ஆலைகளும், கணக்கற்ற கனரக தொழிற்சாலைகளும், அவற்றிற்கு உதிரி பாகங்களை தயாரிக்க ஏராளமான தொழிற்சாலைகளும் உள்ளன. எல்லா இடங்களிலும் நிறைய தமிழர்கள் உள்ளனர்.நான் கண்ணால் கண்டதைத் தான் எழுதுகிறேன். அந்த இடங்களில் வேலை வாய்ப்புகள் நிறையவே உள்ளன. அங்கு, எல்லாராலும் பேசப்படும் மொழி ஹிந்தி. ஆதலால், அந்த மொழி தெரிந்திருக்க வேண்டியது மிக அவசியமாகிறது.
தமிழ் கலாசாரம்
கடந்த, 1965ல், பிலாய் எக்கு ஆலையில், நான் பணியில் இருந்த போது தான், புதிதாக கட்டப்பட இருக்கும், பொகாரோ எக்கு ஆலையின் நிர்மாணத்திற்காக, ரஷ்ய அரசாங்கத்துடன், தொழில்நுட்ப தேவைகளை விவாதிக்க, 11 பொறியியல் நிபுணர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவில், என்னையும் ஒருவனாக தேர்ந்தெடுத்து, ஆறு மாத காலத்திற்கு ரஷ்யாவிற்கு அனுப்பினர்.
ரஷ்யாவிலிருந்து, 1966ல், பொகாரோ திரும்பிய நான், நுாற்றுக்கணக்கான தமிழர்களும், மற்ற தென் மாநிலத்தவரும் அங்கு வேலை செய்வதை பார்த்து, தமிழ் மன்றத்தை ஆரம்பித்து, தமிழ் கலாசாரத்தை வளர்த்தோம். நாடகங்கள் போட்டோம். சிறுவர்களுக்காக, 'பால விஹார்' என்ற அமைப்பை துவங்கி, பகவத் கீதை சொல்லிக் கொடுத்தோம். ஆக, அங்கு ஒரு குட்டி தமிழகத்தையே உருவாக்கி களித்தோம்.
இந்த கால கட்டத்தில், ரஷ்ய மொழியும், நான்கு தென் மாநில மொழிகள் உட்பட, மொத்தம் எட்டு மொழிகள் பேச, படிக்க, எழுத, கற்று அறிந்திருந்தேன். பல மொழிகளை கற்க வேண்டும் என்ற ஆவல் தான், பின்னர் நான், கோல் கட்டாவிலும், விசாகப்பட்டினத்திலும், சென்னை யிலும் வேலையில் இருந்தபோது, எனக்கு கைகொடுத்தன.இது, என் தந்தை எனக்கு அடிக்கடி உப தேசித்த, 'செய்யும் தொழிலே தெய்வம்; நேர்மையே வெல்லும்; உண்மையே பேசு' போன்ற நீதிகளை, நான் கடைப்பிடித்ததால் தான் உயர்ந்தேன்.இதற்கு காரணமான என் பெற்றோருக்கு, இந்த வயதிலும் நன்றி தெரிவிக்கிறேன்.
என் தந்தையும், 1890களில் பிறந்த, அந்தக் காலத்து, பி.ஏ., பட்டதாரி. கல்வியின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்ததால் தான், பணக் கஷ்டத்தையும் பாராமல், பி.ஏ., படித்து பட்டம் பெற்றார். 'தென் இந்தியாவின் கேம்பிரிட்ஜ்' என்று அப்போது ஆட்சி செய்த ஆங்கிலேயராலேயே போற்றப்பட்டதாக கூறப்படும், 'கும்பகோணம் கவர்ன்மென்ட் ஆர்ட்ஸ்' காலேஜில் அப்பட்டத்தை வென்றார். அதுபோல, தன் பணக் கஷ்டங்களை பாராமல், என்னையும் பொறியியல் கல்வி கற்க வைத்தார். ஆனால், என் துரதிர்ஷ்டம், என்னை சேர்த்தஉடனேயே, 1946ல், என், 17வது வயதில், இறைவன் திருவடி சேர்ந்தார்; என் கலங்கரை விளக்கும் அணைந்தது.எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரு அசாதாரண ஆற்றல் இறைவனால் அருளப்பட்டுள்ளது.
வளர்ந்த மனித மூளையின், 90 சதவீத வளர்ச்சியை, குழந்தைகள் தங்கள், முதல், 4 - 5 வயதிற்கு உள்ளாகவே பெற்று விடுகின்றனர்.இந்த அபரிமிதமான சக்தியால் தான், எதை சொல்லிக் கொடுத்தாலும், உடனே கிரகித்து, மனதில் நிறுத்திக் கொள்கின்றனர். இந்த அடிப்படையில் தான், பண்டைய இந்தியாவில் குருகுலங்கள் செயல்பட்டன.
மேற்கூறிய என் அனுபவங்களை இங்கு பதிப்பிக்க காரணமே, நம் மாணவர்களுக்கும், வட மாநிலங்களிலும் நன்மை பயக்கக்கூடிய வேலை வாய்ப்புகள் உள்ளன என்பதை விளக்கத் தான்.இதனால், மாணவர்களின் நலன் கருதி, காழ்ப்புணர்ச்சியை விட்டொழித்து, மேலும் தாமதியாமல், அரசு பள்ளிகளில், முக்கியமாக மும்மொழிக் கல்வியை கற்றுத் தர, அரசு இதை தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டுகிறேன்.
'ஆன்லைன்'
'யாமறிந்த மொழிகளிலே, தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்' என, தமிழுக்கு மகுடம் சூட்டிய பாரதியும், ஹிந்தி, சமஸ்கிருதம், வங்காளம் உட்பட, 14 மொழிகளை கற்றறிந்த பிறகே அவ்வாறு பேசினார்.வேலை நிமித்தமாக பல வெளிநாடுகளுக்கு சென்றுள்ளேன். ஐரோப்பாவில் உள்ள பல சிறிய நாடுகளிலெல்லாம் தத்தம் மாணவர்களுக்கு அரசு மொழியைத் தவிர, பல பிற மொழிகளையும் கற்றுத் தருகின்றனர்.
வேலைவாய்ப்புகளுக்காகவும், தங்கள் பொருளாதார வளர்ச்சிக்காகவும், பிற நாடுகளின் உதவியை எதிர்பார்க்க வேண்டி இருப்பதால், பிற நாட்டு மொழிகளை கற்பது அவசியமாக இருப்பதாக சொல்கின்றனர்.இன்னும் சில நாடுகள், தங்கள் அண்டை நாடுகளுடன் சுமுக நல்லுறவை வளர்த்துக் கொள்வதற்காகவே, தத்தம் மாணவர்களுக்கு, அண்டை நாடுகளின் மொழிகளை கற்றுத் தர முடிவு செய்துள்ளன.கல்வி கற்க வயதில்லை என்பதால், நானும் இந்த வயதில், 1940களில், நான் பள்ளியில் கற்று மறந்த சமஸ்கிருத மொழியை, தன்னார்வ தொண்டு நிறுவனமான, சமஸ்கிருத பாரதியில், 'ஆன்லைன்' வாயிலாக பேச கற்று வருகிறேன்!
ஏ.விஜயராகவன்
சமூக ஆர்வலர்
தொடர்புக்கு:
இ - மெயில்: av.raghavan8@gmail.com
மொபைல்: 99402 69209