இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 12, 2021 | Added : ஏப் 12, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் இரு இடங்களில், பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள செம்தானில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை
today, crime, round up, இன்றைய கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்



பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் இரு இடங்களில், பாதுகாப்பு படையினருடன் நேற்று நடந்த துப்பாக்கிச்சண்டையில், நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள செம்தானில், பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதை அறிந்த பாதுகாப்பு படையினர், நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியை சுற்றி வளைத்தனர்.இரு தரப்பினருக்கும் இடையே தொடங்கிய துப்பாக்கிச்சண்டை, தொடர்ந்து வருகிறது. இதில், நேற்று காலை இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இவர்கள், சமீபத்தில் பிஜ்பெஹாரா பகுதியில் உள்ள கோரிவானில், வீட்டிற்கு வெளியே ராணுவ ஹவில்தார் முகமது சலீம் கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என, போலீசார் கூறினர்.அதேபோல், ஷோபியன் மாவட்டத்தில் உள்ள ஹதிபோரா பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று நடத்திய தாக்குதலில், இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

போலீஸ் அதிகாரி கைது

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பையில், 'ரிலையன்ஸ்' அதிபர் முகேஷ் அம்பானி வீட்டருகே, வெடிகுண்டு கார் நிறுத்தப்பட்ட வழக்கை விசாரிக்கும், என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு பிரிவினர், போலீஸ் எஸ்.ஐ., சச்சின் வாஸேவை ஏற்கனவே கைது செய்தனர். இந்நிலையில், குற்ற வழக்கில் அவருக்கு உதவியதாக, மற்றொரு, எஸ்.ஐ., ரியாஸ் காசியை, நேற்று கைது செய்தனர்.

விபத்தில் சிக்கிய ஹெலிகாப்டர்

கொச்சி: கேரளாவின் கொச்சியில், வெளிநாடு வாழ் இந்திய தொழிலதிபர் யூசுப் அலி, அவரது மனைவி, மூன்று பணியாளர்கள் ஆகியோர், நேற்று பயணித்த ஹெலிகாப்டர், திடீரென பழுதானதால், சதுப்பு நிலத்தில் அவசரமாக தரை இறக்கப்பட்டது; இதையடுத்து விபத்து தவிர்க்கப்பட்டது. காயமடைந்த இரு பைலட்கள் உட்பட ஏழு பேரும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் கூறினர்.

போலீசார் சுட்டுக்கொலை

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டம் கோட்டி பகுதியில், நேற்று முன்தினம் இரவு, இரு வாகனங்களில் வந்த போதைப்பொருள் கடத்தல்காரர்கள், ரோந்து பணியில் இருந்த போலீசார் மீது, துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஒமர் ராய்கா மற்றும் பவன் சவுத்ரி ஆகியோர் பலியாயினர்'; தப்பிய குற்றவாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

மனைவிக்கு கத்தி குத்து

புதுடில்லி: டில்லி புத்த விஹார் பகுதியில் உள்ள சந்தையில், பொதுமக்கள் முன்னிலையில், 26 வயது மனைவியை, அவரது கணவர், 25 முறை கத்தியால் குத்திக்கொலை செய்தார். மனைவிக்கு கள்ளத்தொடர்பு உள்ளது என்ற சந்தேகத்தில் கொலை செய்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.

2 குழந்தைகள் பலி

கிரேட்டர் நொய்டா: டில்லியை ஒட்டியுள்ள உத்தர பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவின் பஹ்லோல்புர் கிராமத்தில், நேற்று ஏற்பட்ட தீவிபத்தில், இரண்டு குழந்தைகள் பலியாயினர். அங்குள்ள குடிசைப் பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், 150க்கும் மேற்பட்ட குடிசைகள் சேதமடைந்தன.


தமிழக நிகழ்வுகள்

நாய் குரைத்ததால் தகராறு மாணவருக்கு அடி, உதை

மாதவரம் : வளர்ப்பு நாயை, நடைபயிற்சிக்கு அழைத்து சென்றபோது ஏற்பட்ட தகராறில், வாலிபர் தாக்கப்பட்டார்.

சென்னை மாதவரம், பொன்னியம்மன்மேடு, ஏழுமலை நகரை சேர்ந்தவர் ஸ்ரீராம், 25. இவர், தன் வீட்டில் வளர்க்கும் நாயை, நேற்று முன்தினம் இரவு, நடைபயிற்சிக்கு அழைத்து சென்றார்.அப்போது, எதிரில் வந்த இருவரை கண்டு, நாய் குரைத்தது. இதனால், அவர்கள், ஸ்ரீராமிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.அப்போது, அவரது தம்பி ஸ்ரீவஸ்தன், 20, அண்ணனுக்கு ஆதரவாக, அவர்களை தட்டிக்கேட்டார்.இதையடுத்து, அவர்கள் அங்கிருந்து சென்று, மேலும், 10 பேரை அழைத்து வந்து, சம்பவ இடத்தில் இருந்த, ஸ்ரீவஸ்தனை சரமாரியாக தாக்கினர். அதில், அவர் பலத்த காயமடைந்தார். இது குறித்து, மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர். ஸ்ரீவஸ்தன், காட்டாங்கொளத்துாரில் உள்ள, தனியார் கல்லுாரியில், பி.பி.ஏ., 3ம் ஆண்டு படித்து வருகிறார்.

பெண்ணை காதலிப்பதில் தகராறு வாலிபரை வெட்டிய கும்பல் கைது

கொடுங்கையூர் : பெண்ணை காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில், சமரசம் பேச அழைத்து, வாலிபரை வெட்டிய கும்பலை, போலீசார் கைது செய்தனர்.

சென்னை, கொடுங்கையூர், சின்னாண்டி மடத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ், 20. அதே பகுதி, திருவள்ளுவர் நகர், காளிகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆகாஷ், 21. இருவரும், அதே பகுதியிலுள்ள ஒரு பெண்ணை, ஒருதலையாக காதலித்தனர். அந்த பெண்ணை காதலிப்பதில், இருவருக்குள் பிரச்னை ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பெண்ணை யார் காதலிப்பது என, சமரசம் பேசி முடிவெடுக்கலாம் என, ஆகாஷ் கூற, கொடுங்கையூர் விவேகானந்தா நகருக்கு, விக்னேஷ் தன் நண்பர்கள் ராமன், சுனில் உள்ளிட்ட மூவருடன் சென்றுள்ளார்.அப்போது ஆகாஷ், அவரது நண்பர்களான, கொடுங்கையூரைச் சேர்ந்த நவீன்குமார், 19; வியாசர்பாடி, எஸ்.எம்.நகரைச் சேர்ந்த புருஷோத்தமன், 19; கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகரைச் சேர்ந்த சூர்யா, 19 ஆகியோருடன் வந்துள்ளார்.அங்கு, இரு தரப்பினருக்கும் இடையே, தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அரிவாளால், ஆகாஷின் நண்பர்கள், விக்னேஷை, தலை, கைகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர்.அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த விக்னேஷை, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.இது குறித்து, கொடுங்கையூர் போலீசார், நேற்று வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் மற்றும் அவரது நண்பர்களான சூர்யா, நவீன்குமார், புருஷோத்தமன் ஆகியோரை கைது செய்தனர்.


latest tamil news


சாலை விபத்தில் வாலிபர் பலி
பரங்கிமலை : கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம், தெருவிளக்கு கம்பத்தில் மோதியதில், தனியார் நிறுவன ஊழியர் பலியானார்.

சிதம்பரம் மாவட்டம், செல்வகணபதி நகரை சேர்ந்தவர் மணிவண்ணன், 32. சென்னை, கெருகம்பாக்கத்தில் தங்கி, வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிந்தார்.நேற்று முன்தினம் இரவு, பணி முடித்து இருசக்கர வாகனத்தில், வீடு நோக்கி புறப்பட்டார். நந்தம்பாக்கம் சிக்னல் அருகே செல்லும்போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம், தெருவிளக்கு கம்பத்தில் மோதியது.இதில், தலையில் பலத்த காயமடைந்த மணிவண்ணன், சம்பவ இடத்திலேயே பலியானார். பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமி கடத்தல் சிறுவனுக்கு வலை

புதுச்சத்திரம் : சிறுமியை கடத்திச் சென்ற சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், புதுச்சத்திரம் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி கடந்த 8ம் தேதி பெரியப்பட்டில் உள்ள வங்கிக்கு சென்றார்.

வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. தனது மகளை சேத்தியாத்தோப்பு, மருவாய் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் கடத்திச் சென்றதாக அவர் மீது சிறுமியின் தந்தை புகார் செய்தார். புதுச்சத்திரம் போலீசார் வழக்குப் பதிந்து சிறுவனை தேடி வருகின்றனர்.


latest tamil news


சிறுமி பலாத்காரம் 4 பேரிடம் விசாரணை
கடலுார் : சிறுமியை மிரட்டி 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த நான்கு வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கடலுார், கே.என்.பேட்டையைச் சேர்ந்த 2 வாலிபர்கள், திருவந்திபுரம் வாலிபர்கள் இருவர் என நான்கு பேர், 15 வயது சிறுமியை 6 மாதங்களாக மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர். இதனால், சிறுமியின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.சிறுமி நடந்த சம்பவத்தை உறவினரிடம் கூறினார். அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 9ம் தேதி புகார் செய்தார். போலீசார், 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து நான்கு வாலிபர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

சாராயம் விற்றவர் கைது 110 லிட்டர் சாராயம் பறிமுதல்

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சாராயம் விற்றவரை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து 110 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் ஊறலை பறிமுதல் செய்தனர்.

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில் வினாயகம் தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் திருமால் சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தில் சாராய சோதனை மேற்கொண்டார்.அப்போது விரியூர் காட்டு கொட்டாயில் சாராயம் விற்ற விரியூரை சேர்ந்த ராயப்பன் மகன் ஞானபிரசாத் 27 என்பவரை கைது செய்து 2 லாரி டியூப்களில் வைத்திருந்த 110 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊறலை போலீசார் பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து ஞானபிரசாத்தை கைது செய்தனர்.

விஷ வண்டு கொட்டி முதியவர் சாவு
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே விஷ வண்டு கொட்டி முதியவர் இறந்தார்.

பரங்கிப்பேட்டை அடுத்த கரிக்குப்பம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் கலியன், 80; இவர், நேற்று முன்தினம் மாடுகளை ஓட்டிச்சென்று அதே பகுதியில் உள்ள வயலில் மேய்துக் கொண்டிருந்தார். அப்போது, மரத்தில் இருந்த விஷ வண்டு, கலியனை கொட்டியதில், மயக்கமடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.

கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு

ரிஷிவந்தியம் : எடுத்தனுாரில் கிணற்றில் விழுந்த பசுமாட்டினை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் கண்ணன். இவர், தனது பசுமாட்டினை மேய்ச்சலுக்காக விளைநிலத்தில் நேற்று முன்தினம் இரவு கட்டியுள்ளார். அப்போது மாடு தவறி, 50 அடி ஆழமுள்ள விளைநில கிணற்றில் இரவு 9.30 மணியளவில் விழுந்தது. மாட்டின் சத்தத்தை கேட்டு பொதுமக்கள் திரண்டு மீட்க முயற்சித்தனர். தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, இரவு 11 மணியளவில் மாட்டினை உயிருடன் மீட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X