போலீஸ் கமிஷனர் போட்ட 'குண்டு' : பலருக்கு ‛அவிழ்ந்தது துண்டு'

Updated : ஏப் 13, 2021 | Added : ஏப் 13, 2021
Share
Advertisement
முகத்தில் 'மாஸ்க்' சகிதமாக, நகர் வலம் புறப்பட்டாள் சித்ரா. ஓடிச் சென்று பின் இருக்கையில், அமர்ந்து கொண்ட மித்ரா, ''போலீஸ் கமிஷனரின் 'பேஸ் புக்' பதிவை பார்த்து, போலீஸ் வட்டாரமே, கதிகலங்கி இருக்காமே,'' என, கொக்கி போட்டாள்.''யெஸ், மித்து! அந்த பதிவை நானும் பார்த்தேன். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தாரு. 'பல ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரமிக்க, ஒரே பதவியில்
 போலீஸ் கமிஷனர் போட்ட 'குண்டு' : பலருக்கு ‛அவிழ்ந்தது துண்டு'

முகத்தில் 'மாஸ்க்' சகிதமாக, நகர் வலம் புறப்பட்டாள் சித்ரா. ஓடிச் சென்று பின் இருக்கையில், அமர்ந்து கொண்ட மித்ரா, ''போலீஸ் கமிஷனரின் 'பேஸ் புக்' பதிவை பார்த்து, போலீஸ் வட்டாரமே, கதிகலங்கி இருக்காமே,'' என, கொக்கி போட்டாள்.

''யெஸ், மித்து! அந்த பதிவை நானும் பார்த்தேன். கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தாரு. 'பல ஆண்டுகள் தொடர்ந்து அதிகாரமிக்க, ஒரே பதவியில் இருந்தால் ஆணவமும் அராஜகமும் அதிகரிக்கிறது. அதிகார மமதையில் அநாகரீகமான பழக்க வழக்கம் வளர்கிறது...' என்ற ரீதியில், அவரது பதிவு நீள்கிறது,''

''ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி, ஒரே பதவியில், ரொம்ப வருஷமா குப்பை கொட்டிட்டு இருக்கற சில போலீஸ் அதிகாரிகளைத்தான் சொல்றாருன்னு ஒரு தரப்பும்; இல்ல... இல்ல... ஆளுங்கட்சியைத்தான் சொல்றாருன்னு மறு தரப்பும், பீதியில பட்டிமன்ற விவாதமே நடத்திட்டு இருக்காம்...'' என்றாள் சித்ரா.

''ஆமா, புது கமிஷனர் வந்ததுல இருந்து, உளவுத்துறை அதிகாரி 'அப்செட்'டுல இருக்காராமே,''

'உளவுத்துறையில இருந்து கொடுக்கற, 'ரிப்போர்ட்' எதுவுமே சரியா இருக்கறதில்லையாம். அதனால, ஸ்பெஷலா, ரகசிய டீம் நியமிச்சிருக்காரு. பொதுமக்கள் சொல்ற புகார் உண்மையான்னு விசாரிச்சு, சொல்லச் சொல்றாரு. உண்மையா இருந்தா, அதிரடி நடவடிக்கை எடுக்குறாரு,''

''போலீஸ் தரப்புல தப்பு செஞ்சிருந்தா, கட்டுப்பாட்டு அறைக்கோ, ஆயுதப்படைக்கோ அனுப்பிடுறாரு. வாட்ஸ்அப் குழுக்களில், புகைப்படங்களை 'அப்டேட்' செய்யக் கூடாதுன்னு உத்தரவு போட்டிருக்காராம். மாநகர போலீஸ்காரங்க, பயந்து போயி, சுத்திட்டு இருக்காங்களாம்,''

''அக்கா, யாரோ, கமிஷனரை பத்தி, உங்கள்ட்ட ரொம்பவே அதிகமா, சொல்லியிருக்காங்கன்னு நினைக்கிறேன். போலீஸ் கமிஷனர் ஆபீஸ் பக்கத்துலதான், வ.உ.சி., பூங்கா இருக்கு. அந்த ஏரியா முழுக்க ஏகப்பட்ட ஆக்கிரமிப்பு கடைகள் இருக்கு. நடந்து போக முடியாத அளவுக்கு, ரோட்டுலேயே சேர் போட்டு, ஓட்டல் நடத்துறாங்க. ரோந்து போற போலீஸ்காரங்க கண்டுக்கறதில்லை,''

''மாஜி கவுன்சிலர் ஒருத்தரு, ஒவ்வொரு கடையிலும் மாமூல் வாங்குறதுக்கு ஆள் நியமிச்சிருக்காராம். அதே ஆளுங்க, போலீஸ் மாமூல் வாங்கி, பட்டுவாடா செஞ்சிடுவாங்களாம்,''உக்கடம் பஸ் ஸ்டாண்ட்டை கடந்து, பிரகாசம் பஸ் ஸ்டாப் சிக்னலில் ஸ்கூட்டரை நிறுத்திய சித்ரா,

''ஆமா, மித்து, நீ சொல்றதும் சரி தான். ரெண்டு நாளைக்கு முன்னாடி, பி1 போலீஸ் ஸ்டேஷன் ஸ்டாப்புல, எஸ்4 பஸ்சுல, ஒரு லேடி ஏறி உட்கார்ந்தாங்க. அவரது கைப்பையும், மொபைல் போனையும் பறித்த ஒரு இளைஞன், அடுத்த ஸ்டாப்புல இறங்கி, எஸ்கேப் ஆகிட்டான். அந்த லேடியும் அவனை விரட்டிட்டு ஓடுனாங்க; பிடிக்க முடியலை. கைப்பையில், 10 ஆயிரம் ரூபாய் இருந்துச்சாம். பி1 ஸ்டேஷனுக்கு போயி, கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க,''

''அப்புறம், என்னாச்சு, திருடனை பிடிச்சிட்டாங்களா,''கிரீன் சிக்னல் விழுந்ததும், ஸ்கூட்டரை 'மூவ்' செய்த சித்ரா, ''மித்து, பொறு! கமிஷனர் போட்ட 'டுவிட்'டுக்கு, அங்கதான் பதில் கிடைச்சது. அந்த லேடியை விசாரிச்ச போலீஸ்காரங்க, 'கட்டையா, கருப்பா, குண்டா இருந்தானா'ன்னு கேட்டாங்க.

அந்த லேடியும், 'ஆமாங்க' எனச் சொல்ல, 'பணமெல்லாம் திரும்ப கெடைக்காது; மொபைல் போன் கிடைக்கறதுக்கு முயற்சி பண்ணலாம்'னு, அப்பவே, தீர்ப்பைச் சொல்லிட்டாங்க. அந்த லேடி, மனசு நொந்து போயிட்டாங்க,''

''அப்போ, அந்த திருடனை போலீஸ்காரங்களுக்கு நல்லாவே தெரியும்னு சொல்லுங்க,''

''காவல்துறையில இருக்கற கருப்பு ஆடுகளை பத்தி தெரிஞ்சதுனாலதானே, கமிஷனரே, அப்படி, 'டுவிட்' போட்டிருக்காரு,''

''அப்போ, சிட்டி முழுக்க இருக்கற போலீஸ்காரங்கள களையெடுக்கணும்,''

''அதெல்லாம், தேவையில்லை மித்து! பொதுமக்கள் பிரச்னைக்கு தீர்வு ஏற்படுத்தாம, 'கல்லா' கட்டுற போலீஸ்காரங்களை, 'டின்னு' கட்டுனா போதும்,'' என்ற சித்ரா, ''புதுசா வந்திருக்கிற கலெக்டர், எப்படி இருக்காரு,'' என, கேட்டபடி, கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள்.

''அக்கா, புது அரசாங்கம் அமைஞ்சதும் எப்படியும் மாத்திடுவாங்கன்னு நினைக்கிறாரு. அதனால, ஓட்டு எண்ணிக்கையை பிரச்னையில்லாம முடிக்கணும்னு நெனைக்கிறாரு,''

''செங்கல் சூளை சங்கத்துக்காரங்க, அவரை பார்த்தாங்களாமே,''

''எங்க தொழிலுக்கு உதவி பண்ணுங்கன்னு செங்கல் சூளைக்காரங்க கேட்டாங்க. அதுக்கு, 'கேஸ், ஐகோர்ட்டுல இருக்கு; நான் முடிவு செய்றதுக்கு எதுவும் கிடையாது. எதுவா இருந்தாலும் ஐகோர்ட் முடிவு செய்யும்னு, உறுதியா சொல்லிட்டாராம்,''

''இருந்தாலும், விடாப்பிடியா, 'ஸ்டாக்' வெச்சுருக்கிற செங்கலை மட்டும் விக்கிறதுக்கு 'பர்மிஷன்' கொடுக்கணும்னு கேட்டாங்க. உஷாரான கலெக்டர், 'எதுவா இருந்தாலும், எந்த உத்தரவும் போட முடியாது. ஐகோர்ட்டுல வழக்கு நடக்குது. உங்களுக்கு என்னவெல்லாம் வேணுமோ; அதையெல்லாம் கேட்டு, மனு தாக்கல் பண்ணுங்க. அனுமதி கொடுத்தா, எடுத்துக்கோங்க'ன்னு கறாரா சொல்லிட்டாரு,''

''இதேமாதிரி, சிவகங்கை, மானாமதுரை பக்கத்துல இருந்து, செங்கல் சூளைகளுக்கு விறகு சப்ளை செய்யவறங்க தரப்புல இருந்து, சூளையை மூடினதாலே, எங்க பொழப்பே போச்சுன்னு மனு கொடுத்திருக்காங்களாம்,'' என்ற மித்ரா,

''ஓட்டு எண்ணுறதுக்கு ரெடி பண்ணிட்டாங்களா,'' என, சப்ஜெக்ட் மாறினாள்.

''மித்து, ஒவ்வொரு தொகுதிக்கும் டேபிள் போடுற வேலை நடந்துட்டு இருக்கு; பம்பரமா வேலை பார்க்குற ஊழியர்கள் 'லிஸ்ட்' தயார் செஞ்சிட்டு இருக்காங்க,''

''வேளச்சேரியில நடந்த மாதிரி, ரெண்டு மெஷினை பைக்குல எடுத்துட்டு வந்தாங்களாமே,''

''அதுவா, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட்டுல, மாதிரி ஓட்டுப்பதிவு நடத்துறதுக்கு பயன்படுத்துன, 'பேலட் யூனிட்'டுகளை, கார்ப்பரேஷன் ஆபீஸ்ல வச்சிருந்தாங்க. விவரம் தெரியாம, அதை துாக்கிட்டு வந்துட்டாங்க,''

''விஷயத்தை முழுசா உள்வாங்காம, ரெண்டு மெஷினை கார்ப்பரேஷன் வண்டி விட்டுட்டு வந்துட்டதாவும், ரெண்டு பேரு எடுத்துட்டு வந்திருக்கிறதாவும், மைக்குல சொன்னதும், கார்ப்பரேஷன் ஆபீசர்ஸ் ஆடிப்போயிட்டாங்க.பதறியடிச்சு, நுழைவாயிலுக்கு வந்து, விசாரிச்சப்போ, மாதிரி ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்துன, 'பேலட் யூனிட்' மெஷின்னு தெரிஞ்சது. பெருமூச்சு விட்ட அதிகாரிகள், சிங்காநல்லுார் தொகுதிக்கான ஓட்டுச்சாவடி பொருட்கள் ஸ்டாக் வச்ச அறையில வச்சு, 'சீல்' வச்சிட்டாங்க,'' என்றபடி, ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்தாள் சித்ரா.

அவர்களை கடந்து சென்ற, கல்வித்துறை ஜீப்பை பார்த்த மித்ரா, ''லஞ்ச ஒழிப்புத்துறை புகாருல சிக்குன, கல்வித்துறை அதிகாரியை மாத்திட்டாங்க, பார்த்தீங்களா,'' என, வம்புக்கு இழுத்தாள்.

''அதுவா, தியாகி பெயரோட செயல்படுற பள்ளி தலைமை ஆசிரியர் மேல, நில அபகரிப்பு புகார் இருக்குதாம். இந்த விவகாரத்துல, கல்வித்துறை அதிகாரிக்கும், தலைமை ஆசிரியருக்கும் ரொம்ப நாளா லடாய் இருந்துருக்கு.''தலைமை ஆசிரியருக்கு, ஆளுங்கட்சி வி.ஐ.பி., சகோதரரிடம் பழக்கம் இருக்கறதுனால, எலக்சன் முடிஞ்சதும் மாத்திட்டதா பேசிக்கிறாங்க,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X