பொது செய்தி

தமிழ்நாடு

உண்மை சொன்ன அறிக்கை: உறுதியாக எடுக்கப்படுமா நடவடிக்கை?

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
அதற்குப் பின் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆளும்கட்சி தலையிட்டது; அதிகாரிகள் அமைதியாயினர். இரவில் மண் அள்ளும் பணிதுவங்கியது. பின்பகலிலும் பகிரங்கமாக சூளைகள் இயங்க ஆரம்பித்தன. இப்போது 625 டிப்பர் லாரிகள்தலா 5 யூனிட் மண் வீதம் 14 நடைகள் அதாவது தினமும் 8400 டிரிப் மண் கொள்ளை நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் தருகிறார்கள் சூளைகளுக்கு எதிராக
உண்மை சொன்ன அறிக்கை: உறுதியாக எடுக்கப்படுமா நடவடிக்கை?

அதற்குப் பின் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்களே யூகித்திருப்பீர்கள். ஆளும்கட்சி தலையிட்டது; அதிகாரிகள் அமைதியாயினர். இரவில் மண் அள்ளும் பணிதுவங்கியது. பின்பகலிலும் பகிரங்கமாக சூளைகள் இயங்க ஆரம்பித்தன. இப்போது 625 டிப்பர் லாரிகள்தலா 5 யூனிட் மண் வீதம் 14 நடைகள் அதாவது தினமும் 8400 டிரிப் மண் கொள்ளை நடந்திருப்பதாக அதிர்ச்சித் தகவல் தருகிறார்கள் சூளைகளுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்கள்.

கடந்த ஆண்டில் ஐகோர்ட் உத்தரவின் பேரில்தான், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒரு சிறப்புக்குழு அமைத்து இந்த செங்கல் சூளைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ராமநாதபுரம், நாகை, ஓசூர் மற்றும் மதுரை சூழல் பொறியாளர்கள்கிருஷ்ணபாபு, திலீப் குமார், ரவிச்சந்திரன் மற்றும் விஜய பாஸ்கரன் ஆகிய நான்கு பேர் இணைந்து இங்கு ஆய்வு செய்து 99 பக்கத்துக்கு விரிவான அறிக்கையைக் கொடுத்திருந்தனர். அந்த ஓர் அறிக்கையே, இங்குள்ள செங்கல் சூளைகளின் அத்தனை அத்துமீறல்களையும் அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளன. அந்த அறிக்கையும் இவற்றை மூடி முத்திரையிட வேண்டுமென்றுதான் பரிந்துரை செய்திருந்தது. இந்த அறிக்கை மட்டுமின்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இங்குள்ள பலராலும் வாங்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்துமே இவை சட்டவிரோதமாக இயங்கியதை உறுதி செய்கின்றன.


latest tamil news




இறுதியாய் கிடைத்தது வெற்றி!


ஆனால் இந்த சூளைகளை மூடிமுத்திரையிட வேண்டிய பொறுப்பிலுள்ள மாவட்ட நிர்வாகம், ஆளும்கட்சியின் தலையீட்டால் அந்தப் பொறுப்பைத் தட்டிக் கழித்து வந்தது. செங்கல் சூளைகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் ஐந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், கடந்த மார்ச் 9 அன்று, இதேகோரிக்கைக்காக செஞ்சிலுவைச் சங்கம் முன்பாக ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதற்குப் பின்பே செங்கல் சூளைகள் அனைத்துக்கும் சீல் வைக்கப்பட்டது. மண் லாரிகளின் ஓட்டம் நிறுத்தப்பட்டுள்ளது.


latest tamil news


Advertisement

இந்த செங்கல் சூளைகள் இயங்காவிட்டால், ஏதோ தமிழகத்தின் ஒட்டு மொத்த கட்டுமானத் துறையும் ஸ்தம்பித்து விடுவதைப் போல ஒரு மாயையை ஏற்படுத்தும் முயற்சியும் துவங்கியுள்ளது. பற்றாக்குறைக்கு தேர்தல் பிரசாரத்தின்போது,முதல்வர் பழனிசாமியும், தி.மு.க., தலைவர் ஸ்டாலினும் 'இந்த சூளைகளை மீண்டும் திறக்க சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்' என்று உறுதி கூறியுள்ளனர். இதற்காக முக்கியக் கட்சிகளுக்கு பெரும் தொகை கை மாறியிருப்பதாகவும் தகவல்கள் பரவியுள்ளன.


latest tamil news



இது ஒரு புறமிருக்க, பெரும்பாலான கட்டுமான நிறுவனங்கள், இப்போது இந்த செங்கல்களுக்குப் பதிலாக பிளை ஆஷ், ஏ.ஏ.சி., மற்றும் சாலிட் பிளாக் போன்ற மாற்று வழிகளுக்குத் தயாராகிவிட்டன. ஆற்று மணல் கொள்ளையைத் தடுக்க போராடியபோதும் இதேபோன்று முயற்சிகள் நடந்தன. ஆனால் இப்போது எம்.சேண்ட், பி. சேண்ட் என்று மாற்று வழிகள் வந்து விட்டன.

அதேபோன்று இதற்கும் மாற்று வழிகளைக் கண்டறிய வேண்டும். இயற்கையைக் காக்க மக்களும் இதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதை விடுத்து இந்த செங்கல் சூளைகளை மீண்டும் இயங்க அனுமதித்தால், கோவை மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரங்களை அறுத்துக் கூறு போடும் வேலைகள் அமோகமாக நடக்கும். இப்போதே கோவையில் தொண்டாமுத்துார், பாலமலை உள்ளிட்ட வேறு சில மலையடிவாரப் பகுதிகளிலும் மண் அள்ளும் வேலை துவங்கியுள்ளது.


முதலில் கைது ... அப்புறம் சொத்து பறிமுதல்!


பணத்திற்காக இயற்கையை அழிக்கும் செங்கல் சூளைக்காரர்களை விட, முதலில் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் இவற்றை வளர்த்து விடும் அதிகாரிகளே. இந்த கிராமங்களில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர் துவங்கி, வருவாய்த்துறை, கனிம வளத்துறை, மின் வாரியம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், போக்குவரத்துத்துறை என இந்த அத்துமீறல்களுக்குக் காரணமான அனைத்து அதிகாரிகளும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இதற்குப் பொறுப்பான ஒரேயொரு அதிகாரியையாவது கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். வரைமுறையின்றி கனிம வளத்தைக் கொள்ளையடித்தவர்கள், துணை போன அதிகாரிகள், அரசியல்வாதிகள் அனைவருடைய சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்கப் போவது எந்த அரசாக இருந்தாலும், தடாகம் பள்ளத்தாக்கில் நடக்கும் கனிம வளக்கொள்ளைக்கு நிரந்தரமான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லாவிட்டால், எதிர்காலத்தில் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் முழுவதும் செங்கல் சூளைகள் மட்டும்தான் இருக்கும். சோலைகள் அழியும்; ஆறுகள் மடியும். இறுதியாய் தமிழகமே பாலை வனமாகும்!!


3 ரூபாய்

ஒரு செங்கல் தயாரிப்புச் செலவு


7 ரூபாய்

சந்தையில் ஒரு செங்கல் விலை


3000

ஒரு லாரியில் ஏற்றப்படும் செங்கல்கள் எண்ணிக்கை


625

தடாகம் பகுதியில் மண் அள்ளுவதற்குப் பயன்படுத்தப்படும் டிப்பர் லாரிகளின் எண்ணிக்கை


14

தலா 5 யூனிட் மண் வீதம் தினமும் ஒரு டிப்பர் லாரி அடிக்கும் டிரிப் எண்ணிக்கை


8400

கனிம வளபாதுகாப்புக்குழுவினரின் கணக்குப்படி, தடாகம் பள்ளத்தாக்கில் மண் அள்ளும் லாரிகள் ஒரு நாள் அடிக்கும் டிரிப்களின் எண்ணிக்கை.


''மீண்டும் செயல்பட உதவ வேண்டும்!''


''செங்கல் சூளைகளால் இந்த பகுதியில் புழுதி மாசு அதிகமாக இருக்கிறது என்பதுதான் முக்கியப் புகார். சூளைகளில் புழுதி கிளம்புவதைத் தடுக்க கற்கள் பதிக்கவும், செங்கல் அடுக்கும் இடங்களை மறைவாக அமைக்கவும் தயாராகவுள்ளோம். இது போல அரசு சொல்கின்ற எல்லா விதிமுறைக்கேற்ப எங்களுடைய தொழிலில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்கிறோம். எனவே நீதிமன்றமும், மாவட்டநிர்வாகமும் எங்கள் கோரிக்கையைப் பரிசீலித்து சூளைகள் மீண்டும் செயல்பட உதவ வேண்டும்!''


latest tamil news



மயில்சாமி,
செயற்குழு உறுப்பினர்,
கோவை மாவட்ட செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம்.


''அத்துமீறல் மீண்டும் அரங்கேறும்!''


''மலையிட பாதுகாப்புக்குழும (ஹாகா) பகுதிகளில் கனரக வாகனங்கள் பயன்படுத்தக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. ஆனால் 24 மணி நேரமும் இங்கே கனரக வாகனங்கள் இயங்குகின்றன.குடியிருப்பிலிருந்து எவ்வளவு துாரத்தில் சூளைகள் இருக்க வேண்டும், இரண்டு சூளைகளுக்கு இடையில் எவ்வளவு இடைவெளி இருக்க வேண்டும் என்பது குறித்து நீதிமன்றம் சொன்ன எந்த உத்தரவையும் இங்கே யாருமே கடைபிடிப்பதில்லை. மீண்டும் இயங்க அனுமதித்தால் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் அத்தனை அத்துமீறலும் மீண்டும் நடக்குமென்பது நிச்சயம்!'


latest tamil news



-மாணிக்கராஜ்,
முன்னாள் கிராம ஊராட்சி உறுப்பினர்,
மனுதாரர்களில் ஒருவர்.



''எல்லா மண்ணும் நாங்கள் எடுப்பதில்லை!''


''ஒரு சிலர் அதீதமாக மண் எடுப்பது உண்மைதான். ஆனால் மண் எடுக்கும் எல்லோருமே செங்கல் சூளைக்குதான் எடுக்கின்றனர் என்பதை எங்களால் ஏற்க இயலாது. ஒரு சூளை மாதத்துக்கு இவ்வளவு லோடுதான் எடுக்கவேண்டுமென்று சொன்னால் அதன்படி எங்களை மாற்றிக் கொள்வோம். கோடிக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து இந்தத் தொழிலைச் செய்கிறோம். சூழலை அழித்து, சமூகத்துக்கு எதிராக இந்தத் தொழிலைச் செய்யும் எண்ணம் எங்களுக்கு இல்லை.கனிம வளத்துறை, வருவாய்த்துறை, மாசு கட்டுப்பட்டு விதிகளுக்கு உட்பட்டு, சூளைகளை நடத்தத் தயாராகஉள்ளோம். எல்லா நிபந்தனைகளையும் ஏற்று அதற்கேற்ப சூளைகளை மாற்றியமைக்கிறோம். முன்பு சிம்னிகளின் உயரத்தை அதிகரிக்கச் சொன்னதால், 90 அடி வரை அதை உயர்த்தினோம். இத்தொழிலில் நேரடியாகவும், மறைமுகமாகவும் பல ஆயிரம் பேர் பயனடைகின்றனர். அரசு ஒரு குழு அமைத்துவழிகாட்டுதல் நெறிமுறைகளை உருவாக்கினால் அதற்கேற்பச் செயல்படத் தயாராகவுள்ளோம் !''


latest tamil news



கவி சரவணன்,
செயலாளர்,
கோவை மாவட்ட செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கம்



இங்கே மட்டும் விநோத கூட்டணி!


தேர்தலில் எந்தக் கட்சியும், எந்தக் கூட்டணியிலும் சேரலாம். ஆனால் செங்கல் சூளைகளைப் பாதுகாப்பதில், அ.தி.மு.க., பாரதிய ஜனதா, தி.மு.க., அனைத்தும்ஒரே கூட்டணியில்தான் இருக்கின்றன. எந்தக் கட்சி ஆட்சிக்கு வருகிறதோ, அந்தக் கட்சியைச் சேர்ந்தவர், கோவை மாவட்ட செங்கல் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகி விடுவார். மற்றவர்கள் கவுரவத்தலைவர்களாகிவிடுவார்கள். அந்த வகையில், இப்போது அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தர்மராஜ், இந்த சங்கத்தின் தலைவராகவுள்ளார்.
பா.ஜ.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,சின்னராசு, தி.மு.க.,வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,சி.ஆர்.ராமச்சந்திரன், கவுரவத் தலைவர்களாகவுள்ளனர். இந்தத் தொகுதியின் பத்தாண்டு எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ஆறுக்குட்டியும், இந்த செங்கல் சூளைகளைப் பாதுகாப்பதில் மிகப்பெரிய பங்காற்றியிருக்கிறார். ஒவ்வொரு முறை அதிகாரிகள் இதற்காக முயற்சி எடுக்கும்போதும்இவர்கள் தங்கள் 'வீட்டோ பவரை' பயன் படுத்தி அதிகாரிகளை நடவடிக்கை எடுக்காமல் தடுத்து விடுவர்.
இதுகுறித்து இப்போது ஆறுக்குட்டியிடமும், ராமச்சந்திரனிடமும் கேட்டால், இருவரும் ''அதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லீங்க. அப்போ நான் எம்.எல்.ஏ.,வாக இருந்ததால எங்கிட்ட வந்தாங்க. இப்போ நான் என்ன செய்ய முடியும்...கோர்ட் உத்தரவுப்படி நடவடிக்கை எடுக்கட்டும்!'' என்று ஒரே மாதிரியான பதிலைக் கூறுகின்றனர். எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இவர்கள் இதில் தலையிடாமல் இருப்பார்களா என்பது சந்தேகமே.
-நமது நிருபர் குழு-

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
15-ஏப்-202117:13:05 IST Report Abuse
r.sundaram திமுகாவில் இருந்து பிறந்ததுதானே அதிமுக, வாசனை இல்லாமல் இருக்குமா? காமராஜர் சொன்னது, ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், உண்மைதானே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X