புதுடில்லி: டில்லியில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார். வெள்ளி இரவு 10:00 மணி முதல் திங்கள் காலை 6:00 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பல கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டில்லியில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் கெஜ்ரிவால் ஆலோசனை நடத்தினார். பின்னர் கவர்னர் அனில் பைஜாலையும் சந்தித்து பேசினார்.
பின்னர் அவர் கூறியதாவது:
அரசு மருத்துவமனை அல்லது தனியார் மருத்துவமனை என எங்கு கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்றாலும், அவர்களின் உயிரை காப்பது எங்களது கடமை. டில்லியில், படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏதுவும் இல்லை. தற்போது, 5 ஆயிரம் படுக்கைகள் கையிருப்பில் உள்ளது. மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால், வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்த முடிவு செய்துள்ளோம். வாரம் முழுவதும் பணி செய்துவிட்டு, கடைசி இரண்டு நாட்களில் ஓய்வு எடுக்கலாம். நோய் பரவல் சங்கிலியை உடைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தார்.

மேலும் அவர் கூறியதாவது:
*பொது இடங்களில் விதிகள் கடுமையாக கடைபிடிக்கப்படும்.
*அழகு நிலையங்கள், மால்கள், ஜிம்கள், ஆடிட்டோரியம் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
*ஊரடங்கு நாட்களில் திருமண நிகழ்ச்சிகளுக்கு பாஸ் வழங்கப்படும் .
*சினிமா தியேட்டர்களில் 30 சதவீத இருக்கை வசதி மட்டுமே அனுமதிக்கப்படும் .
*உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி கிடையாது. பார்சல் மட்டுமே அனுமதிக்கப்படும்.
* அத்தியாவசிய பணிகள் உள்ளவர்களுக்கு, ஊரடங்கு நேரத்தில் பணிபுரிய பாஸ் வழங்கப்படும்.
*ஒரு நாளில், ஒரு மண்டலத்தில் மட்டுமே மார்க்கெட்கள் செயல்பட அனுமதிக்கப்படும்.
இவ்வாறு முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்தார்.