கோல்கட்டா: மேற்குவங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்காக வெளியில் இருந்து ஆட்களை கூட்டிவந்து நோயைப் பரப்பிவிட்டு ஓடிப்போய்விட்டார்கள் என பா.ஜ.,வின் பெயரைக் குறிப்பிடாமல் திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார்.
மேற்குவங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. 5வது கட்ட தேர்தல் ஏப்.,17ல் நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வரும் திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி, பிரசாரம் மேற்கொண்டார். வடக்கு பெங்காலின் ஜல்பாய்குரி பகுதியில் அக்கட்சி வேட்பாளர் டாக்டர் பிரதீப் பர்மாவை ஆதரித்து மம்தா பிரசாரம் செய்தார். ஆனால், பிரதீப்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் பிரசார மேடையில் இடம்பெறவில்லை.

அப்போது மம்தா பேசியதாவது: மே.வங்கத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருந்தது. இப்போது மீண்டும் கொரோனா பரவுகிறது. யாருக்கு வேண்டுமானாலும் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தொற்று ஏற்படலாம். கடந்த முறை கொரோனா பரவல் ஏற்பட்டபோது நீங்கள் அனைவரும் (பா.ஜ.,) எங்கிருந்தீர்கள்? தேர்தல் அறிவித்தவுடன் பிரசாரத்துக்காக வெளியிலிருந்து ஆட்களைக் கூட்டிவந்துவிட்டு, கொரோனாவைப் பரப்பிவிட்டு ஓடிவிட்டீர்கள். அவர்கள் போகட்டும். மக்களே நீங்கள் எங்களுக்கு வாக்களியுங்கள். இந்திய அரசு தடுப்பூசியை எல்லா மக்களுக்கும் சரியான நேரத்தில் போட்டிருந்தால் இன்று நாட்டில் இரண்டாவது அலை ஏற்பட்டிருக்காது. இவ்வாறு அவர் பேசினார்.
மம்தாவின் இந்த பேச்சுக்கு பா.ஜ., தரப்பில் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இதற்கு மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பதிலளிக்கையில், ‛மம்தாவை பிரதமர் டிடி (வங்க மொழியில் அக்கா) என்றே அழைப்பார். ஆனால், அவரோ கொரோனா பரவலுக்கு மோடி, அமித்ஷாவைக் காரணமாகக் கூறியுள்ளார். இது எனக்கு அதிச்சியளிக்கிறது' என்றார்.