ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் உள்ள அரசு மருத்துவமனை ஒன்றில், மருந்து கிடங்கில் இருந்த 320 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் திருடுப்போயிருப்பது தெரியவந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சாஸ்திரி நகரில் கந்த்வாதியா அரசு மருத்துவமனை உள்ளது. அங்குள்ள மருந்து கிடங்கில் பொதுமக்களுக்கு பயன்படுத்தப்படும் கொரோனா தடுப்பூசிகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தது. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகள் 32 சிறிய புட்டிகள் (320 டோஸ்) மருந்து மாயமாகி இருந்ததை மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து, சாஸ்திரி நகர் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த திருட்டு சம்பவம், ஏப்.,12 (திங்கட்கிழமை) இரவு நடைபெற்றிருக்கலாம், ஆனால், நேற்று (ஏப்.,14) தான் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பெயர் தெரியாத மர்ம நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சாஸ்திரி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திலிப் சிங் தெரிவித்தார்.
இது குறித்து மாநில பா.ஜ., தலைவர் சதீஷ் பூனியா கூறுகையில், ‛இது மாநில அரசின் கவனக் குறைவால் நடைபெற்றுள்ள செயல். கொரோனா தடுப்பூசிகள் அரசு மருத்துவமனையில் இருந்து திருடுபோயிருப்பது மாநில சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் எந்த அளவிற்கு உள்ளது என்பதை காட்டுகிறது,' என்றார்.