
கண்களில் கரகரவென ஆனந்த கண்ணீர் பெருக அம்மா மீனாட்சியையும்,அப்பா சுந்தரேசுவரரையும் பக்தி பரவசத்துடன் பார்த்து மகிழும் பக்தர்கள் யாருமின்றி மதுரை சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.
மதுரையில் பிறக்கும் பெண் குழந்தைகள் பலருக்கும் மீனாட்சி என்றே பெயர் வைப்பர் அந்த அளவிற்கு மதுரை மக்களின் மனதோடு ஒன்றிப்போனவர் மீனாட்சி அம்மன்.

சித்திரை திருவிழா வருகிறது என்றால் அது இங்குள்ள ஒவ்வொருவர் வீட்டிலும் திருமண விழா போல களைகட்டிவிடும், தொடர்ந்து நடைபெறும் பதினைந்து நாட்களும் மதுரை பக்தியாலும் மகிழ்ச்சியாலும் ஆனந்த கூத்தாடும்.
அண்ணே திருவிழா வருதுண்ணே ஊருக்கு வாங்கண்ணே என்று வயது வித்தியாசம் பார்க்காமல் ஆணும் பெண்ணும் அன்போடு அயலாரை அழைக்கும் அந்த பாங்கே தனி.
விதம் விதமான வாகனங்களில் விதம் விதமான அலங்காரங்களில் மாசி வீதிகளில் வலம்வரும் மீனாட்சி-சுந்தரேசுவரரை தரிசிக்க மக்கள் குடும்பம் குடும்பமாக கூடியிருப்பர்.கொடியேற்றம் துவங்கி அழகர் ஆற்றில் இறங்குவது வரை ஒரே கொண்டாட்டம்தான்.திரும்பிய பக்கம் எல்லாம் இலவச நீர்மோர் பந்தல்தான்,அன்னதானம்,விசிறிதானம் என்று தானங்கள் பிரமாதப்படும்.
எல்லாம் கொரோனா காரணமாக கடந்த வருடம் கனவாகிப்போனது.
மாசிவீதியில் அம்மன் வரவில்லை அழகரும் ஆற்றில் இறங்கவில்லை
எல்லா விழாக்களும் கோயிலுக்குள் பக்தர்கள் இன்றி நடந்தது.
வெயிலின் அருமை நிழலில் தெரியும் என்பது போல பல நுாறு வருடங்களாக நடந்த இந்த திருவிழா ஒரு வருடம் மக்கள் மத்தியில் நடக்காமல் நின்று போன போதுதான் அதன் பெருமை தெரிந்தது நடக்காததால் ஏற்பட்ட வெறுமை புரிந்ததது. அந்த வருடம் முழுவதும் மக்கள் எதையோ இழந்தது போலவே இருந்தனர்.
எல்லாவற்றையும் ஈடு செய்யும் வகையில் 2021 ல் திருவிழாவினை பிரமாதப்படுத்திவிடுவோம் என்று எண்ணியிருந்த வேளையில் மாண்டு போனதாக நினைத்த கொரோனா மீண்டும் வந்து வதைத்துக் கொண்டிருக்கிறது.
இந்த வருடமும் சித்திரை திருவிழா பக்தர்கள் பங்களிப்பு இல்லாமல் கடந்த வருடம் போலவே கோவில் வளாகத்திற்குள்ளேயே நடக்கும் என்று அறிவித்துவிட்டனர். கண்ணில் நீர் பெருக தமுக்கத்தில் திரண்ட பக்தர்கள் பலர் மீனாட்சி அம்மா மாசி வீதியில் உலா வருவதை பார்க்கணும்,அழகரண்ணன் ஆற்றில் எழுந்தருணும் என்று குழந்தையைப் போல அழுதபடி கோரிக்கை வைத்தனர்.
அந்த பதினைந்து நாள்ல வெறும் சூடம் பூ விற்று வர்ர வருமானத்துல ஆறு மாதம் வாழ்ந்திருவோம்னே என்று அந்த பெண்கள் சொல்லும் போது இது வெறும் திருவிழா அல்ல பல ஆயிரம் பேர்களில் வாழ்வாதாரம் என்பதும் புரிகிறது.
ஆனால் அது கொடிய கொரோனாவிற்கு புரியவில்லையே
இதோ இன்று கடந்த வருடம் போல கோயில் வளாகத்தில் சம்பந்தப்பட்ட கோவில் பட்டர்கள்,அதிகாரிகள் என்று பத்து பதினைந்து பேர்களோடு கொடியேற்றம் நடந்து முடிந்துவிட்டது.அம்மா தாயே மீனாட்சி என்று பக்தி பரவசத்தோடு கொட்டும் முரசை மிஞ்சும் சப்தத்தோடு பக்தர்கள் குரல் பலமாக ஒலிக்கும் போது, ‛உன்னைப் பார்த்துவிட்டேன் எதற்கும் கவலைப்படாதே நானிருக்கிறேன் 'என்பது போல ஒரு குறுநகையோடு அம்மன் பக்தர்களை பார்ப்பாரே அந்த ஒரு கனம் சிலிர்த்துப் போவோம்,மெய் மறந்து போவோம்,அம்பாளோடு ஊறைந்து போவோம்,கண்ணீரோடு உடைந்து போவோம் அந்த அனுபவம் இந்த வருடமும் இல்லை எனும் போது இதயம் கனக்கிறது
திருக்கல்யாணம் போன்ற நிகழ்வுகளை நேரிடையாக பார்க்க அனுமதிக்கவிட்டாலும் நிகழ்வு முடிந்த பிறகு அலங்காரத்தோடு அம்பாளையும் சுந்தரேசுவரரையும் பக்தர்கள் பார்க்க குறிப்பிட்ட நேரத்தில் அனுமதிப்பதாக சொல்லியிருக்கின்றனர் பார்ப்போம் அதற்காவது கொடுப்பினை இருக்கிறதா என்று...
-எல்.முருகராஜ்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE