கோவை: கொரோனா இரண்டாவது அலை பரவும் வேகத்தை குறைக்கும் சக்தி, மாஸ்க்குக்கு மட்டும்தான் இருக்கிறது என, சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. எந்த மாஸ்க்கை அணிவது நல்லது, எப்படி அணிவது, என பலர் தெரியாததும், தொற்று பரவ ஒரு வகையில் காரணம். இது குறித்து, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் ரவிக்குமார் தெளிவாக விளக்குகிறார்.

பல விதமான மாஸ்க்குகள் உள்ளன. இதில் எது பாதுகாப்பானது?
துணி மாஸ்க், டிஸ்போசபிள் மாஸ்க், டிரிப்பிள் லேயர் மற்றும் என் 95 மாஸ்க் என, நான்கு வகைகள் உள்ளன. சாதாரணமாக வெளியில் செல்பவர்கள், துணி மாஸ்க் அணிந்து கொள்ளலாம். கூட்டமாக இருக்கும் பகுதிகள் அல்லது விசேஷங்களுக்கு செல்பவர்கள், மூன்று அடுக்கு மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டும். வாய், மூக்கு நன்றாக மூடி இருக்க வேண்டும். மாஸ்க் இல்லாமல் வெளியில் போகக்கூடாது. எப்போதும் கூடுதலாக ஒரு மாஸ்க்கை, பாக்கெட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
துணிமாஸ்க்கை துவைத்து, பயன்படுத்துவது பாதுகாப்பானதா?
துணி மாஸ்க்கை, பிளிச்சிங் பவுடர் கலந்த தண்ணீரில் ஊறவைத்து, சோப்பு போட்டு 'வாஷ்' செய்ய வேண்டும். குறைந்தபட்சம், 'வாஷிங் சோப்பால்' வாஷ் செய்தாலே போதும். நல்ல வெயிலில் காய வைத்து, இஸ்திரி போட்டு, மீண்டும் பயன்படுத்தலாம்.புதிய துணி மாஸ்க் வாங்கினால், அதை வாஷ் செய்துதான் அணிய வேண்டும். பயன்படுத்திய மாஸ்க்கை குப்பையில் போடும்போது, பிளீச்சிங் பவுடர் துாவி அல்லது சானிடைசர் தெளித்து, ஒரு கவரில் வைத்து தனியாக போட வேண்டும்.
மூன்றடுக்கு மாஸ்க் யார் அணிய வேண்டும்?
தொற்று இருப்பவர்கள், மூன்றடுக்கு மாஸ்க் அணிந்து கொண்டால், அவரிடமிருந்து மற்றவர்களுக்கு, 45 சதவீதம் நோய் பரவாது. இருவரும் அணியாமல் இருந்தால், 95 சதவீதம் தொற்று பரவ வாய்ப்பு உள்ளது.
இருவரும் மாஸ்க் போட்டு இருந்தால், நோய் பரவ வாய்ப்பு இல்லை.இன்று டாக்டர்கள் உட்பட பலர், இரண்டு மாஸ்க் அணிந்து கொள்கின்றனரே... அது அவசியமா?
இரண்டு மாஸ்க் அணிவது, ரொம்ப நல்லது. மூக்கும் வாயும் நன்றாக மூடி இருக்கும் படி அணிய வேண்டும். 'நோஸ் கிளிப்' கவ்வி இருக்கும் படி, அணிய வேண்டும். காதில் மாட்டும் எலாஸ்டிக்கை, 'எக்ஸ்' வடிவத்தில் சுற்றி மாட்ட வேண்டும். அப்போதுதான் மாஸ்க் நழுவாது.
தொடர்ச்சியாக மாஸ்க் போடுவதால், சிலர் மூச்சுத்திணறல் ஏற்படுவதாக கூறுகிறார்களே?
இது போன்ற சிரமங்கள் இருக்கத்தான் செய்யும். பிற கஷ்டங்களை விட நமக்கு உயிர் முக்கியம். இதை எல்லாம் கொஞ்ச காலத்துக்கு, பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்.வீட்டில் தனியாக இருக்கும் போது, மாஸ்க் அணிய தேவையில்லை. வெளியில் செல்லும் போதும், மற்றவர்களிடம் பேசும் போதும், போட்டுக்கொண்டால் போதும். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நோயாளி இருந்தால், கட்டாயம் அணிய வேண்டும்.
'என் 95' மாஸ்க் பற்றி சொல்லுங்களேன்?
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும்போது, டாக்டர்கள் அணிய கூடியது இந்த மாஸ்க். 100 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எல்லோரும் அணிய தேவையில்லை. இதை ஒரு நாள் பயன்படுத்தி விட்டு, தனியாக வைத்து விட வேண்டும். பிறகு ஒரு வாரம் கழித்து, மீண்டும் பயன்படுத்தலாம்.கொரோனா தொற்றை பொறுத்தவரை வாயையும், மூக்கையும் மூடி, கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொண்டால், நோய்க்கிருமி நெருங்காது.