ராஞ்சி: காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் ஜார்கண்டிலுள்ள வைத்தியநாதர் கோயிலில் பூஜை செய்ததற்காக அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பா.ஜ.க., எம்.பி., ஒருவர் கோரியுள்ளார்.
ஜார்கண்டின் தியோகர் மாவட்டத்தில் நாளை (ஏப்.,17) சட்டசபை இடைத்தேர்தல் நடக்கிறது. இதையொட்டி கடந்த வாரம் காங்., எம்.எல்.ஏ., இர்பான் அன்சாரி என்பவர் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைத்தியநாத ஜோதிர்லிங்க ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். ஹிந்து சடங்குகளை செய்தார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ஜார்கண்ட் பா.ஜ., எம்.பி., நிஷிகாந்த் துபே, ஹிந்துக்களின் உணர்வுகளை அன்சாரி புண்படுத்திவிட்டதாக கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது: அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்துக்கு செல்வேன். அன்சாரி சிவ பக்தர் என்றால் முதலில் ஹிந்து மதத்தை பின்பற்றவும், பின்னர் பூஜை செய்யவும். பாபா வைத்தியநாத கோயிலின் கருவறைக்குள் முஸ்லிம்கள் நுழையவோ, பூஜை செய்யவோ அனுமதி கிடையாது. மெக்காவில் ஹிந்துக்கள் பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்களா? அதே நிலை தான் வைத்தியநாதர் கோயிலிலும் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதிலளித்துள்ள காங்., எம்.எல்.ஏ., அன்சாரி, ‛இடைத்தேர்தலை ஒட்டி மத நல்லிணக்கத்தை சீர்குலைக்க துபே முயற்சிக்கிறார். அவரது அனைத்து செயல்களையும் மக்கள் புரிந்துகொள்வார்கள். பாபா நகரி எனது பிறப்பிடம். நான் இந்த கோயிலுக்கு வழக்கமாக வருகை புரிபவன். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ஆளும் மெகா கூட்டணி இடைத்தேர்தலில் வென்ற பிறகும் பூஜை செய்வேன். என்னை யார் தடுக்கிறார்கள் பார்க்கிறேன். சிவன் யாருடைய தனிப்பட்ட சொத்தும் அல்ல. அனைவருக்குமானவர். அவர் மீது எனக்கும் நம்பிக்கை உண்டு,' என்றார்.