இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்குழந்தை நரபலி; கொடூர தாய் கைதுஐதராபாத்: தெலுங்கானாவில், ஜோதிடர் பேச்சை கேட்டு, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்த தாய் கைது செய்யப்பட்டார்.தெலுங்கானா மாநிலம், மேகலாபட்டிதண்டா நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. மனைவியை இழந்த இவர், கணவரை பிரிந்து வாழும், புஜ்ஜி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு, ஆறு மாத பெண் குழந்தை உள்ளது.
today, crime, round up, இன்றைய கிரைம்,  ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்

குழந்தை நரபலி; கொடூர தாய் கைது

ஐதராபாத்: தெலுங்கானாவில், ஜோதிடர் பேச்சை கேட்டு, பெற்ற குழந்தையை நரபலி கொடுத்த தாய் கைது செய்யப்பட்டார்.

தெலுங்கானா மாநிலம், மேகலாபட்டிதண்டா நகரைச் சேர்ந்தவர், கிருஷ்ணா. மனைவியை இழந்த இவர், கணவரை பிரிந்து வாழும், புஜ்ஜி என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.இவர்களுக்கு, ஆறு மாத பெண் குழந்தை உள்ளது. அமானுஷ்ய சக்திகள் மீது அலாதி ஆர்வம் உடயை புஜ்ஜி, நாகதோஷத்திற்கு பரிகாரம் கேட்டு, ஒரு ஜோதிடரை அணுகிஉள்ளார். அவர், நரபலி கொடுத்தால், நாகதோஷம் உட்பட அனைத்து பிரச்னைகளும் விலகி விடும் என, தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, கணவர் வெளியூர் சென்ற சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, புஜ்ஜி, பூஜை ஏற்பாடுகள் செய்து, பெற்ற குழந்தையின் கழுத்தை கத்தியால் அறுத்து, நரபலி கொடுத்துள்ளார். வெளியே சென்றிருந்த புஜ்ஜியின் தாய், வீட்டிற்கு வந்ததும், ரத்தம் வழிந்தோட குழந்தை இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், புஜ்ஜியை கைது செய்தனர். குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். புஜ்ஜி, சில காலமாக மனநிலை சரியில்லாமல் இருந்ததாக, போலீசார் தெரிவித்துள்ளனர். சமீபத்தில், ஆந்திராவில், பட்டதாரி தம்பதியர், இரு மகள்களை நரபலி கொடுத்த பரபரப்பு அடங்குவதற்குள், மீண்டும் அதுபோல ஒரு சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது.

கொரோனாவால் குழந்தை சாவு

சூரத்: குஜராதின் சூரத் நகர மருத்துவமனையில், கடந்த மாதம் கொரோனாவுடன் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணிக்கு, 1ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கும், வைரஸ் பாதிப்பு உறுதியானது. அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும், நேற்று முன்தினம் குழந்தை பரிதாபமாக பலியானது.

கிணற்றில் கன்னியாஸ்திரி உடல்

கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில், பள்ளி வளாகத்தில் உள்ள கிணற்றில், கத்தோலிக்க கன்னியாஸ்திரி மாபெல் ஜோசப், 42, நேற்று பிணமாக கிடந்தார். 'கருநாகப்பள்ளியை சேர்ந்த மாபெல், தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ள கடிதம், அவரது அறையில் இருந்து கிடைத்துள்ளது' என, போலீசார் கூறினர்.


தமிழக நிகழ்வுகள்

ரூ.60 ஆயிரம் லஞ்சம் சார் பதிவாளர் கைது

நாகர்கோவில்:பத்திரப்பதிவுக்கு, 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய, சார் பதிவாளர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.குமரி மாவட்டம், ராஜாக்கமங்கலம் அருகே ஆத்திகாட்டுவிளையைச் சேர்ந்தவர் கிருஷ்ணஜோதி, 45; விவசாயி. இவர், இப்பகுதியில் வாங்கிய நிலத்தை பதிவு செய்ய, கணபதிபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தை அணுகினார்.அங்கிருந்த சார் பதிவாளர் பனிமய ஜெயசிங், 60 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனைப்படி, 60 ஆயிரம் ரூபாயை, கிருஷ்ணஜோதி, நேற்று சார் பதிவாளரிடம் கொடுத்த போது, அவரை போலீசார் கைது செய்தனர். பின், குழித்துறை சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.15.62 கோடி மோசடி செய்த வால்பாறை நகராட்சி கமிஷனர்: தனிப்படை போலீசார் தேடுதல்

கோவை:ரூ.15.62 கோடி மோசடி செய்தது தொடர்பாக வால்பாறை நகராட்சி கமிஷனர் மீது வழக்கு பதிவு செய்த மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கமிஷனராக இருந்தவர் பொன்ராஜ். இவர் மீது கடந்த மாதம் அப்போதைய கலெக்டர் ராஜாமணியிடம் புகார் கொடுக்கப்பட்டது.நகராட்சி கணக்கில் இருந்த பணத்தை பல்வேறு ஒப்பந்தங்களுக்கான 'டெண்டர் அட்வான்ஸ்' என்ற பெயரில் பொன்ராஜ் முறைகேடாக எடுத்து அவற்றை தேர்தலின்போது வாக்காளர்களுக்கு கொடுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து கலெக்டர் ராஜாமணி இதுகுறித்து விசாரிக்க நகராட்சி நிர்வாக துறையின் மண்டல இயக்குனர் சரவணகுமாருக்கு உத்தரவிட்டார். கடந்த மார்ச் 26ம் தேதி சரவணகுமார் வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு நடத்தினார்.

முதற்கட்ட விசாரணையில் முறைகேடாக டெண்டர் அட்வான்ஸ் என்ற பெயரில் பொன்ராஜ் பல்வேறு காசோலைகளை வழங்கியது தெரிந்தது. கடந்த பிப். 26 ம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில் பொன்ராஜ் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான செக்கை ஒப்பந்ததாரர் ஒருவருக்கு வழங்கியதும் தெரிந்தது.

கடந்த ஏப். 2020 முதல் மார்ச் 2021 நிதியாண்டில் பொன்ராஜ் 15.62 கோடி ரூபாய் மதிப்பிலான 1256 காசோலைகளை எவ்வித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வழங்கியது தெரிந்தது. இதையடுத்து சரவணக்குமார் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் தெரிவித்தார்.இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த இரு நாட்களாக வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தனர்.

இந்நிலையில் பொன்ராஜ் விடுப்பில் சென்றார்.கடந்த மார்ச் 27 முதல் பொன்ராஜ் இருப்பிடம் குறித்து தெரியவில்லை. நேற்று முன்தினம் அவர் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப் பட்டார். இதையடுத்து பொன்ராஜை பிடிக்க தனிப்படை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


latest tamil news



டாக்ஸி டிரைவரை தாக்கிய டாக்டர் அரசு மருத்துவமனையில் பரபரப்பு
திருப்பூர்:வாடகை கார் டிரைவரை தாக்கிய, தனியார் மருத்துவமனை டாக்டர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, டிரைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

திருப்பூர், பவானிநகரை சேர்ந்தவர் சிவா, 22; வாடகை கார் டிரைவர். இவர், நேற்று மாலை, கொங்கு மெயின் ரோட்டில் வந்த போது, எதிரே வந்தவர் கார் உரசியது.காரில் வந்த நபர் இறங்கி வந்து, சிவாவை தாக்கிவிட்டு, வாடகை காரையும் எடுத்து சென்றுவிட்டார்.காயமடைந்த சிவா, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்த, திருப்பூர் மாவட்ட வாடகை கார் டிரைவர்கள் நலச்சங்கத்தினர், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென, அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

வாடகை கார் டிரைவர்கள் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'தனியார் மருத்துவமனை டாக்டர் ஒருவர், வாடகை கார் டிரைவரை தாக்கியது கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமல்லாது, வாடகை காரையும், மிரட்டி எடுத்து சென்றுள்ளார்.காரின் உள்ளே, பணமும் இருந்துள்ளது. காயமடைந்த நபர், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அடாவடி செய்த டாக்டர் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி கூறியதால், டிரைவர்கள் கலைந்து சென்றனர்.

இரணியூர் கோயிலில் 8 சிலைகள் மாயம்: சிலை திருட்டு தடுப்பு பிரிவு விசாரணை

சிவகங்கை:திருப்புத்துார் அருகே இரணியூர் ஆட்கொண்ட நாதர் கோயிலில் காணாமல் போன எட்டு பழங்கால உலோக சிலைகள் குறித்து சென்னை சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கர்ப்பிணி மகள் சுட்டுக் கொலை தலைமறைவு தந்தை அதிரடி கைது
ஓசூர்:அஞ்செட்டி அருகே, மகளை சுட்டுக் கொன்ற வழக்கில், தலைமறைவான தந்தை, துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி அடுத்த சூளகுண்டா அருகே மாதையன் தொட்டியை சேர்ந்தவர் அருணாசலம், 60; விவசாயி; மனைவி மாதேவி, 55.இவர்களது மகள் வெங்கடலட்சுமி, 21; இவருக்கும், கர்நாடக மாநிலம், மாலுாரை சேர்ந்த சீனிவாசன், 25, என்பவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது.மூன்று மாத கர்ப்பிணியாக இருந்த வெங்கடலட்சுமி, யுகாதி பண்டிகை கொண்டாட, தன் தந்தை வீட்டிற்கு வந்திருந்தார். கடந்த, 14ம் தேதி மாலை, தந்தைக்கும், தாய்க்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த அருணாசலம், தன்னிடம் இருந்த நாட்டுத் துப்பாக்கியால், மனைவி மாதேவியை சுட முயன்றார். தாயை காப்பாற்ற முயன்ற வெங்கடலட்சுமி, தோட்டா பாய்ந்து பலியானார்.கொகைது செய்தனர். அவரிடம் இருந்து, உரிமம் இல்லாத நாட்டு துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

நகராட்சி அலுவலர் வீட்டில் 100 சவரன் நகை கொள்ளை

புதுக்கோட்டை:புதுக்கோட்டை நகராட்சி பெண் அலுவலர் வீட்டின் பூட்டை உடைத்து, 100 சவரன் நகைகள் கொள்ளை போனது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை நகராட்சி அலுவலகத்தில், தணிக்கை அலுவலராக பணியாற்றி வருபவர் பூரணவள்ளி, 50; கணவர், வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். இவர்கள், புதுக்கோட்டை திருவப்பூரில் வசித்து வருகின்றனர்.இருவரும் சில நாட்களுக்கு முன், வெளியூருக்கு சென்று, நேற்று முன்தினம் மாலை வீடு திரும்பினர்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வீட்டிற்குள், பீரோவில் வைக்கப்பட்டிருந்த, 100 சவரன் நகைகள், 1 கிலோ வெள்ளிப் பொருட் கள், 1 லட்சம் ரூபாய் திருடப்பட்டிருந்தது. திருக்கோகர்ணம் போலீசார் விசாரிக்கின்றனர்.

ரூ.1 லட்சம் மதிப்பு பொருட்கள் திருட்டு

செங்குன்றம் : பழைய டிரான்ஸ்பார்மர்களை, பழுது நீக்கும் நிறுவனத்தில் இருந்து, பொருட்கள் திருடு போயின.

சென்னை, புரசைவாக்கம், சுந்தரம் பிள்ளை தெருவைச் சேர்ந்த மகேந்திரன், 62 செங்குன்றம் அடுத்த வடபெரும்பாக்கம், சொர்ணாம்பிகை நகரில், பழைய டிரான்ஸ்பார்மர்களை பழுது நீக்கும் நிறுவனம் நடத்துகிறார். கடந்த, 5ம் தேதி மாலை, நிறுவனத்தை பூட்டிவிட்டு, வீட்டிற்கு சென்றார். உடல் நலம் பாதிப்பால், நிறுவனத்தை திறக்காமல் இருந்தார்.

நேற்று காலை, நிறுவனத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது, நண்பர் மூலம் தெரிந்தது. அங்கு சென்று பார்த்த போது, 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்பு கம்பி உள்ளிட்ட, மின் உபகரண பொருட்கள் திருடு போனது தெரிந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.


latest tamil news



தாயை முட்புதரில் வீசிய மகன்

முதியோர் விடுதியில் விடுவதாக கூறி, தாயை அழைத்து வந்த மகன், முட்புதரில் வீசி சென்றதை தொடர்ந்து, போலீசார் அவரை மீட்டு, மருத்துவ சிகிச்சைக்கு அனுமதித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, ஏலியம்பேடு கிராமம் அருகே, சாலையோரத்தில் உள்ள முட்புதர் ஒன்றில், வயதான பெண் ஒருவரின் முனகல் சத்தம் கேட்டது.பொதுமக்கள், முட்புதரின் அருகே சென்று பார்த்தபோது, அங்கு, 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர், எழுந்திருக்க முடியாமல் இருப்பதை கண்டனர்.அவரை மீட்டு, பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று, மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்டனர்.


latest tamil news


பாலியல் தொல்லை: போலீஸ்காரர் கைது
தஞ்சாவூர்:பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், அய்யம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில், போலீஸ்காரராக பணியாற்றியவர் முருகானந்தம், 29. ஓய்வு அறைஇங்கு, நான்கு நாட்களுக்கு முன், தஞ்சாவூர் ஆயுதப்படையைச் சேர்ந்த, மூன்று பெண் போலீசார், பாதுகாப்பு பணிக்காக வந்திருந்தனர். இவர்களில், 22 வயது பெண் போலீஸ், சக ஆண் போலீசாருடன் நட்புடன் பேசியுள்ளார். இதை, முருகானந்தம் தவறாக புரிந்து கொண்டார்.

கடந்த, 13ம் தேதி இரவு பணி முடிந்து, அந்த பெண் போலீஸ், ஸ்டேஷன் ஓய்வு அறையில் இருந்துள்ளார்.அப்போது, பெண் போலீஸ், முருகானந்தத்திடம் எதார்த்தமாக பேசிக்கொண்டு இருந்தார்.முருகானந்தம், திடீரென பெண் போலீசை கட்டிப் பிடித்துள்ளார். அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ், அங்கிருந்து சென்றுவிட்டார். பின், தஞ்சை ஆயுதப்படை டி.எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார்.எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய், முருகானந்தத்தை 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டார்.

டிப்பர் லாரி மோதி மூதாட்டி பலி கிராம மக்கள் சாலை மறியல்

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே சாலையோரம் நடந்து சென்ற மூதாட்டி, டிப்பர் லாரி மோதி இறந்தார்.

விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் புதுகாலனியை சேர்ந்தவர் மலையனுாராள்,60: கூலித் தொழிலாளி. இவர் நேற்று காலை 8:00 மணிக்கு பனையபுரம் நோக்கி சாலை ஓரமாக நடந்து வந்தார்.அப்போது, திருக்கனுாரிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்ற டிப்பர் லாரி மோதியது. அதில் அவர் சம்பவ இடத்திேலயே இறந்தார். இதனை அறிந்த கிராம மக்கள், லாரியின் முன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை, விக்கிரவாண்டி போலீசார் சமாதானம் செய்து கலைந்துபோகச் செய்தனர்.

இறந்த மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரி டிரைவரான பண்ருட்டி, ராசாப்பாளையத்தை சேர்ந்த பழனிவேலு,39; என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X