பொது செய்தி

தமிழ்நாடு

'சின்ன கலைவாணர்' விவேக் மாரடைப்பால் மரணம்: காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்

Added : ஏப் 17, 2021
Share
Advertisement
சென்னை:மாரடைப்பால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த, சின்ன கலைவாணர் என, அழைக்கப்படும், நடிகர் விவேக், 59, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் சமூக சேவையை போற்றும் வகையில், அரசின் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, ஏப்., 15ல், அரசு மருத்துவ மனையில்,
 'சின்ன கலைவாணர்' விவேக் மாரடைப்பால் மரணம்: காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம்

சென்னை:மாரடைப்பால் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த, சின்ன கலைவாணர் என, அழைக்கப்படும், நடிகர் விவேக், 59, சிகிச்சை பலனின்றி காலமானார். அவரின் சமூக சேவையை போற்றும் வகையில், அரசின் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.

சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்த நடிகர் விவேக், கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்தி, ஏப்., 15ல், அரசு மருத்துவ மனையில், 'கோவேக்சின்' தடுப்பூசி போட்டுக் கொண்டார். நேற்று முன்தினம், வீட்டில் குடும்பத்தாருடன் பேசிக் கொண்டிருந்த விவேக்குக்கு, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, உடனடியாக வடபழநியில் உள்ள, 'சிம்ஸ்' மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில், 'எக்மோ' சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று அதிகாலை, 4:35 மணியளவில், விவேக் காலமானார்.இதையடுத்து, விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு, உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, ஏராளமான திரையுலகினர், பொதுமக்கள் திரண்டு சென்று அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு இறுதிச் சடங்குகள் முடிந்து, விவேக் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, விருகம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. விவேக்கின் சமூக சேவையை போற்றும் வகையில், அரசின் போலீஸ் மரியாதையுடன், குண்டுகள் முழங்க, விவேக் உடல் தகனம் செய்யப்பட்டது. இதற்காக, தேர்தல் கமிஷன் சிறப்பு அனுமதி பெறப் பட்டது.


சின்ன கலைவாணர்

நடிகவேள் என போற்றப்பட்ட, எம்.ஆர்.ராதா பாணியில், சமூக கருத்துகளுடன் சேர்ந்த தன் நடிப்பாலும், பேச்சாலும் ரசிகர்களை கவர்ந்தவர் விவேக். கடந்த, 1961 நவ., 19ல், கோவில்பட்டி அருகே உள்ள பெருங்கோட்டூரை சேர்ந்த சிவ.அங்கய்யா பாண்டியன், மணியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். இவருடைய முழுப் பெயர் விவேகானந்தன். இவரது தந்தை ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில், ஆசிரியராக பணியாற்றியவர்.மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லுாரியில் வர்த்தக இளங்கலை துறையில், பி.காம்., பட்டம் பெற்ற இவர், அதே துறையில், எம்.காம்., முதுகலை பட்டமும் பெற்றார்.

சிறிது காலம், தொலைபேசி ஆப்பரேட்டராக மதுரையில் வேலை பார்த்தார். அதன்பின், சென்னைக்கு வந்து, டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' தேர்வில் வெற்றி பெற்று, சென்னை தலைமை செயலகத்தில், ஜூனியர் உதவியாளர் பணியில் சேர்ந்தார்.ஆரம்பத்தில் நாடகங்களில் நடித்து வந்த இவர், இயக்குனர் கே.பாலசந்தரின் அறிமுகம் கிடைக்க, அவருடைய இயக்கத்தில் உருவான, மனதில் உறுதி வேண்டும் படத்தின் வாயிலாக, நடிகராக அறிமுகமானார்.

புது புது அர்த்தங்கள் படம் வாயிலாக, காமெடியனாக உயர்ந்தார். அந்தப் படத்தில், இவர் பேசிய, 'இன்னைக்கு செத்தா.. நாளைக்கு பால்..' என்ற வசனம் இன்றும் பேசப்படுகிறது.அதன் பின், 'ஒரு வீடு இரு வாசல், புது மாப்பிள்ளை, கேளடி கண்மணி, இதய வாசல், மின்னலே, ரன், துாள், சாமி' என, 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.நகைச்சுவையில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை கூறி, சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்ததால், ரசிகர்களால், 'சின்ன கலைவாணர்' என, போற்றப்பட்டார்.


கலாம் ரசிகர்

தமிழில் அனைத்து முன்னணி கதாநாயகர்களின் படங்களிலும் நடித்த விவேக், நான் தான் பாலா படத்தில் நாயகனாகவும் நடித்தார். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தீவிர ரசிகரான விவேக், 'நாட்டில் ஏற்பட்ட வறட்சிக்கு நாமே காரணம்' எனக்கூறி, ஒரு கோடி மரங்களை நடும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டார். இதுவரை, 30 லட்சம் மரக்கன்றுகளை நட்டுள்ளார்.திரைத்துறையில் இவர் ஆற்றிய பங்களிப்புக்காக, மத்திய அரசு, 'பத்மஸ்ரீ' விருது வழங்கி கவுரவித்தது. 'பிலிம்பேர்' விருது மற்றும் தமிழக அரசின் சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருதை பல முறை பெற்றுள்ளார்.

இவரது மனைவி பெயர் அருள்செல்வி. இவருக்கு அம்ரிதாநந்தினி, தேஜஸ்வினி என்கிற இரு மகள்கள் உள்ளனர். மகன் பிரசன்னகுமார் சில ஆண்டுகளுக்கு முன் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X