கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க, போலீசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள், பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்தது என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது.
கொரோனா நோய்த் தொற்று இரண்டாவது கட்டமாக, தமிழகத்தில் பரவத் துவங்கி உள்ளது. அதைத் தடுப்பதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் கட்டுப்பாடுகள் சிலவற்றை, தமிழக அரசு கடந்த வாரத்தில் அறிவித்துள்ளது. அதன்படி, இரவு, 11:00 வரை உணவு விடுதிகளில், 50 சதவீத வாடிக்கையாளர்கள் அமர்ந்து, உணவு அருந்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
'வீடியோ'
இந்த சூழலில், சில தினங்களுக்கு முன், கோவை நகரின் மையப் பகுதியிலுள்ள உணவு விடுதி ஒன்று, இரவு, 10:30க்கு இயங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்த உதவி ஆய்வாளர், சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் லத்தியால் தாக்கிய, 'வீடியோ' காட்சிகள், ஊடகங்களில் அதிக அளவில் உலா வந்தன. இந்த தாக்குதலில் பெண் வாடிக்கையாளர் உட்பட சிலருக்குக் காயம் ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஊரடங்கை அமல்படுத்துவதாக நினைத்து, பொதுமக்களை லத்தியால் தாக்கிய அந்த உதவி ஆய்வாளர் தற்போது, தற்காலிக பணி நீக்கத்தில் உள்ளார். அவரது வரம்பு மீறிய செயல் குறித்து விரிவான அறிக்கை அனுப்பும்படி, கோவை நகர ஆணையரை, மாநில மனித உரிமை ஆணையம் கேட்டுள்ளது.
அதன்பின், கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு விதிகளை நடைமுறைபடுத்துவதாகக் கூறி, போலீசார் பொதுமக்களிடத்தில் அத்துமீறி நடந்து கொண்ட பல சம்பவங்கள் குறித்து, கண்டக் குரல்கள் பொதுவெளியில் எழுந்துள்ளன.
ஊரடங்கு நடைமுறையில் இருந்த இரவு நேரத்தில், சாத்தான்குளத்தில் மொபைல் போன் கடையைத் திறந்து வைத்திருந்த காரணத்திற்காக, ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் மீது, சாத்தான்குளம் போலீசார் நடத்திய தாக்குதலில் இருவரும் இறந்தது, தற்போது, சி.பி.ஐ., விசாரணையில் உள்ளது.மக்கள் பணியில் வரம்பு மீறி செயல்படும் போலீசார் மீது எடுக்கப்படும் கடும் நடவடிக்கைகள், பொதுமக்களிடத்தில் காவல் துறை மீதான நம்பிக்கையை வலுப்படுத்துகின்றன.
அதே சமயம், சில போலீசாரின் அத்துமீறிய செயல்கள் இனி தொடராது என உயரதிகாரிகள் பொதுமக்களிடம் கொடுக்கும் வாக்குறுதிகள், ஆறுதல் வார்த்தைகளாகவே இருந்து விடுகின்றன. போலீசாரின் செயல்பாடுகளில் தவறுகள் நிகழக் காரணமாக அமைந்துள்ள துறை ரீதியான கட்டமைப்பு மற்றும் கண்காணிப்புகளைச் சீர்படுத்துவதில் காவல் துறை போதிய கவனம் செலுத்தாமல் இருப்பதே, சாத்தான்குளம், கோவை சம்பவங்கள் தொடரக் காரணமாக அமைந்து விடுகிறது.
பொதுமக்களின் நலனைக் கருதி, சட்டம் - ஒழுங்கைப் பராமரிக்க காவல் துறை எடுக்கும் பாரபட்சமற்ற நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் பொதுமக்களிடத்தில் தயக்கமின்றி கிடைக்கும் என்பதை, கோவை நகர மக்கள் கடந்த காலத்தில் உறுதிப்படுத்தியுள்ளனர். அதே சமயம், சட்டம் - ஒழுங்கை நடுநிலையுடன் அணுகத் தவறினால், அது பேரழிவை நோக்கி நகர்த்திவிடும் என்பதற்கும், கோவை ஒரு முன்னுதாரணம்.
விதிமீறல்
உணவு விடுதி உரிமையாளரிடம் அறிவுரை வழங்கி, ஊரடங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாமல், வன்முறைக் கும்பலை எதிர்கொள்வது போல, உதவி ஆய்வாளர் செயல்பட்டது முறைதானா... என்ற கேள்வியை எழுப்பும் பொதுமக்கள், மதுபானக் கடைகளில் நடைபெறும் ஊரடங்கு விதிமீறல்களைப் போலீசார் அமைதியுடன் கடந்து போகக் காரணம் என்ன என்ற கேள்வியையும் பொதுவெளியில் எழுப்புகின்றனர்.
பொதுமக்கள் பார்வையில், காவல் துறையினர் ஒவ்வொருவரிடமும் அதிகாரம் குவிந்திருப்பதாகத் தோற்றமளிக்கிறது. வெளித்தோற்றம் அப்படி இருந்தாலும், ஒவ்வொரு போலீசாரின் செயல்பாடுகளும், பல்வேறு நிலைகளில் கண்காணிக்கப்படுகின்றன. அவர்களின் செயல்கள் தடம்புரளும் போது, உடனடியாக உயரதிகாரிகள் தலையிட்டு, அதை சீர்படுத்தும் வகையில் காவல் துறை கட்டமைக்கப்பட்டுள்ளது.
களப்பணிக்குப் போலீசார் அனுப்பி வைக்கப்படும் போது, அவர்கள் செய்ய வேண்டிய களப்பணி என்ன; பணியின்போது என்னென்ன எதிர்விளைவுகளை அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்; அப்பணி தொடர்பான சட்ட விதிகள் கூறுவது என்ன என்பனவற்றை அறிவுறுத்தி, அனுப்பி வைக்க வேண்டும். இதை செயல்படுத்த, ஒவ்வொரு மாவட்டம் மற்றும் நகர காவல் துறையில் குறைந்தபட்சம் மூன்றடுக்கு உயரதிகாரிகள் கண்காணிப்பு பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.
ஊரடங்கு விதிமீறல்களைச் செய்வோர் கொடுங்குற்றவாளிகள் அல்ல. சமுதாய சூழல் காரணமாக அவர்களில் சிலர், ஊரடங்கு விதிமீறல்கள் செய்கின்றனர். அறிவுரை கொடுத்த பிறகும் ஊரடங்கு விதிமீறல்களில் அவர்கள் ஈடுபட்டால், சட்டரீதியான நடவடிக்கைகள் எடுத்து, அந்த உணவு விடுதிக்கு, 'சீல்' வைத்து மூடிவிட முடியும் என்பது, அந்த உதவி ஆய்வாளருக்குத் தெரிந்திருந்தால், அவர் லத்தியைப் பயன்படுத்தி இருக்கமாட்டார்; புத்தியை பயன்படுத்தி இருப்பார்.
'பழக இனிமை; பணியில் நேர்மை; இதுவே நமக்கு பெருமை' என்ற பொருள் பொதிந்த பண்புகள், காவல் துறையின் செயல்பாட்டில் இருந்து மெல்ல மறையத் துவங்கி விட்டதின் வெளிப்பாடு தான், அந்த உணவு விடுதியில் நிகழ்ந்த சம்பவம்.காவல் துறையில் பணி செய்வது என்பது, பொருள் ஈட்ட கிடைத்த ஓர் அரிய வாய்ப்பு எனக் கருதும் நிலைக்கு மாறியுள்ளதை, அனுபவ ரீதியாக உணர்ந்து கொள்ளும் வாய்ப்பு பொதுமக்கள் பலருக்குக் கிடைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
கடமை உணர்வு
'நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை' என்ற மூதுரைக்கு இணங்க, இன்றைய காலகட்டத்திலும் நேர்மை மற்றும் கடமை உணர்வுடன் செயல்படும் சிலர் காவல் துறையில் இருப்பதால் தான், காவல் துறை இயங்கிக் கொண்டிருக்கிறது. இத்தகைய பண்பாளர்கள் காவல் துறையில் எதிர்கொள்ளும் சவால்கள் ஏராளம். பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது முறைப்படி வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொள்ளப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு, காவல் துறையினர் மீது தொடர்ந்து சுமத்தப்படுகிறது. அந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று புறக்கணித்துவிட முடியாது.
ஒரு நேர்மையான காவல் அதிகாரி, ஒரு வழக்கில் புலன் விசாரணை மேற்கொள்ளும் போது ஏற்படும் செலவுகளை எப்படி எதிர்கொள்வது என்ற கேள்விக்கான விடை தேட வேண்டாமா?ஒவ்வொரு மாவட்ட மற்றும் நகர காவல் துறைக்கும் ஆண்டுதோறும் சில லட்சம் ரூபாய், 'புலன் விசாரணை நிதி' என்ற பெயரில் ஒதுக்கப்படுகிறது. அந்த நிதியில் இருந்து வழக்கு ஒன்றுக்கு, 2,000- ரூபாய், புலன் விசாரணை செலவிற்காக, புலன் விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிக்கு வழங்கப்பட வேண்டும்.
ஆனால் நடப்பது என்ன? புலன் விசாரணை நிதி பெற்றுக் கொண்டதாக புலன் விசாரணை அதிகாரிகளிடம் கையெழுத்து பெறப்படுகிறது. ஆனால், அந்த தொகை அவர்களுக்குக் கொடுக்கும் பழக்கம் பொதுவாக நடைமுறையில் இல்லை. இந்த சூழலில், நேர்மையான புலன் விசாரணையை எப்படி எதிர்பார்க்க முடியும்?
நகரங்களில் பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி நடைபெறும் மறியல்கள், தினசரி நிகழ்வுகளாக இருந்து வருகின்றன. அவற்றில் கைது செய்யப்படுபவர்களுக்கு, மதிய உணவு வழங்க வேண்டும். அதுபோல, வழக்குகளில் கைது செய்யப்படும் குற்றவாளிகளுக்கும் உணவு வழங்கப்பட வேண்டும். இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் ஏற்படும் செலவுகளுக்காக, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் வைப்பு நிதியாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. அந்த நிதியில் இருந்து செலவு செய்து, பின்னர் செலவு தொகையை, காவல் துறை தலைமை யிடத்தில் இருந்து வரவு பெற்றுக் கொள்ள வேண்டும்.
ஆனால், நடப்பது என்ன? வைப்பு நிதியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, உணவு விடுதிகளில் இலவசமாக உணவுப் பொட்டலங்கள் பெறும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.இம்மாதிரியான செயல்பாடுகள், நேர்மையற்ற வழியில் காவல் துறையை நகர்த்திச் சென்று விடுகின்றன.
களப்பணியில் ஈடுபடும் காவல் துறையினருக்கு வேலைப்பளு அதிகம் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து காவல் துறையில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அக்குற்றச்சாட்டில் உண்மை இல்லை என, புறந்தள்ளிவிட முடியாது. காவல் துறையில் சில சிறப்பு பிரிவுகள் உள்ளன. ஏதோ ஒரு காரணத்திற்காக கடந்த காலங்களில் அவை உருவாக்கப்பட்டன; அவை தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.அந்த சிறப்பு பிரிவுகள் நிகழ்காலத்தில் எவ்வித ஆக்கப்பூர்வமான பணியிலும் ஈடுபடுவதில்லை. இது குறித்த ஆய்வு, மறைவிடத்தில் ஒதுங்கி இருக்கும் காவல் துறையினரை வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, காவல் துறையில் நிலவிவரும் பற்றாக்குறையை ஓரளவிற்கு தீர்க்க வழி வகுக்கும்.
மெல்ல சிதைந்து வரும் காவல் துறையின் கட்டமைப்பைச் சீர்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அதன் உள்கட்டமைப்பை வலுப்படுத்தாமல், வெளித்தோற்றத்தை மட்டும் வெளிச்சமிட்டு அழகுபடுத்துவதால், எவ்வித பயனும் ஏற்படுவதில்லை.முக்கியமாக பொதுமக்களுக்கு சேவகம் செய்யத் தான், நமக்கு சம்பளம் வழங்கப்படுகிறது; அதுவும், பொதுமக்கள் கட்டும் வரிப்பணத்தில் இருந்து தான், மாதந்தோறும் நமக்கு சம்பளம் கிடைக்கிறது என்ற எண்ணத்தை போலீஸ் அதிகாரிகளும், அரசு அதிகாரிகளும் அவ்வப்போது நினைத்துக் கொண்டால் தவறிழைக்க மாட்டார்கள்.
எப்படியோ, தரமான பயிற்சி, முறையான வழிகாட்டுதல், நேர்மைக்கும், திறமைக்கும் உரிய அங்கீகாரம் உள்ளிட்டவற்றுடன் செயல்படும் காவல் துறையைத் தான், வருங்கால சமுதாயம் அங்கீகரிக்கும்!
பெ.கண்ணப்பன் ஐ.பி.எஸ்.,
காவல் துறை முன்னாள் துணைத் தலைவர்
தொடர்புக்கு:
இ - மெயில்: pkannappan29755@gmail.com
மொபைல்: 94890 00111