எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

நகைச்சுவைக்கு 'புதுப்புது அர்த்தங்கள்' கொடுத்த ஜனங்களின் கலைஞன் விவேக்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
தமிழில் நகைச்சுவைக்கு 'புதுப்புது அர்த்தங்கள்' கொடுத்து, சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன் பட்டங்கள் பெற்று, ஒவ்வொரு திரைப்பட மேடை நிகழ்ச்சிகளிலும் சக நடிகர்களுக்கு வாழ்த்துப்பா பாடியவருக்கு இன்று இரங்கற்பா பாட வேண்டிய நிலை. 'உன் மறைவு கண்டு எங்கள் மனங்கள் மட்டுமல்ல நீ நட்டு வளர்த்த மரங்களும் அழுகின்றன...' என மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் நெஞ்சைவிட்டு
 நகைச்சுவைக்கு 'புதுப்புது அர்த்தங்கள்' கொடுத்த ஜனங்களின் கலைஞன் விவேக்

தமிழில் நகைச்சுவைக்கு 'புதுப்புது அர்த்தங்கள்' கொடுத்து, சின்ன கலைவாணர், ஜனங்களின் கலைஞன் பட்டங்கள் பெற்று, ஒவ்வொரு திரைப்பட மேடை நிகழ்ச்சிகளிலும் சக நடிகர்களுக்கு வாழ்த்துப்பா பாடியவருக்கு இன்று இரங்கற்பா பாட வேண்டிய நிலை. 'உன் மறைவு கண்டு எங்கள் மனங்கள் மட்டுமல்ல நீ நட்டு வளர்த்த மரங்களும் அழுகின்றன...' என மண்ணை விட்டு மறைந்தாலும் மக்கள் நெஞ்சைவிட்டு மறையாத நடிகர் விவேக் குறித்து திரையுலக பிரபலங்கள் மனம் திறக்கிறார்கள்...

சமூகத்திற்காக செயலாற்றிய செயல் வீரர்மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் அவர் பேச்சுக்கலையை படித்துக்கொண்டார். படிக்கும்போதே சிறந்த நடிகராக இருந்தார். கல்லுாரி நாடகங்களில் தொடர்ந்து நடித்தார். அவருடன் எப்போதும் இளைஞர் வட்டம் இருக்கும். யாரையும் பகைத்துக்கொள்ள மாட்டார். நல்லது செய்ய வேண்டும் என எப்போதும் நினைக்கும் செயல்வீரர். நகைச்சுவையால் மற்றவர்களை சிரிக்க வைத்ததை விட சிந்திக்க வைத்தவர். அவருடன் 'சிவாஜி' படத்தில் நடித்த போது, தான் ஒரு நடிகராக வளர்ந்துவிட்டோம். புகழ் அடைந்துவிட்டோம் எனக்கருதாமல் பழகினார். இந்த 59 வயதில் திடீரென அவர் ஏன் மறைந்தார் என்பது குறித்து எனக்கு விளங்கல்லை. அவருக்குள் ஒரு சோகம் இருந்தது எனக்கு தெரியும். அவரது மகன் இறந்தது பெரிய அடியாக இருந்திருக்கலாம். அதை வெளியே சொல்லாமல் தனக்குள்ளேயே வைத்திருந்திருக்கலாம். சமீபத்தில் எனக்கு 'பத்மஸ்ரீ' விருது அறிவிக்கப்பட்டதும் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்தார்.- சாலமன் பாப்பையா, தமிழறிஞர்


latest tamil news

அவனுக்கு நானும் ரசிகன்நண்பன் விவேக் ஹார்ட் அட்டாக்கினால் இறந்து விட்டான் என செய்தி பார்த்து தான் தெரிந்து கொண்டேன். நான் மதுரையில் இருக்கிறேன். செய்தியை பார்த்ததும் எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. அதை பற்றி பேசவே முடியவில்லை. அவன் இல்லையே என எனக்கு துக்கம் தொண்டையை அடைக்கிறது. என்னோட அவன் ரொம்ப படங்களில் இணைந்து பணிபுரிந்திருக்கிறான். அவன் ரொம்ப ஓபன் ஆக பேசக்கூடியவன். என்னை விட ரொம்ப எளிமையாக எல்லோருக்கும் புரியும்படி பேசுவான். மனசை வருடும்படியும் பேசுவான். எனக்கு இருக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் அவனும் ஒருவன். அவனுக்கு நானும் ரசிகன். அவனுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்த என்னால் முடியவில்லை. என் நெஞ்சார்ந்த இரங்கலை அவன் குடும்பத்திற்கு தெரிவித்து கொள்கிறேன்.- வடிவேலு, நடிகர்


latest tamil news
தனித்துவமான கலைஞன்

விவேக்கை கல்லுாரி நாளிலிருந்தே எனக்கு தெரியும். நான் பி.காம்., படித்தபோது அவர் எனக்கு ஓராண்டு ஜூனியர். என் தம்பியும், விேவக்கும் வகுப்பு தோழர்கள் என்பதால் அப்பவே அவரை எனக்கு நன்றாக தெரியும். கல்லுாரி சார்பாக எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பரிசு வாங்காமல் அவர் வந்ததில்லை. கல்லுாரிகளில் ஓரங்க நாடகம் நடத்துவார். மிமிக்ரி செய்வார். நடனம் ஆடுவார். எப்படியாவது கல்லுாரிக்கு 'கப்' வாங்கி வந்துவிடுவார். சாலமன் பாப்பையாவிடம் அறிமுக கடிதம் வாங்கிக்கொண்டு பாலசந்தரை சந்தித்து, சினிமாவிற்குள் நுழைந்தார். 'சிவாஜி' படத்தில் நடித்தபோது நாங்கள் பழைய கதைகளை பேசி மகிழ்ந்தோம். ஷூட்டிங் இல்லாத சமயத்தில் காரில் நான், விவேக், மணிவண்ணன் ஆகியோர் ஷீரடி சென்று வழிபட்டோம். முதல் நாள் செய்தி சொன்னார். மறுநாள் செய்தி ஆனார்.- ராஜா, பட்டிமன்ற பேச்சாளர்

என்னை பிரபலமாக்கியவர்

திரைப்பட புகைப்பட கலைஞராகி பல ஆண்டுகள் ஆகியும் பிரபலமாகாத என்னை விவேக் தான் பிரபலமாக்கினார். 'ரன்' படப்பிடிப்பின் போது 'வி.ஐ.பி.,யை பார்க்க போகிறேன் வர முடியுமா' என்றார். அண்ணா அறிவாலயம் அழைத்து சென்றார். அங்கிருந்த வி.ஐ.பி.,க்கு விவேக் வணக்கம் கூறினார். அவர் 'நீங்கள் யார்இ என்னை ஏன் பார்க்க வந்தீர்கள்' என வி.ஐ.பி., கேட்க 'நான், நடிகர் புத்தகம் எழுதியிருக்கிறேன் அது விஷயமாக பார்க்க வந்தேன்' என்றதும், வி.ஐ.பி., பாராட்டுகிறார். இந்த நிகழ்வை நான் புகைப்படம் எடுத்தேன். சந்திப்பு முடிந்ததும் 'என்னுடன் புகைப்படம் எடுக்க உங்களுக்கும் ஆசை இருக்கும் வாருங்கள்' என என்னை அழைத்த வி.ஐ.பி., அவர் அருகில் நிறுத்த, என் கேமராவை வாங்கி விவேக் புகைப்படம் எடுத்தார். பிறகு தான் அந்த வி.ஐ.பி., ஜனாதிபதியாக பதவியேற்க போகும் அப்துல் கலாம் என தெரிந்தது. பல நிகழ்ச்சிகளில் விவேக் இந்நிகழ்வை கூறும் போது என் பெயரையும் கூறுவார்.- ரங்கா ராவ், திரை புகைப்பட கலைஞர்


latest tamil news

நல்ல மனிதர்நான் கூட நேற்றிரவு தான் டிஸ்சார்ஜ் ஆகி வந்தேன். நடிகர் விவேக் நல்ல மனிதர். சிறந்த சமூக சிந்தனையாளர். என் கூட பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்திருக்கிறார். எல்லோருக்கும் மரியாதை தரக்கூடியவர். அவருடைய நகைச்சுவை காட்சிகளை யாரும் மறக்க முடியாது. எல்லோரையும் சிந்திக்க வைத்த அவர் தன் உடம்பை கவனிக்காமல் விட்டு விட்டார். எங்கு சென்றாலும் எல்லோருடனும் நட்பு பாராட்டுவார்.- செந்தில், நடிகர்


ஜீரணிக்கவே முடியவில்லைஎப்படி இருந்த நீங்க இப்படி ஆயிட்டிங்களே. எங்களை விட்டுட்டு போயிட்டங்களே. சிரிக்க சிரிக்க சிந்திக்க வச்சவரு இப்போது சிந்திக்கவே முடியாத சோகத்துல தள்ளிட்டீங்களே. நீங்க இல்லைங்கறதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த பளிச் சிரிப்பும், கஸ் என்று உற்சாகமாக கூப்பிடுவதும் இனி இல்லை. சிந்தனையாளர் விவேக்கின் எண்ணங்கள் இனி நமக்கு கிட்டா. ஆனால் சமூக ஆர்வலர் விவேக்கின் கனவை நாம் மெய்ப்பட செய்ய முடியும். மரம் நடுவோம்.
- கஸ்துாரி, நடிகை


அவர் இறக்கவில்லைநகைச்சுவை மன்னன், நம் அண்ணன், சின்ன கலைவாணர் இறந்ததை கேட்டு இதயமே உறைந்து விட்டது. பண்பானவர், பாசமானவர், நேசமானவர். எத்தனையோ குழந்தைகளுக்கு சத்தமின்றி படிப்புக்கு உதவி செய்திருக்கிறார். அப்படிபட்டவருக்கு இப்படி ஒரு இறப்பை கேட்டு ரத்தம் வடிகிறது.- கஞ்சா கருப்பு, நடிகர்கலாம் சிந்தனைகளை விதைத்தவர்நான் விவேக்கை எப்போதும் 'தம்பி..' என ஆசையாக கூப்பிடுவேன். பொதுப் பணிகள் குறித்து அதிகம் சிந்திப்பவர். மறைந்த அப்துல் கலாமின் சிந்தனைகளை இளைஞர்களிடம் விதைத்தவர். பகுத்தறிவு உள்ள பக்தி கொண்டவர். 'குரு என் ஆளு' என்ற படத்தில் அவரை நான் காதலிப்பது போல் நடித்திருப்பேன். அவர் பேசிய 'கோ…பால்…' வசனம் ரசிக்க வைத்தது.- எம்.எஸ்.பாஸ்கர், நடிகர்


latest tamil news

மரணமில்லைநாற்பது படங்களுக்கு மேல் விவேக்குடன் நடித்துள்ளேன். 20 படங்களில் நானும் அவரும் இணைந்து நடித்துள்ளோம். எழுத்தாளர் சுஜாதாவின் 'கொலையுதிர் காலம்' சீரியலில் இணைந்தோம். பின் 'இளையராகம்' படத்தில் முதன் முதலாக சினிமாவில் இணைந்து நடித்தோம். முதல் நாள் 'ஜிம்'முக்கு போய்விட்டு ரெகுலர் வேலைகளை பார்த்து கொண்டிருந்தவருக்கு, எவ்வித அறிகுறியும் இல்லாமல் மறுநாள் நிகழ்ந்த இந்த இழப்பு ஈடுசெய்ய முடியாதது. அவரது நகைச்சுவைக்கு எப்போதும் மரணம் கிடையாது. - வையாபுரி, நடிகர்


திரையுலக உறவினர்விவேக் மனைவி கவிதா (எ) அருட்செல்வி என் தாய்மாமன் மகள் தான். அவர் திரையுலக உறவினராகவும் இருந்தார். விவேக் கதை, வசனம் எழுத 'கொண்டி தோப்பு சுப்பு' என்ற படத்தை நான் இயக்குவதாக இருந்தது. சில காரணங்களால் நின்று போனது. இன்று அது கனவாகவே போய் விட்டது. அவரிடம் உதவி பெற்றவர்களில் நானும் ஒருவன். அதுவும் கல்வி உதவி யார் கேட்டாலும் உடனே செய்து விடுவார். ஆன்மிக சிந்தனையுள்ளவர், தீய பழக்கங்கள் இல்லாதவர். - குட்டிப்புலி சரவணன் சக்தி, இயக்குனர்


வார்த்தைகளே இல்லைதுக்கத்தை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. எங்களை சிரிக்க சிந்திக்க வைத்தீர்கள். பல ஆண்டுகள் இருவரும் பணிபுரிந்துள்ளோம். திரைத்துறையில் கால் ஊன்றுவதற்காக நாம் நிறைய கஷ்டப்பட்டு, வலிகளை கடந்து தான் இருவரும் சாதித்தோம். தற்போது திடீரென எங்களை விட்டு பிரிந்து, எங்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டாய். உங்கள் வார்த்தை, செயல், மனிதநேயம் எப்போதும் இருக்கும். நீங்கள் நட்ட மரங்களின் மூலம் நாங்கள் புத்துணர்ச்சியான காற்றை சுவாசிப்போம். அது உங்கள் நினைவுகளை எப்போதும் வைத்திருக்கும்.
- குஷ்பு, நடிகைஅவருக்கு மரணமில்லைசினிமா துறையில் நான் 'அண்ணே' என்று கூப்பிடும் சிலரில் விவேக் முதன்மையானவர். அவருடன் எனக்கு நீண்டகாலம் நட்பு உண்டு. யார் எந்த மனநிலையில் இருந்தாலும் அவருடன் இருக்கும்போது அதெல்லாம் மறந்துபோய்விடும். அந்தளவிற்கு பழகக்கூடியவர். 'மச்சான்' படத்தில் என்னுடன் நடித்துள்ளார். இப்படம் இன்னும் வெளிவரவில்லை. படங்களில் தனக்கென உள்ள காட்சிகளுக்கு 'டிராக்' எழுதி நடித்த முதல் நடிகர். அவர் தானம், தர்மம் நிறைய செய்துள்ளார். அதை வெளியே தெரியபடுத்தியதில்லை. எந்த நகைச்சுவை நடிகருக்கும் கிடைக்காத பெருமை 'பத்மஸ்ரீ' விருது மூலம் அவருக்கு கிடைத்தது.- கருணாஸ், நடிகர்


துக்கத்தின் உச்சம்மகன் இழப்பால் மனமுடைந்திருந்த அவர் மீண்டு வந்திருந்தார். மேடை நிகழ்ச்சிகளில் மேடையில் உள்ளோரின் நற்குணங்கள், சாதனைகள் என அவர்களுக்கே தெரியாத பல நல்ல விஷயங்களை எடுத்து சொல்லி அவர்களை திக்குமுக்காட வைக்கும் திறமை உள்ளவர். சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த நடிகர்களில் விவேக் குறிப்பிடத்தக்கவர். 'லைப் இஸ் ஷார்ட்; டைம் இஸ் பாஸ்ட்' என்பர். அதற்கேற்ப தனக்கான ஒரு 'அடையாளத்தை' பதித்து சென்றுள்ளார். 'டோன்ட் வொரி பி ஹேப்பி' என ஒரு படத்தில் சிரிக்க வைத்து எங்களை எல்லாம் துக்கத்தின் உச்சத்திற்கு செல்ல வைத்து விட்டார்.- பாண்டியராஜன், நடிகர்

****


பிரபலங்களின் 'டுவிட்டர் அஞ்சலிநடிகர் விவேக் மரணம் கவலை தருகிறது. திரை, நிஜவாழ்வில் சுற்றுச்சூழல், சமூக பணிகளில் அக்கறை செலுத்தினார்.- மோடி, பிரதமர்.

நகைச்சுவையால் மக்களை மகிழ்வித்தவர். அவரது குடும்பத்தினர், ரசிகர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.- வெங்கையா நாயுடு, துணை ஜனாதிபதி.


திறமையால் இந்திய சினிமாவை சிறப்படைய செய்தவர் விவேக். அதற்காக எப்போதும் நினைவு கூறப்படுவார்.- அமித்ஷா, உள்துறை அமைச்சர்.

பல லட்சம் மரங்களை மண்ணில் விதைத்த லட்சிய மனிதர். திரையுலக கருத்துக்கள் மூலம் தமிழக இளைஞர்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்ல அரும்பாடுபட்டார்.- பழனிசாமி, தமிழக முதல்வர்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பில் முக்கியப்பங்கு வகித்தவர். அவரது மறைவு சமூகத்திற்கும், தமிழ் திரையுலகிற்கும் பெரிய இழப்பு.- பன்னீர்செல்வம், துணை முதல்வர்.


'சின்னக் கலைவாணர்' விவேக் மறைவு அதிர்ச்சி அளிக்கிறது. சூழலியல் ஆர்வலர். ஆற்றல்மிகு நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாகப் பறித்ததேன்?- ஸ்டாலின், தி.மு.க., தலைவர்.

'சிவாஜி' படப் பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும் என் வாழ்க்கையில் மறக்க முடியாதவை.- ரஜினி, நடிகர்.

ஜனாதிபதி கலாமின் இளவலாக, பசுமைக் காவலராக வலம் வந்த விவேக்கின் மரணம் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.- கமல், ம.நீ.ம., தலைவர்


தமிழ் மீது அக்கறை கொண்டு நல்ல கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விவேக்கிற்கு இணை வேறு எவரும் இல்லை.- விஜயகாந்த், தே.மு.தி.க., நிறுவனர்.


சிந்திக்க வைக்கும் கருத்துக்களை நகைச்சுவையாக கொண்டு சேர்ப்பதில் சிறந்த விளங்கிய விவேக் மறைவு செய்தி துயரத்தில் ஆழ்த்தியது.- முருகன், தமிழக பா.ஜ., தலைவர்.


எம்.ஆர்.ராதாவுக்கு பின் சீர்திருத்தக் கருத்துகளை திரைப்பட உலகில் பரப்பியவர் விவேக். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு மாபெரும் இழப்பு.- கே.எஸ்.அழகிரி, தமிழக காங்., தலைவர்.

கலைச்சேவையும், மக்கள்சேவையும் புரிந்திட்ட விவேக் மறைவு தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்பட்ட பேரிழப்பு.- சீமான், நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.CHELLAPPA - Vadodara,இந்தியா
18-ஏப்-202112:15:53 IST Report Abuse
R.CHELLAPPA சாலையில் சிலை வைக்கிறோம். மக்களுக்கு சில சமயங்களில் இடையூறு ஆகி விடுகிறது. சாலையின் இரு புறங்களிலும் மரம் நட்டால் எல்லோருக்கும் பயன் அகுமே.
Rate this:
Cancel
Murugan - Boissy- saint- leger,பிரான்ஸ்
18-ஏப்-202100:53:21 IST Report Abuse
Murugan அவரின் ஆத்மா இறைவனடி இளைப்பாற பிராத்திப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X