பொது செய்தி

தமிழ்நாடு

அழகுக்கு இலக்கணம் நிறம் அல்ல: ஆரோக்கியமான சருமம் போதும்!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021
Share
Advertisement
''கருமை நிற கண்ணா... உனை காணாத கண் இல்லை... போற்றாத வாயில்லை...'' என, கருப்பின் அழகை வருணித்து இறைவனை போற்றி பாடுகிறோம். கருப்புத்தோல் கொண்ட எகிப்திய ராணி கிளியோபாட்ரா, 'உலக அழகி' என்று போற்றப்பட்டவர். ஆனால், நமது சமுதாயத்தில் கருமை நிற பெண் நிலை வேறு. 'கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு...' என கூறுவது வெளிவேஷம். கருப்பு நிற சிறுமியருக்கு, சமூகத்தில் அநீதியே
அழகு, இலக்கணம், நிறம்,ஆரோக்கியம்,  சருமம்

''கருமை நிற கண்ணா... உனை காணாத கண் இல்லை... போற்றாத வாயில்லை...'' என, கருப்பின் அழகை வருணித்து இறைவனை போற்றி பாடுகிறோம். கருப்புத்தோல் கொண்ட எகிப்திய ராணி கிளியோபாட்ரா, 'உலக அழகி' என்று போற்றப்பட்டவர்.

ஆனால், நமது சமுதாயத்தில் கருமை நிற பெண் நிலை வேறு. 'கருப்புதான் எனக்குப் பிடித்த கலரு...' என கூறுவது வெளிவேஷம். கருப்பு நிற சிறுமியருக்கு, சமூகத்தில் அநீதியே இழைக்கப்படுகிறது. கருப்பாக பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கும், சருமத்தை ஒளிரச் செய்வதற்கும், அழகு சாதன நிபுணர்கள் மற்றும் தோல் மருத்துவர்களை, பெற்றோர் நாட ஆரம்பித்துள்ளனர்.

திருமண வயதை எட்டுவதற்குள் பெண் குழந்தைகளை வெண்ணிறமாக்க வேண்டும் என்பதே இவர்களதுலட்சியம். வெண்மை நிறமும், அடர்த்தியான கூந்தலும், எடுப்பான தோற்றமும் திருமணப்பெண்ணின் முக்கிய தகுதிகள் என்பது சமுதாயத்தின் நிலைப்பாடு. திருமணத் தேடல் தளங்களை அலசினால், தங்கள் மகனுக்கு வெண்ணிற மங்கை வேண்டும்; வெண்ணிற மங்கைக்கு தக்க வரன் வேண்டும் என பெற்றோர் தேடுவதை கண்கூடாக காணலாம்.


நிற பாகுபாடு

இல்லத்தரசியான உஷா கூறுகையில், ''கருப்பு நிற பெண்கள் மீதான பாரபட்சம் பள்ளியில் இருந்தே துவங்கி விடுகிறது. சிவப்பு நிறமுடைய பெண்கள், பொதுவாக ஆசிரியர்களின் செல்லமாக இருப்பார்கள். கருப்பாக இருப்பவர்கள், தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றனர்; அவமதிப்பை சந்திக்கின்றனர். வாழ்க்கையின் கடைசி வரை, நிறம் குறித்தபுனைப் பெயருடன் அவர்கள் வலம் வருவர்.''பெண்களின் நிறத்தை மட்டுமே பிரதானமாகக் கொண்டு, 'டிவி' விளம்பரங்கள் அதிகம் வருகின்றன.

நடிகைகள் பலர் தங்கள் தோல் நிறம் காரணமாக எவ்வாறு பாகுபாடு காட்டப்படுகின்றனர் என்பது பற்றி வெளிப்படையாகவே பேசியுள்ளனர்.''ஒரு கிரீம் விளம்பரத்தை வேண்டாம் என்று நடிகை சாய் பல்லவி கூறியபோது, அது ஒரு பெரிய செய்தியாக பேசப்பட்டது. திரைப் பட நட்சத்திரங்கள் பெரும்பாலும், யதார்த்தத்துடன் ஒவ்வாத தயாரிப்புகளுக்கு ஒப்புதல் அளிப்பதே வழக்கம்,'' என்றார்.


தோல் நிறம் மரபணு காரணி

'வொண்டர் மகளிர் மன்றம்' ஒருங்கிணைப்பாளர் சுஜாதா மூர்த்தி கூறுகையில், ''இந்த, 2021ம் நுாற்றாண்டில், மக்கள் நிறம் குறித்த பிற்போக்கு மனப்பான்மை கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. ''குழந்தைகள் தங்கள் இயற்கையான உடல் அமைப்புடன், நம்பிக்கையுடன் வசதியாக இருப்பதை உறுதி செய்வதே பெற்றோரின் முக்கிய பொறுப்பு.

''நம்பத்தகாத எதிர்பார்ப்புகளை வளர்த்துக் கொள்வது, அவர்களின் ஆன்மாவை அழிக்கக் கூடும். உறுதியான மனப்பாங்கும், தன்னம்பிக்கையும் சரியான அணுகுமுறையும் தான், ஒரு மனிதனை சரியான இடத்துக்கு இட்டுச் செல்லுமே தவிர, உடல் தோற்றம் அல்ல. தோல் நிறம் என்பது, ஒரு மரபணு காரணி மட்டும்தான். தோற்றத்தின் அடிப்படையில், எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் சமூகம் இருக்க வேண்டும். ஒரு புத்தகம் குறித்து அதன் அட்டைப்படம் வாயிலாக, ஒருபோதும் தீர்ப்பு அளிக்கக் கூடாது,'' என்றார்.


நிறம் மாற்றுவது சாத்தியமா!

பிளாஸ்டிக் சர்ஜன் மற்றும் ஒப்பனை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ப்ரீதா ராணி கூறுகையில், ''டாக்டர்கள் எவ்வளவு திறமையானவராக இருந்தாலும், சருமத்தின் இயற்கை யான நிறத்தை மாற்ற இயலாது.இருப்பினும், தோல்சுருக்கங்கள், முகத்தில் கருவளையங்கள், முகப்பரு வடுக்களுக்கு சிகிச்சை அளித்து, நிறத்தை மேம்படுத்துவது சாத்தியம்.

தற்போது, இயற்கையான தோல் நிறத்தை ஏற்றுக்கொள்வதற்கான பக்குவம், ஓரளவு அதிகரித்து வருகிறது. தோல் நிறத்தை மாற்றுவதற்கு, ஊக்குவிக்கும் தயாரிப்புகளும், குறைந்து வருகின்றன. வெண்மையான நிறத்தை விட தெளிவான, ஆரோக்கியமான சருமத்தை மேம்படுத்துவதில் முக்கியத்துவம் காட்ட வேண்டும்,'' என்றார்.
-நமது நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X