சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

இலக்கியங்கள் காட்டும் இந்திர விழா

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
சித்திரை பெருவிழா என்றதும், மதுரை மீனாட்சி திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் தான், நமக்கு நினைவுக்கு வரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களுக்கு, இந்திர விழா தான், சித்திரை என்றதும் நினைவுக்கு வந்தது.கரிகால சோழன் ஆண்ட காலத்தில், காவிரி பூம்பட்டினம் தான் தலை நகர். அங்கு ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் காமன் பண்டிகை நடக்கும். சித்திரை

சித்திரை பெருவிழா என்றதும், மதுரை மீனாட்சி திருக்கல்யாணமும், வைகை ஆற்றில் அழகர் இறங்குவதும் தான், நமக்கு நினைவுக்கு வரும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன், நாட்டு மக்களுக்கு, இந்திர விழா தான், சித்திரை என்றதும் நினைவுக்கு வந்தது.

கரிகால சோழன் ஆண்ட காலத்தில், காவிரி பூம்பட்டினம் தான் தலை நகர். அங்கு ஒவ்வொரு ஆண்டும், பங்குனி மாதம் காமன் பண்டிகை நடக்கும். சித்திரை முதல்நாளில் கொடியேற்றத்துடன் இந்திர விழா துவங்கும். இதை, சிலப்பதிகாரமும், மணிமேகலையும் சொல்கின்றன.ஒவ்வொரு ஆண்டும், சித்திரையின் முதல் நாள், மங்கல ஆட்சி துவங்கும் சாந்தி விழாவாக, அரசனாலும், மக்களாலும், இந்திர விழா நடத்தப்பட்டதாக சிலப்பதிகாரம் சொல்கிறது. இதிலிருந்து, சித்திரையே, தமிழ் ஆண்டின் துவக்கம் என்பது தெளிவாகிறது. அரங்கேற்று காதையும் இதை உறுதி செய்கிறது.


வேறு பெயர்கள்

இந்திர விழாவுக்கு, அமரர்கோன் விழா, தேவர்கோன் விழா, ஆயிரம் கண்ணோன் அரும் பெரும் விழா, நுாறுவேள்வி உரவோன் விழா, விண்ணவர்கோன் விழா என்ற பெயர்களும் உண்டு. இதை, மணிமேகலை உரைக்கிறது. சிலப்பதிகாரத்தின் தனிக்காதையில், சித்திரை சேர்ந்த நாள் என, விளக்கப்படுகிறது.


காவல் தெய்வங்கள்


பூம்புகாரில், இந்திர விழா துவங்கும் போது, வீரர்களை தொடர்ந்து, பொதுமக்கள் ஊர்வலம் செல்வர். பின், மன்றங்களில் பலியிட்டு வழி படுவர். அதாவது, அங்கு வெள்ளிடை மன்றம், இலஞ்சி மன்றம், நெடுங்கல் மன்றம், பாசக்கயிறு மன்றம், பாவை மன்றம் எனும், ஐந்து வகை மன்றங்கள் இருந்தன. முதல் மன்றத்தில், திருடர்களை வீரர்கள் பலியிடுவர். இலஞ்சி மன்றத்தில், நஞ்சு மற்றும் வஞ்சத்தால் பாதிக்கப்பட்டோர் வழிபடுவர். கடவுளையும், கணவனையும் ஏமாற்றுவோரை பாசக் கயிற்றால் தண்டிக்கும் பூதம் அடுத்த மன்றத்தில் இருந்தது.பாவை மன்றத்திலிருக்கும் பூதம் வித்தியாசமானது. மன்னன் தவறு செய்தாலோ, தவறான தீர்ப்பு வழங்கினாலோ, அந்த பூதம் கண்ணீர் உகுக்கும். இந்த மன்றங்களில், பூக்களை பலியிட்டு திருவிழாவை துவங்குவர். இந்த தெய்வங்கள் தான், நகரின் காவல் தெய்வங்கள். இந்த விழாவுக்கு நகர சாந்தி என்று பெயர். இன்றும் ஊர்த்திருவிழாக்களில், கிராம தெய்வங்களுக்கு பூஜை போட்ட பின், திருவிழா துவங்குவது இதன் தொடர்ச்சி தான்.


மும்மாரி பெய்க!

விழா துவங்கும் முன், தெரு வாயில்கள் மகர தோரணம், பூரண கலசம், வாழை, கமுகு, கரும்புகளால் அலங்கரிக்கப்படும். முத்து தாண்களும், பாவை விளக்குகளும் வரவேற்கும். மொத்தத்தில், பூம்புகார் நகரமே விழாக் கோலம் பூணும்.அரச மரபினர் குடியிருக்கும் பெருவீதிகளில், பெருவணிகர்கள், அமைச்சர்கள், ஐம்பெருங்குழு, எண்பேராயம், தேர்ப்பாகர், யானை, குதிரை, காலாட்படை வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கூடி, 'அரசன் வாழ்க; அவன் கொற்றம் வாழ்க; மாதம் மும்மாரி பெய்க' என, வாழ்த்தி முழங்குவர்.


இந்திரன் கோவில்

இந்திரனின் வாகனமான, வெள்ளை யானை கோவிலில் வைத்து வழிபட்டு, அங்குள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றி, முரசறைந்து இந்திர விழா குறித்து அறிவிப்பர்.பூம்புகாரில் இந்திரனுக்கும், அவன் ஆயுதமான வஜ்ராயுதத்துக்கும் கோவில்கள் இருந்தன. விழா துவங்கும் போது, காவிரி நீரை பொற்குடத்தில் ஊர்வலமாக எடுத்து வந்து, இந்திரன் சிலைக்கு அபிஷேகம் செய்வர். இதற்கு விழுநீராட்டல் என்று பெயர்.தொடர்ந்து, சிவன், ஆறுமுகம், பலராமன், கண்ணன் உள்ளிட்ட கோவில்களிலும் வழிபாடுகள் நடக்கும். அந்த கோவில்களில் நான்கு வேதங்களும், ஆறு அங்கங்களும் ஓதப்பட்டன. இந்த செய்திகள், சிலப் பதிகாரத்தின் இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் உள்ளன.அடுத்துள்ள கடலாடு காதையில், இந்திர விழா முடிந்த மறுநாள், அதாவது, சித்ரா பவுர்ணமியன்று, தெய்வங்களுடன் கடலிலோ, ஆறுகளிலோ சென்று நீராடும் தீர்த்தவாரி குறித்த செய்தி உள்ளது.விழா முடிந்து, மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பும் மன்னர், சிறையிலிருந்து மற்ற
அரசர்களை விடுவிப்பார். பின், கைவினைஞர்கள், கலைஞர்களுக்கு பரிசளித்து கவுரவிப்பார்.இதே காட்சிகள், தற்போது, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிலும் நடக்கின்றன. இந்த சித்திரை விழா, அந்த சித்திரை விழாவின் தொடர்ச்சி தான்.இவ்வளவு சிறப்பு மிக்க இந்திர விழாவை, மணிமேகலை தீவக சாந்தி எனக்கூறும். திருஞானசம்பந்தர் பெரும் சாந்தி என்று அழைப்பார். இன்னும் பல இலக்கியங்களும் புகழும்.

தகவல் உதவி :இரா.நாகசாமி,தமிழக தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X