புதுடில்லி:கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டு வருவது, தடுப்பூசி போடும் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
முன்னாள் பிரதமரும், காங்., மூத்த தலைவருமான மன்மோகன் சிங், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காரணமாக, நாட்டில் பெரும்பாலானோர், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர். வாழ்வாதாரம் மீண்டு வரும் நேரத்தில் இரண்டாவது அலை துவங்கியுள்ளது.
தொற்றை கட்டுக்குள் கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தடுப்பூசி போடுவது மிக முக்கியமானது. இது தொடர்பாக என் ஆலோசனைகளை வழங்கி உள்ளேன். அடுத்த ஆறு மாதங்களில், தடுப்பு மருந்து தயாரிப்புக்காக அனுமதி கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் வினியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும்.
குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மருந்துகளை வழங்க தயாரிப்பாளர்கள் ஒப்பு கொள்வர்.தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் வினியோகிப்பது தொடர்பாக, மத்திய அரசு வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
அவசர கால தேவைக்கு,10 சதவீத மருந்துகளை,மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். முன்கள பணியாளர்கள் யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள், 45 வயதுக்கு கீழ் இருந்தாலும், அவர்களுக்கும் தடுப்பூசி போடுவதற்கு மாநில அரசுகள் முடிவெடுக்க அனுமதி அளிக்க வேண்டும். நாட்டில், சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து நிறுவனங்கள், தயாரிப்பை அதிகரிக்க தேவையான நிதி மற்றும் சலுகைகளை, மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.
உள்நாட்டில் மருந்து குறைவாக இருப்பதால், ஐரோப்பிய மருத்துவ அமைப்பு அல்லது அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒப்புதல் வழங்கிய மருந்துகளை, எவ்வித தடையுமின்றி இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE