புடிச்சாலும் காசு... விட்டாலும் காசு: வியர்வை சிந்தாமல் அள்ளிக்குவிக்கும் போலீஸ்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 19, 2021
Advertisement
சித்திரைக்கனியை முன்னிட்டு, குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்த பின், வெளியே வந்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.''என்னக்கா… கொரோனா தடுப்பூசி போட்டாச்சா. நான் போன வாரம் தான் போட்டேன்,'' என்றாள் மித்ரா.''இல்ல மித்து, அப்படியே ஜி.எச்., வரைக்கும் போலாம்டி. தடுப்பூசி போட்டுட்டு, வீட்டுக்கு போயிடலாம்'' என்றாள் சித்ரா.உடனே, அரசு
 புடிச்சாலும் காசு... விட்டாலும் காசு: வியர்வை சிந்தாமல் அள்ளிக்குவிக்கும் போலீஸ்

சித்திரைக்கனியை முன்னிட்டு, குருவாயூரப்பன் கோவிலுக்கு சென்ற சித்ராவும், மித்ராவும், சுவாமி தரிசனம் செய்த பின், வெளியே வந்து, பிரகாரத்தில் அமர்ந்தனர்.

''என்னக்கா… கொரோனா தடுப்பூசி போட்டாச்சா. நான் போன வாரம் தான் போட்டேன்,'' என்றாள் மித்ரா.

''இல்ல மித்து, அப்படியே ஜி.எச்., வரைக்கும் போலாம்டி. தடுப்பூசி போட்டுட்டு, வீட்டுக்கு போயிடலாம்'' என்றாள் சித்ரா.

உடனே, அரசு மருத்துவமனைக்கு சென்று, வரிசையில் காத்திருந்தனர்.''போன வாரம் தடுப்பூசி திருவிழாவில, 45 வயசுக்கு மேல உள்ளவங்க, ஊசி போட வந்திருக்காங்க. ரொம்ப நேரம் காத்திருந்தும், ஊசி போடலையாம். ஆனா, வேறவேற துறைல இருக்கற, குறைஞ்ச வயசுக்காரங்க, ஊசி போட்டுட்டு வந்து இருக்காங்க. இத பாத்து, காத்திருந்தவங்க கேள்வி கேட்டிருக்காங்க,''

''ஒரு கட்டத்துல, மக்களுக்கும், டாக்டர், பணியாளர்களுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டு, கைகலப்பு வரை போயிருக்கு. அதுக்கப்புறம், டாக்டர்ங்க ஊசி போடறத நிறுத்திட்டாங்க. அங்க போன போலீஸ்காரங்க, இந்த விவகாரத்தை கண்டுக்கவே இல்லையாம். முன் யோசனை இல்லாம செய்யப்பட்ட ஏற்பாட்டால, மக்கள், ரொம்ப சிரமப்பட்டுட்டாங்க,'' என்றாள் சித்ரா.

அதன்பின், சித்ரா தடுப்பூசி போட்டு கொண்ட பின், இருவரும் கிளம்பினர்.''டிஸ்ட்ரிக்ட் போலீஸ்காரங்களை பார்த்து, சிட்டி' போலீஸ்காரங்க ஏங்குறாங்க,'' என, போலீஸ் மேட்டருக்கு தாவினாள் மித்ரா.

''அப்படி என்ன நடந்துச்சு?''

''தேர்தல் பணிச்சுமைல இருந்த டிஸ்ட்ரிக்ட் போலீஸ்காரங்களுக்கு, மூனு நாள் ரொட்டேஷனில் லீவு கொடுத்திருக்காங்க. இதனால, போலீஸ்காரங்களும் சந்தோஷமா, லீவு எடுத்துட்டு 'டியூட்டி'க்கு திரும்பி வர்றாங்க. இதை பார்த்த 'சிட்டி' போலீஸ்காரங்க, நாமளும் தான், எலக்ஷன் டைம்ல ரொம்ப கஷ்டப்பட்டிருக்கோம். நம்ப ஆபீசரும் கொஞ்சம் மனசு வச்சா என்னவாம்?னு, புலம்பல் சத்தம் ஓவரா கேட்குதாம்,'' என்றாள் மித்ரா.

''ஆமாம், நானும் கேள்விப்பட்டேன். எல்லாத்துக்கும் ஒரேமாதிரி லீவு கொடுத்துட்டு போகலாம்,'' என்ற சித்ரா, ''சிட்டி மதுவிலக்கில மூனு பேர் ரொம்பவே செழிப்பா இருக்காங்களாம்,'' என, அடுத்த தகவலுக்கு தாவினாள்.

''அப்படியாக்கா?''

''ஆமான்டி... மதுவிலக்கு பிரிவில இருக்கற மூனு பேர், நங்கூரம் போட்ட மாதிரி செட்டில் ஆகிட்டாங்க. மினிஸ்டரின் ஆசியோடு வந்துள்ள, ஸ்டேஷன் அதிகாரியும், இந்த மும்மூர்த்திகள கண்டுக்கறதில்லையாம்,''
''காலியா இருக்கற எஸ்.ஐ., போஸ்டிங்கும் அப்படியே இருக்காம். இதபத்தி தெரிஞ்சும், ஆபீசர் சைலன்ட்டா இருக்காரு, என்ன பண்றது?,'' என்ற சித்ரா, ''தங்க'மான பேரை வைச்சுகிட்டு, 'மணி' மோட்டிவோட செயல்படற இவங்க 'பாஸ்' மேல தான் முதல்ல ஆக்ஷன் எடுக்கணும் போல,'' என சொல்லி சிரித்தாள்.

''அக்கா, மதுவிலக்கு பிரிவுன்னு சொன்னதும் தான், நினைவுக்கு வருது. பல்லடத்தில, அதிக ரேட்டுக்கு சரக்கு விக்கறது, டூப்ளிகேட் சரக்கு, 'பார்'களுக்கு 'சில்லிங் சேல்ஸ்'னு தனி டிராக்கே ஓடிட்டு இருக்குதாம்,''

''பார்'க்காரங்க, போலீசுக்கு மட்டுமில்லாம, விஷயம் வெளியே கசியாம இருக்க, எல்லா துறை ஆட்களையும் கவனிச்சிடறாங்களாம். இந்த பட்ஜெட்டுக்கே மாசம், லட்சம் ரூபாய்க்கு மேல செலவாகுதாம். அப்படின்னா வருமானம் எப்படி இருக்கும்னு பார்த்துகோங்க,'' என்ற மித்ரா, ''மங்கலம் இச்சிப்பட்டி போலீஸ் செக்போஸ்ட் பின்னாடியே சரக்கு விற்பனை ஓஹோன்னு நடக்குதாம். பேசாம, செக்போஸ்டையே, 'டாஸ்மாக்' கடையா மாத்திட்டா தேவலைன்னு, பொதுமக்கள் கிண்டலா பேசறாங்களாம்,'' என, கூடுதல் தகவலையும் சொன்னாள்.

''மித்து, இதேமாதிரி தான், அவிநாசிக்கு பக்கத்துல இருக்கற, சேவூர்ல பல இடங்களில், டூவீலர்ல வைச்சு, சரக்கு விக்கிறாங்களாம்,''

''அப்ப மொபைல் டாஸ்மாக் கடைன்னு சொல்லு,'' சிரித்த சித்ரா, ''டாஸ்மாக் பார்ல கலாட்டா பண்ணவங்கள காப்பாத்த சிலர் 'ட்ரை' பண்றாங்களாம்'' என்றாள்.

''இதென்னக்கா புது கதை?'' என்றாள் மித்ரா.

''லிங்கேஸ்வரர் ஊர்ல, ரெண்டு வாரத்துக்கு முன்னாடி சில வாலிபர்கள், 'டாஸ்மாக்' பார்க்குள்ள நுழைஞ்சு கத்திய காண்பிச்சு மிரட்டி, பணம் பறிச்சிருக்காங்க. போலீஸ்காரங்களும், 'அரெஸ்ட்' பண்ணிட்டாங்க,''

''அவங்க இப்படியே ரவுடித்தனம் பண்றதால, 'குண்டாஸ்' சட்டத்தில் ஆக்ஷன் எடுக்க, போலீஸ் தயாராகிட்டு இருக்கு. இத தெரிஞ்சுகிட்ட, அந்த பசங்களுக்கு ஆதரவாக சிலர், கம்ப்ளைன்ட் கொடுத்த 'டாஸ்மாக்' பார்காரங்களுக்கு நெருக்கடி கொடுத்துட்டு வர்றாங்களாம். இந்த விவகாரத்தில, 'ஜூஸ்' குடிக்கலாம்னு, சிலர், பெரிய ஆபீசரை புடிச்சு, 'டீல்' பேசிட்டும் இருக்காங்களாம்,'' விளக்கினாள் சித்ரா.

''புடிச்சாலும் காசு... விட்டாலும் காசு... இந்த மாதிரி 'டீல்' நடத்த போலீஸ் டிபார்மென்ட்ல மட்டுமே தான் முடியும்,'' கிண்டலடித்த மித்ரா, ''இப்படின்னா, போலீசை நம்பாம, மக்களே களத்துல இறங்கின சம்பவம் குண்டடத்தில நடந்திருக்கு'' என, அடுத்த மேட்டர் பேசினாள் மித்ரா.

''அங்க இருக்கற ஒருத்தரோட வீட்டுக்குள்ள போன ஒருத்தர், மொபைல் போன், டூவீலரை திருடிட்டு போயிட்டாரு. ஆனா, போனையே, 'யூஸ்' பண்ணிட்டும் இருந்திருக்காங்க. இத தெரிஞ்சுகிட்ட, வீட்டோட உரிமையாளர், போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுத்திருக்காரு. ஆனா, போலீஸ் எந்த ஆக்ஷனும் எடுக்கலையாம்,''

''இதனால, பொருட்கள பறி கொடுத்தவர், சில பேரை கூட்டிட்டு, கோயமுத்துாருக்கு போயி, லோக்கல் போலீஸ்காரங்க உதவியோட, பலே ஆசாமியை பிடிச்சிட்டு வந்து, ஸ்டேஷனில் ஒப்படைச்சிருக்காங்க. இதப்பத்தி, பெரிய ஆபீசர்க்கு தகவல் சொல்ல வேண்டிய ஒற்றர்படையினர், ஒன்னுமே செய்யாம, ஜாலியாக இருக்காங்களாம்...

''ஆமான்டி, அப்பதானே கல்லா கட்ட முடியும்?'' சொன்ன சித்ரா, ''சூரியக்கட்சி தொழிற்சங்க நிர்வாகி மேலே அடுக்கடுக்காக புகார் வந்துட்டே இருக்குது,'' என்றாள்.

''அப்படி என்னக்கா ஆச்சு?''
''சூரியக்கட்சியை சேர்ந்த 'கரன்ட்' சம்மந்தப்பட்ட சங்கத்துல இருக்க நிர்வாகி, முதல் மனைவிய விவாகரத்து செய்ததா கூறி, உண்மைய மறைச்சு போன வருஷம் ரெண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டாரு. அவருக்கு முதல் மனைவி இருக்க விவகாரம், தெரிய வர, ரெண்டாவதா கல்யாணம் பண்ணவங்க, அவர விட்டு பிரிஞ்சு போயிட்டாங்க,''
''இதனால கடுப்பான நிர்வாகி, அந்த பெண்ணுக்கு குடும்ப ரீதியாகவும், வேலை செய்ற இடத்துலயும் பல வகைல இடையூறு செய்துட்டு வர்றாராம். 'வாட்ஸ் ஆப்' 'பேஸ்புக்' என சோஷியல் மீடியாவ்லயும் அவதுாறு பரப்பிட்டு இருக்காராம்,''
''இவரு மேல ஸ்டேஷன்ல புகார் கொடுத்தாலும், கட்சி பேரை சொல்லி ஈஸியா தப்பிச்சுக்கிறாராம். கட்சித்தலைமை தான் நடவடிக்கை எடுக்கோணும்ன்னு, கூட இருக்கறவங்களே பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.

அப்போது சித்ராவின் போன், 'என்ன கொடுமை சரவணன்...' என 'சந்திரமுகி' படத்தின் வசனம் ஒலித்தது. ''ஓ.கே., அங்கிள். இந்த வாரம் இ.பி., ஆபீசுக்கு போய் பாத்திடலாம்'' என பேசினாள்.

''ஆபீசர் மேல, வில்லேஜ் அசிஸ்டென்ட்ஸ் 'காட்டமா' இருக்காங்களாம்க்கா,''
''இது எங்கடி…''

''சவுத் தாலுகா ஆபீஸ்ல தான், வில்லேஜ் அசிஸ்டென்களுக்கு, அரசிடமிருந்து வர்ற வேண்டிய பணத்தை சீக்கிரமா வழங்க ஒப்புதல் வழங்க வேண்டிய ஒரு ஆபீசர் 'கமிஷன்' எதிர்பார்ப்பில, இழுத்தடிக்கிறாராம்,''
''இந்த விவகாரம் போலீசுக்கு போனதால, சம்பந்தப்பட்ட அந்த ஸ்டாப்பை கூப்பிட்டு என்கொயரியும் பண்ணினாங்க. ஆனா, வேலைய தட்டிப்பறிக்க பலரும் சேர்ந்து பழி வாங்குறாங்கன்னு, சொல்லி, எஸ்கேப் ஆயிட்டாராம்,''வழியில், 'கந்தசாமி' கோவில் வரவே, இருவரும் வெளியில் நின்றவாறே சுவாமி தரிசனம் செய்து மீண்டும் புறப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X