ரூ. 30 கோடி ரேட்டு... ரூ. 15 கோடி 'வெட்டு' : ‛ஆஸ்பத்திரியை கேள்'... மிரட்டும் ஆளுங்கட்சி ‛ஆள்'

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021
Share
Advertisement
வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு அறிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாவா, இருக்கு,'' என, சந்தேகத்தோடு ஆரம்பித்தாள்.''ஆமாப்பா, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றதை கேட்டா, பயமாத்தான் இருக்கு. ஆனா, ஜனங்கள்ட்ட பயமில்லை. வேலைக்கு
 ரூ. 30 கோடி ரேட்டு... ரூ. 15 கோடி 'வெட்டு' : ‛ஆஸ்பத்திரியை கேள்'... மிரட்டும் ஆளுங்கட்சி ‛ஆள்'

வீட்டு வராண்டாவில் அமர்ந்து, நாளிதழ்களை புரட்டிக் கொண்டிருந்தாள் சித்ரா.

பில்டர் காபி கொடுத்து உபசரித்த மித்ரா, ''என்னக்கா, மறுபடியும் கொரோனா கட்டுப்பாடு அறிவிச்சிருக்காங்க. அந்தளவுக்கு நிலைமை ரொம்ப மோசமாவா, இருக்கு,'' என, சந்தேகத்தோடு ஆரம்பித்தாள்.

''ஆமாப்பா, ஹெல்த் டிபார்ட்மென்ட்காரங்க சொல்றதை கேட்டா, பயமாத்தான் இருக்கு. ஆனா, ஜனங்கள்ட்ட பயமில்லை. வேலைக்கு போயி, பணம் சம்பாதிச்சாதான், குடும்பத்தை காப்பாத்த முடியுங்கிற நிலையில இருக்கறவங்க, வைரஸை பத்தி கவலைப்படாம, தைரியமா வெளியே சுத்துறாங்க,'' என்றபடி, காபியை உறிஞ்சினாள் சித்ரா.
''தடுப்பூசியும் பற்றாக்குறையா இருக்கறதா, கேள்விப்பட்டேனே, உண்மையா,''

''யெஸ், மித்து! உண்மைதான். சென்னையில இருந்து தடுப்பூசி ஒதுக்கீட்டை கொஞ்சம் கொஞ்சமா குறைச்சுக்கிட்டு இருக்காங்க. 7,000 டோஸ் தடுப்பூசி வேணும்னா, 4,000 தான் கொடுக்குறாங்க. அதனால, தடுப்பூசி போடுற மையங்களின் எண்ணிக்கையும் குறைச்சிட்டாங்க. நிலைமைய சமாளிக்க, பக்கத்து மாவட்டத்துல கையேந்திக்கிட்டு இருக்காங்க,''

''தேர்தல் பரப்புரைக்கு போன, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பயத்துல இருக்காங்களாமே,'' என, 'ரூட்' மாறினாள் மித்ரா.

''அதுவா, போத்தனுாரை சேர்ந்த அ.தி.மு.க., பிரமுகருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கு. எவ்வித பரிசோதனையும் செய்யாம, ரொம்பவும் அலட்சியமா இருந்திருக்காரு. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, அவரு இறந்துட்டாரு. ஆளுங்கட்சி வி.ஐ.பி., மற்றும் வேட்பாளர்கள் சிலருடன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்தாராம். அதனால, ஆளுங்கட்சி பிரமுகர்கள் பலரும் பயத்துல இருக்காங்க; வீட்டிலேயே தனிமையில இருக்காங்களாம்,''

''ஆத்துப்பாலத்துக்கு தெற்கே இருக்கிற ஆஸ்பத்திரி உரிமையாளர் ஒருத்தரை, ஆளுங்கட்சி வட்டாரம் மிரட்டுதாமே,''

''ஏகப்பட்ட கடன் இருக்கறதுனால, ஆஸ்பத்திரியை விக்கிறதுக்கு, டாக்டர் முடிவு செஞ்சிருக்காரு. அதிகாரத்துல கொடி கட்டி பறந்த பிரமுகர்கள், ஆஸ்பத்திரியை விலை பேசியிருக்காங்க. 30 'சி' சொல்லி இருக்காரு, டாக்டர். ஆனா, 15 'சி'க்கு கேட்டு, மிரட்டி இருக்காங்களாம். இதுவரைக்கும் டாக்டர் தரப்பு எழுதிக் கொடுக்கலை. ஓட்டு எண்ணிக்கைக்கு பிறகு, என்னாகும்னு தெரியலை,''
''அதெல்லாம் இருக்கட்டும். ஓட்டு எண்ணுற மையத்துல தெனமும் சச்சரவா இருக்குதே. எந்த வசதியும் செஞ்சு கொடுக்கலையா,''

''மித்து, கவுன்டிங் சென்டரை ரொம்ப கவனமா பார்த்துக்கங்கன்னு, தி.மு.க., தலைமை கறாரா உத்தரவு போட்டிருக்கு. அதனால, நடுராத்திரியில் கூட வேட்பாளர்கள் விசாரிக்கப் போறாங்க. லேசா சந்தேகம் ஏற்பட்டா, உடனே கூப்பிடுங்கன்னு, எல்லா ஏஜன்ட்டுகளுக்கும் வேட்பாளர் தரப்புல சொல்லியிருக்காங்க,''

''எலக்ட்ரீசியன், 'சிசி டிவி' கேமரா மாட்டுறவங்க, கவுன்டிங் வேலைக்கு தேவையான ஏற்பாடு செய்ய வர்றங்களிடம் ஐடி கார்டு கேட்டு நச்சரிக்கிறாங்க. ஒரு வினாடி 'சிசி டிவி' புட்டேஜ் கட் ஆனாலும், ரவுசு பண்றாங்க. எல்லாத்துக்கும் பொட்டிய மாத்திருவாங்கன்னு பயம்,''

''இன்னும், 12 நாள் இருக்கு; இன்னும் எவ்வளவு பிரச்னை வருமோன்னு போலீஸ்காரங்க பயந்துட்டு இருகக்காங்க. பிரச்னை பண்ணுறது தி.மு.க., கூட்டணி கட்சிக்காரங்க மட்டும்தான். அ.தி.மு.க.,வினர் இருக்குற எடமே தெரியலை. கமல் கட்சி, தினகரன் கட்சி, சீமான் கட்சிக்காரங்க எதைப்பத்தியும் கண்டுக்காம இருக்காங்க,''

''கமல் கட்சிக்காரங்க, இப்பவே வார்டுக்கு வார்டு ஆபீஸ் தேடுறதா சொல்றாங்களே,'' என, வம்புக்கு இழுத்தாள் மித்ரா.

''ஆமாப்பா, உண்மைதான்! கமல், தேர்தல் பரப்புரை செஞ்சப்போ, வார்டுக்கு ஒரு ஆபீஸ் அமைப்போம். குறைதீர்க்கும் மையங்களா செயல்படும்னு சொல்லியிருந்தாரு. அதனால, இடம் தேடுற வேலையில கட்சிக்காரங்க இருக்காங்க,''

''ராஜ வீதி தேர்நிலைத்திடலுக்கு பக்கத்துல, கார் பார்க்கிங் வசதியோடு, கான்கிரீட் கட்டடமா இடம் தேடியிருக்காங்க. வாடகை எவ்வளவா இருந்தாலும் பரவாயில்லை; 1,200 சதுரடி இருக்கணும்; கண்டிப்பா ரெண்டு ரூம் இருக்கணும்னு சொல்லி, ஆட்டோ டிரைவர்களிடம் மொபைல் போன் எண் கொடுத்துட்டு போயிருக்காங்க. இதே மாதிரி, ஒவ்வொரு வார்டிலும் இடம் தேடிட்டு இருக்காங்க,''

''அக்கா, இன்னும் ஓட்டு எண்ணிக்கையே நடக்கலையே,''

''மித்து, ஜெயிக்கறது, தோற்கறதை பத்தி, அவுங்க கவலைப்படலையாம். நம்மூர்லேயே முகாமிட்டு, வீதி வீதியா கமல் பிரசாரம் செஞ்சதுனால, லோக்சபா எலக்சனை விட, கூடுதலா ஓட்டு விழும்னு நம்புறாங்க,''

''அடுத்த கட்டமா, உள்ளாட்சி தேர்தல் நடத்துனா, வார்டு வார்டா ஆள் இறக்கியாகணுமே. அதனால, இப்பவே வேலைய ஆரம்பிச்சிட்டாங்களாம். வாக்குறுதியை நிறைவேத்துன மாதிரியும் ஆச்சு; மைக்ரோ லெவலில், கட்சி வேலை செய்ற மாதிரியும் ஆச்சுன்னு சொல்றாங்க,'' என்ற சித்ரா, ''ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்காம். தேவையான காய்கறி வாங்கிக்கலாம். மார்க்கெட்டுக்கு போகலாம்; வர்றீயா,'' என்றபடி, ஸ்கூட்டரை எடுத்து, வீட்டுக்கு வெளியே நிறுத்தினாள்.

''அக்கா, நான் ஓட்டுறேன்,'' என்றபடி, ஸ்டார்ட் செய்தாள் மித்ரா.
முக கவசம் அணிந்துகொண்டு, பின்இருக்கையில் அமர்ந்த சித்ரா, ''புது போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்தம், டெய்லி ஏதாச்சும் ஒரு பேஸ்புக் பதிவு போட்டுட்டே இருக்காராமே. இன்னைக்கு என்ன பதிவு போடப் போறாரோன்னு, சக அதிகாரிகளும், போலீஸ்காரங்களும் பயந்து நடுங்குறாங்களாமே,'' என, கேட்டாள்.
''அதுவா, போலீஸ்காரங்கன்னா, நேர்மையானவங்களா, 'மிடுக்'கா இருக்கணும்னு நெனைக்கிறாரு,''

''அதுக்கு, என்ன செய்யணும்னா, உளவுத்துறை போலீஸ்காரங்கள மாத்துனா மாதிரி, பத்து வருஷமா, ஒரே ஸ்டேஷன்ல பெஞ்சு தேய்க்கிற ரைட்டர்களையும், வெவ்வேறு ஊர்களுக்கு மாத்துனா, நல்லாயிருக்கும்,''

''அவங்கள மாத்துனா, சிஸ்டம் சரியாயிடுமா என்ன,'' என, அப்பாவியாய் கேட்டாள் சித்ரா.

''என்னக்கா, இப்படி கேட்டுட்டீங்க. அவுங்கதான், ரோந்து பணி போலீஸ்காரங்களையே நியமிப்பாங்க. மாமூல் கொடுக்குற ஆளுங்கள மட்டுமே இவுங்க ரோந்து பணிக்கு நியமிப்பாங்க. மத்தவங்கள, கொரோனா தடுப்பு பணிக்கு ஒதுக்குவாங்க.இவுங்க சொல்றததான், இன்ஸ்., கேட்டாகனுங்கறது எழுதப்படாத விதி. ஸ்டேஷன் ரைட்டர்களுக்கு, ஒரு 'ரைடு' விட்டா போதும்; காவல்துறை உடுப்புக்கு மறுபடியும் 'மிடுக்' தோற்றம் தானா வரும்,'' என்றபடி, தியாகி குமரன் மார்க்கெட் நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் மித்ரா.

கலெக்டர் ஆபீசை கடந்து சென்றபோது, ''மித்து, எலக்சன் முடிஞ்சும், கவர்மென்ட் ஆபீசுல இருக்கறவங்க எந்த வேலையுமே செய்றதில்லையாமே,'' என, கேட்டாள்.

''ஆமாக்கா, தாலுகா ஆபீசுல முறையிட்டாலும், யூனியன் ஆபீசுல புகார் கொடுத்தாலும் கண்டுக்கறதில்லை. எலக்சன் முடிவு தெரிஞ்சதுக்கப்புறம் பார்த்துக்கலாம்னு, ரொம்பவும் 'அசால்ட்'டா இருக்காங்க,''

''அதுக்காக, ஓட்டு எண்ணி முடிக்கற வரைக்கும், மக்கள் கஷ்டத்துல இருக்கணுமா, என்ன,'' என, கொதித்தாள் சித்ரா.''என்னக்கா, நீங்களே இப்படி நெனைக்கலாமா. கரன்சியை தட்டி விட்டா, அரசாங்க ஆபீசுல வேலை கச்சிதமா நடக்குதாம். சென்ட்ரல் வட்டார போக்குவரத்து ஆபீசுக்கு போயி பாருங்க. ஒவ்வொரு வேலைக்கும், எவ்வளவு லஞ்சம்னு ஒரு 'ரேட்' பிக்ஸ் பண்ணியிருக்காங்க.கொரோனாவுக்கு அப்புறம் லஞ்சத்தையும் எக்குத்தப்பா ஏத்திட்டாங்களாம். லைசென்ஸ் வாங்கப் போறவங்க மணிபர்ஸ் காலியாகுதாம்,'' என்றபடி, தியாகி குமரன் மார்க்கெட் முன், ஸ்கூட்டரை ஓரங்கட்டினாள் மித்ரா.

''நீ சொல்றது நம்புற மாதிரி தெரியலையே. மோட்டார் வாகன ஆய்வாளர்கள், யாரையும் அதட்டி கூட பேச மாட்டாங்களே. லஞ்சமே வாங்காம, வேலையை கரெக்டா செஞ்சு கொடுப்பாங்கன்னு கேள்விப்பட்டிருக்கேனே,''

''அதுவும் உண்மைதான். இந்தக்காலத்துல நேர்மையா இருக்கறவங்களுக்கு மரியாதை எங்கே கெடைக்குது. நேர்மையான குழுவினரை மொத்தமா மாத்திட்டாங்க. புதுசா வந்திருக்கிற ஜோடி, லஞ்ச ரேட் பிக்ஸ் பண்ணி வசூலிக்குது. கொரோனாவுக்கு பயந்து, லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ்காரங்களும் எட்டிப் பார்க்க மாட்டேங்கிறாங்க,''

''இதே மாதிரி, சர்வேயர் ஒருத்தரும் கரன்சி இல்லாம, கையெழுத்து போடுறதில்லைன்னு சொன்னாங்களே,''

''அதுவா, கார்ப்பரேஷன் கிழக்கு மண்டல சர்வேயர் ஆபீசுல, கொடுக்குறதை கொடுங்கன்னு கேட்டு வாங்குறாங்களாம். கலெக்டர் ஆபீசுக்கும், கமிஷனர் ஆபீசுக்கும் புகார் போயிருக்கு நடவடிக்கை எடுக்குறாங்களான்னு பார்ப்போம்,'' என்றபடி, தக்காளி பொறுக்க ஆரம்பித்தாள் மித்ரா.

பழங்கள் வாங்கிய சித்ரா, ''கார்ப்பரேஷன் கமிஷனரும் கூட, அதிகாரிகளை காப்பாத்துற மாதிரி ஸ்டேட்மென்ட் கொடுத்திருந்தாரே,'' என, கிளறினாள்.

''ஸ்மார்ட் சிட்டி குளக்கரை சுவர் இடிஞ்சதை கேட்குறீங்களா. கான்கிரீட் சுவர் கட்டுறதுக்கு பதிலா, செங்கல் சுவர் கட்டியிருக்காங்க. இன்ஜி., செக்சன் அதிகாரிங்க மீது துறை ரீதியா நடவடிக்கை எடுக்கணும்; ஆனா, பக்கத்துல இருக்கற இடம் சம்பந்தமா எல்லை தகராறு இருக்கு; அதனால, தற்காலிக சுவர் கட்டியிருந்தோம்னு, ஒரு கமிஷனரே, சப்பைக்கட்டு காரணம் சொல்லி, மழுப்பியிருந்தாரு,''

''சுவர் கட்டி, வர்ணம் பூசி, இரும்பு கிரில் வச்சிருந்தாங்க. முழுசா வேலை முடியலைன்னு தெரிஞ்சும், தேர்தல் அவசரத்துல பயன்பாட்டுக்கு திறந்து வச்சது, அவருதான்.குளத்தை சுத்திப்பார்க்க வந்த யாராவது, சுவர் மீது சாய்ஞ்சு நின்று, மண்ணுக்குள்ள புதைச்சிருந்தா என்னாயிருக்கும். அதனால, நடவடிக்கை கடுமையா இருக்கணும்னு மக்கள் எதிர்பார்க்குறாங்க,'' என்றபடி, கூடையில், காய்கறிகளை 'பேக்' செய்தாள் மித்ரா.

ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்த சித்ரா, ''ஜெயிலுக்குள்ள என்ன நடந்தாலும், வெளியே கசியறதில்லையே, உள்ளேயே அமுக்கிடுறாங்களா'' என, கிளறினாள்.

''அதுவாப்பா, சென்ட்ரல் ஜெயில்ல நடக்குறதை உளவு பார்த்துச் சொல்றதுக்கு, வழக்கமா போலீஸ் டிபார்ட்மென்ட்டுல இருந்து ஆட்களை நியமிக்கறது வழக்கம். ரெண்டு வருஷமா அப்படி யாரையுமே நியமிக்கலை. அதுக்கு பதிலா, ஜெயில் டிபார்ட்மென்ட்டை சேர்ந்தவங்களையே நியமிச்சிருக்காங்க. அதனால, ஜெயில் மேட்டர் எதுவுமே வெளியே வர மாட்டேங்குது,''

''திறந்தவெளி ஜெயில்ல ஆடு, மாடு செத்தா, கால்நடைத்துறை டாக்டரை வரவழைச்சு, போஸ்ட் மார்ட்டம் செய்யணும். அப்படி எதுவுமே செய்யாம, மூடி மறைச்சிடுறாங்களாம்,''

''அக்கா, ஆடுன்னு சொன்னதும் எனக்கு ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. கொஞ்ச நாளைக்கு முன்னாடி, மத்தம்பாளையத்துல, கவர்மென்ட் பஸ் மோதி, 16 ஆடு செத்துச்சு. சம்பவம், நைட், 7:00 மணிக்கு நடந்துச்சு. போலீஸ்காரங்க விசாரிச்சப்போ, யாரோ, ரெண்டு ஆட்டை ஆட்டைய போட்டுட்டாங்களாம். இப்படியும் மனிதர்களான்னு ஆட்டுக்காரர் நொந்து போயிட்டாராம்,''

''அடக்கொடுமையே,'' என்றபடி, வீட்டை நோக்கி, ஸ்கூட்டரை முறுக்கினாள் சித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X