பொது செய்தி

தமிழ்நாடு

வாசகர்களே பயம் இல்லாமல் தடுப்பூசி எடுத்து கொள்ளுங்கள் !

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (45)
Share
Advertisement
'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத்


'தடுப்பூசி போட்டுக் கொள்வதால், கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்புக்களை தடுக்க முடியும். தகுதி வாய்ந்த அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.



latest tamil news



இந்தியாவில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளுக்கு, மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து, இந்தாண்டு, ஜன., 16 முதல், நாடு முழுதும் தடுப்பூசி போடப்படுகிறது. தமிழகத்தை பொருத்தவரையில், முதலில் தடுப்பூசி குறித்த தயக்கம் இருந்தாலும், அதன்பின், மக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, 45 வயதுக்கு மேற்பட்டவர்களில், தினமும், 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படகிறது.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் விவேக், தாமாக முன்வந்து, அவரது குழுவினருடன் தடுப்பூசி போட்டு கொண்டார். அடுத்தநாள் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்த நிலையில், தடுப்பூசியால் தான், அவர் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பகிரப்படுகின்றன. ஆனால், 'நடிகர் விவேக் இறப்பிற்கு, தடுப்பூசி, 1 சதவீதம் கூட காரணமில்லை. மாரடைப்பு, யாருக்கு எப்போது வேண்டுமானலும் வரலாம்' என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அவர்கள் மேலும் கூறியதாவது:

இஸ்ரேல் நாட்டில், அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு, மக்களின் வாழ்க்கை இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதேநிலையை, இந்தியாவிலும் கொண்டு வர, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டாலும், அதன் வீரியம் குறைவாக இருக்கும். அதன் வாயிலாக, மற்றவர்களுக்கு தொற்று பரவாது. அவர்களையும் பெரிய அளவில் பாதிக்காது. ஆனால், தடுப்பூசி போடாத நிலையில், ஒவ்வொரு முறையும் தொற்று கட்டுக்குள் வந்தாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லையென்றால், மீண்டும் அதிகரித்து, ஒவ்வொரு ஆண்டும் பாதிப்பை ஏற்படுத்தி கொண்டே இருக்கும். எனவே, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டு, நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டும்.


- டாக்டர் ஆனந்தகுமார், கதிரியக்க சிகிச்சை நிபுணர் மற்றும் ஒருங்கிணைப்பு அதிகாரி, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை



தடுப்பூசி போடுவதால், மாரடைப்பு ஏற்படும் என்பது தவறான தகவல். நன்றாக இருந்த நபர் கூட, திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததை அடிக்கடி கேட்டிருப்போம். அதேபோல், நடிகர் விவேக் மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை. பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின், தடுப்பூசி பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே, தகுதியான அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் பஷீர் அகமது, அலர்ஜி துறை நிபுணர், அப்பல்லோ மருத்துவமனை, சென்னை



கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். எந்தவித பக்க விளைவுகளும் ஏற்படாது. தடுப்பூசி போடாதோருக்கு அதிக பாதிப்பு ஏற்படுவதுடன், உயிரிழப்பும் ஏற்படலாம். எனவே, தாமதமே கூடாது.


- சீ.ராதிகாதேவி, தலைமை மருத்துவர், திருத்தணி அரசு பொது மருத்துவமனை .



இந்தியாவின், கோவாக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகளும் பாதுகாப்பானது. தடுப்பூசி போட்டு கொண்ட பின், கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. தொற்று ஏற்பட்டாலும், இரண்டு, மூன்று நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவர். குறிப்பாக, 82 வயதான துரைமுருகனுக்கு தொற்று ஏற்பட்டாலும், அவர், தடுப்பூசி போட்டு கொண்டதால், பெரிய அளவிலான பாதிப்பின்றி நலமுடன் இருக்கிறார். மேலும், தடுப்பூசி போட்டு கொள்வதால், மாரடைப்பு ஏற்படாது. என்னிடம் வரும், 100க்கும் மேற்பட்ட இதய நோயாளிகள், தடுப்பூசிகள் போட்டப்பின், நலமுடன் வாழ்கின்றனர். தடுப்பூசியால் சிறு, சிறு பிரச்னைகள் வரலாம். ஆனால், உயிரிழப்பை ஏற்படுத்தாது. எனவே, அனைவரும் தவறாமல், தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


- டாக்டர் அர்த்தநாரி, இதய சிகிச்சை நிபுணர், சென்னை.



இரண்டு டோஸ், கோவாக்சின் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டேன். என்னுடைய சக மருத்துவ ஊழியர்கள் அனைவரும தடுப்பு ஊசி போட்டுக் கொண்டோம். எந்த பயமும் இல்லாமல் நோயாளிகளுக்கு சிகிச்சை தர முடிகிறது. சிசேரியன் தேவைப்படும் நேரத்தில், தைரியமாக அருகில் சென்று மயக்க மருந்து தர முடிகிறது.


-- டாக்டர் ஆர்.தினேஷ், மயக்கவியல் மருத்துவர், சென்னை.



கோவிஷீல்டு தடுப்பு ஊசியின் இரண்டு டோஸ் போட்டுக் கொண்டேன். எனக்கு எந்த பக்க விளைவும் இல்லை. குழந்தைகள் நல மருத்துவரான எனக்கு, தடுப்பு ஊசி போட்ட பின், தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வு அதிகரித்து உள்ளது. எந்தவித தயக்கமும் பயமும் இல்லாமல் குழந்தை களுக்கு சிகிச்சை தர முடிகிறது. வைரஸ் தொற்று, கட்டுப்பாடின்றி பரவும் இந்த நேரத்தில், நம்மிடம் உள்ள ஒரே பாதுகாப்பு ஆயுதம் தடுப்பு ஊசிகள் மட்டுமே. தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது, ஒவ்வொருவரின் கடமை என்பதை உணர்ந்து, அதை செய்ய வேண்டும்.


-டாக்டர் என்.கண்ணன், மருத்துவ குழு இயக்குனர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர், மேதா மருத்துவமனை, சென்னை.



latest tamil news




முன் கள பணியாளர்களான, நாங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, தடுப்பூசியால் பாதுகாப்பு பெற்றுள்ளோம். இன்றைய நிலையில், தடுப்பூசி, மக்களின் நலனுக்கான, வரப்பிரசாதம். அதை அனைவரும் பெற வேண்டும். இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தினமும், 50 முதல், 80 பேர் வரை, தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இணை நோய் உள்ளவர்கள், தடுப்பூசி போட்டுக்கொள்வது மிகவும் அவசியம்.


- டாக்டர் எம். திருமாவளவன், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், செங்குன்றம் .



கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பூசி விழிப்புணர்வு, கிராம மக்களிடம் அதிகரித்துள்ளது. அந்த வகையில், தினமும், 40 முதல், 50 பேர் வரை, இங்கு, தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.


-டாக்டர் ஜி.சங்கீதா, அரசு ஆரம்ப சுகாதார நிலையம், விளாங்காடுபாக்கம், புழல்.



கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசியும் மக்களுக்கு மிகவும் பாதுகாப்பானதுதான். இந்த தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படும் என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட துணை நோய் இருப்பவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டு, தான் எடுத்துக் கொள்ளும் வழக்கமாக மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். தடுப்பூசி குறித்து பல விதமான வதந்திகள் வலை தளத்திலும், இணைய தளத்திலும் உலா வருகின்றன. அவை பெரும்பாலும் தவறான செய்திகள். தடுப்பூசி குறித்து சந்தேகங்களை தங்களின் குடும்ப டாக்டரிடம் விளக்கம் கேட்டு தெளிவுப் படுத்திக் கொள்ளலாம்.


டாக்டர் ஆர்.எச்.சுந்தர், இதயநோய் சிறப்பு மருத்துவர், ஹரிஹரன் டயாபட்டீஸ் மற்றும் ஹார்ட் கேர் ஹாஸ்பிடல், நங்கநல்லுார்.




தடுப்பூசி செலுத்துவதால், நோயின் தீவிர தன்மையை குறைக்க முடியும். ஒரு வேளை, தடுப்பூசி செலுத்தி, நோய் வந்தாலும், மோசமான நிலைக்கு செல்வதை தடுக்கலாம். இதனுடன், மருத்துவர்கள் பரிந்துரைக்க கூடிய, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய, மருந்துகள் மற்றும் உணவுகளையும் பின்பற்ற வேண்டும்.
-டாக்டர் எம். மீனாட்சிசுந்தரம், குழந்தைகள் மருத்துவ துறை பேராசிரியர், தேசிய சித்த மருத்துவ நிறுவனம்.

மாநிலத்தின் பெரும் பகுதி மருத்துவமனைகளில், நோய்க்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி மையங்களை அதிகரித்து, பொது மக்களை தடுப்பூசி செலுத்த முன்வர வைக்க வேண்டும்.


-டாக்டர் எஸ். விஜயலட்சுமி, மகப்பேறு துறை சிறப்பு நிபுணர்.



ஒவ்வொரு வீட்டிற்கும் நேரிடையாக சென்று, தடுப்பூசி போடுவதற்கு, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தடுப்பூசி பரவலாக போட்டு முடிக்கும் வரை, கட்டுப்பாடுகளை தளர்த்தக்கூடாது. - டாக்டர் கோபி அய்யாசுவாமி, காது, மூக்கு, தொண்டை நிபுணர், குரோம்பேட்டை .
தடுப்பூசி போடுவதால் நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கிறது. தடுப்பூசி குறித்து, அச்சம் தேவைஇல்லை. இதய நோய், சீறுநீரக பாதிப்புள்ள உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தொடர்ந்து மருந்து உட்கொள்பவர்கள், மருத்துவரிடம் உரிய ஆலோசனை பெற்று, தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
டாக்டர்கள் மேலும் என்ன சொல்கின்றனர் ?
https://www.dinamalar.com/news_detail.asp?id=2752922

Advertisement




வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Annamalai - PUDUKKOTTAI,இந்தியா
21-ஏப்-202105:09:16 IST Report Abuse
N Annamalai உரக்க சொல்லவும் .நன்றி அனைத்து மருத்துவர்களுக்கும் .நீங்கள் பேச வேண்டிய தருணம் .அவசியம் பேசவும் .
Rate this:
Cancel
20-ஏப்-202121:12:17 IST Report Abuse
ஆப்பு முன்னாடிலேருந்தே தடுப்பூசி போட்டுக்க முன்வருபவர்களுக்கு ஊசியப் போடணும்னு எழுதியிருந்தேன். இந்த மகா தியாகிகள் வயசு பத்தாதுன்னு சொல்லி ஊசி மருந்துகளை வீண்டிச்சாங்க. இன்னிக்கி நிறைய பேர் தடுப்பூசி போட்டுக்க முன்வந்தாலும் தடுப்பூசி கிடையாது.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
20-ஏப்-202116:00:57 IST Report Abuse
g.s,rajan தடுப்பூசி போடுவதால் தமக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டுவிடுமோ வேறு ஏதாவது வகையில் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற இனம் புரியாத பீதி பொதுமக்களிடம் தற்போது மிக அதிகமாக ஏற்பட்டு விட்டது. கொரோனா தடுப்பு ஊசி குறித்த மக்களின் சந்தேகம் போக்கினால் மட்டுமே மக்கள் நிம்மதியுடன் ஊசி போட்டுக்கொள்வார்கள் .மக்களின் அச்சத்தைப் போக்குவதுதான் இப்போதைக்கு மத்திய .மாநில அரசுகளின் தலையாய கடமை .மக்களிடம் பீதி அதிகரித்து வருவதால் இது சற்று கடினமான பணி தான். ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X