தமிழ்நாடு

ஏன் தடுப்பூசி அவசியம்? பரப்பப்படும் வதந்திகளும், நிபுணர்களின் விளக்கமும்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021
Share
Advertisement
சென்னை :கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதுடன், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். எவ்வித ஆய்வறிக்கையும் இல்லாத தகவல்களை, சமூக வலைதளங்களில் வீணாக பகிர வேண்டாம் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.நம் நாட்டில், கொரோனா தொற்றை தடுக்க, கோவாக்சின், கோவிஷீல்டு என, இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது,
ஏன் தடுப்பூசி அவசியம்? பரப்பப்படும் வதந்திகளும், நிபுணர்களின் விளக்கமும்


சென்னை :கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதுடன், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். எவ்வித ஆய்வறிக்கையும் இல்லாத தகவல்களை, சமூக வலைதளங்களில் வீணாக பகிர வேண்டாம் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நம் நாட்டில், கொரோனா தொற்றை தடுக்க, கோவாக்சின், கோவிஷீல்டு என, இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சமூகத்தில் பரவலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே, 1ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டப்படி, அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டு கொள்ளும் பட்சத்தில், சமூக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தடுப்பூசி குறித்த பல்வகை சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார், பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை கட்டுப்படுத்துவதில், முக்கிய பங்காற்றி உள்ள இவர், தற்போது, மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள கொரோனா குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்தும் அளித்த பேட்டி:


கொரோனா தடுப்பூசி வேகமாக கண்டுப்பிடிக்கப்பட்டதால் சந்தேகம் உள்ளதே?


உலகின் பல்வேறு நாடுகளில், 50 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே, தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. 'பயோ டெக்' எனப்படும், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்த வளர்ச்சி காரணமாக தான், கொரோனா பரவ ஆரம்பித்து, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். இரண்டு தடுப்பூசிகளும், 100 சதவீதம் பாதுகாப்பானவை.


தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுமா?


கொரோனா தடுப்பூசியால், மாரடைப்பு, ரத்தம் உறைதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, போன்ற சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். இவையும், அனைவருக்கும் ஏற்படுவதில்லை. மற்றபடி, தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.


தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை என்ன?


தடுப்பூசி போடுவதே நன்மை தான். அதனால், நமக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். குறிப்பாக, நாம் தடுப்பூசி போடுவதால், அதன் பின் தொற்று ஏற்பட்டாலும், நமது உடல் உள்ளுறுப்புகள் பெரியளவில் பாதிக்கப்படாது.நோயின் தாக்கமும் குறைவாக இருக்கும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அனைவரும் தடுப்பூசி போடுவதால், போலியோ, டெங்கு உள்ளிட்ட நோய்களை போல், கொரோனா தொற்றையும் நாம் கட்டுப்படுத்தலாம்.


தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை எவ்வளவு?


கொரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரையில், இவ்வளவு சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதல்ல. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதால், 90 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம். இதனால், ஆண்டாண்டுக்கு கொரோனாபரவலின் வீரியம் இருக்காது.


தடுப்பூசி போட்டப்பின், முக கவசம் ஏன் அணிய வேண்டும்?


தடுப்பூசி போட்ட உடனேயே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடாது. முதல் 'டோஸ்' தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும், நான்கு முதல், எட்டு வாரங்கள் இடைவெளி உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தான், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதன்பின், தொற்று ஏற்படாது என்றும் கூற முடியாது. அதனால், அனைவரும் தடுப்பூசி போட்டபின் தொற்று கட்டுக்குள் வரும் வரை, முககவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு மட்டும் முக கவசம் அல்ல. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் முக கவசம் அவசியம்.


கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டில் எது சிறந்தது?


இந்த இரண்டு மருந்துகளும், தயாரிப்பு முறையில் மட்டுமே மாற்றம் உள்ளன. மற்றபடி, இரண்டும், ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தியை தான் மக்களுக்கு வழங்குகின்றன. பெரிய அளவிலான பக்கவிளைவுகள் இல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.


தடுப்பூசிக்கு முன், சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை அவசியமா?


சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை என்பது, உடலில் வேறு ஏதேனும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டறிய தான் செய்யப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது, அவரது புற்றுநோய் கட்டியை வகைப்படுத்தி காட்டலாம். அவ்வாறு காட்டும்போது, அவர் தடுப்பூசி போடக்கூடாது என்றில்லை. அவர்களுக்கு தான், முக்கியமாக தடுப்பூசி தேவை. இந்த பரிசோதனை, தடுப்பூசி போட்டு கொள்ளலாமா, கூடாதா என்பதற்காக அல்ல. அதனால், தடுப்பூசி போடுவதற்கு முன், சி.ஆர்.பி., பரிசோதனை அவசியமில்லை. அதற்கு பதிலாக, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்வது போதுமானது.


யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?


அரசு அறிவித்துள்ள படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களே. கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட வேண்டாம். மற்ற அனைவரும் தடுப்பூசி போடலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயாளிகள், தடுப்பூசி போடுவதற்கு முன், அவர்கள் சிகிச்சை பெறும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின், போட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு


உலகம் முழுதும் பரவி உள்ள கொரோனா பாதிப்பை தடுக்க, தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது. அனைத்து தடுப்பூசிகளிலும், சிறு சிறு பாதிப்புகள் இருக்க தான் செய்யும். உதாரணமாக, போலியோ சொட்டு மருந்தை பொறுத்தவரையில், இரண்டு கோடி பேரில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். போலியோவை அனைவருக்கும் வழங்கியதால் தான், அந்நோயை கட்டுப்படுத்த முடிந்தது.இந்தியாவில், 1.7 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இயற்கையாகவே, 30 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருக்கும். மற்ற அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த வேண்டுமென்றால், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதுவரை, தடுப்பூசி போட்டு கொண்ட, 12 கோடி நபர்களில், யாருக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அது குறித்து ஆய்வுகளும் இல்லை. எனவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை புறம்தள்ளிவிட்டு, தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.- டாக்டர். ஜெயலால், தேசிய தலைவர், இந்திய மருத்துவ சங்கம்.


அச்சம் வேண்டாம்



டாக்டர் என்ற முறையில், என்னிடம் வரும் நோயாளியின் உயிரைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கவச உடை அணிந்து, நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். என் பெற்றோர், சக மருத்துவர்கள் அனைவரும், இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாள் காய்ச்சல் வந்தது. அவ்வளவு தான். இன்றைய நிலையில், தடுப்பூசி ஒன்று தான், தொற்றை வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே வழி. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.டாக்டர் மன்சூர் ஷேக்,அவசர சிகிச்சை மருத்துவ ஆலோசகர், சென்னை.

'கோவாக்சின், கோவிஷீல்டு' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை. எங்கள் மருத்துவமனையில், நாள்தோறும், 400 முதல், 500 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.சி. பழனிவேல், 48,தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, தடுப்பு மருந்து போட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம், தற்போது அதிகமாகி விட்டது. இது அவசியம் இல்லாத ஒன்று. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், ஏற்கனவே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கலாம். குழந்தைப் பருவத்தில் அம்மைக்கு தடுப்பூசி போட்ட போது காய்ச்சல் வந்திருக்கும். அதுபோல தான் தற்போது சிலருக்கு காய்ச்சல் வருவது. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி போடாவிட்டால் தொற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.டாக்டர் நீலமேகம்,தலைவர், குடல், இரைப்பை நுண் துளை துறை,போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை.

தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேகமாக தொற்று பரவுகிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான், இரண்டு பேரில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.டாக்டர் பி.கண்ணன்,மீனாட்சி மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மையம், மதுரை.

தடுப்பூசி நடைமுறைக்கு வந்து, இரண்டு டோஸ் போட்ட பின், தைரியமாக நோயாளியின் அருகில் சென்று சிகிச்சை தர முடிகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் லேசான உடல் வலி தவிர, பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. நமக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் அது நன்மை விளைவிக்கும்.டாக்டர் ரோஸ் ரேச்சல்,தலைவர், இன்டர்னல் மெடிசின், மேத்தா மருத்துவமனை, சென்னை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X