பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி ஒன்றே தற்போது 'உயிர் காப்பான்': வாசகர்களே... பயம் இல்லாமல் செலுத்திக்கொள்ளுங்கள்!

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
கோவை: 'கொரோனா தடுப்பூசி தான் நமக்கு உயிர் காப்பான். தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்' என, கோவை தொழில் துறையினர் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகின்றனர்.கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, கோவை தொழில் துறையினர் கூறியதாவது:நமக்கும்,பிறருக்கும் பாதுகாப்பு!கோவை மாவட்ட சிறு தொழில்கள்
தடுப்பூசி,உயிர் காப்பான், வாசகர், பயம்

கோவை: 'கொரோனா தடுப்பூசி தான் நமக்கு உயிர் காப்பான். தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு அளித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்' என, கோவை தொழில் துறையினர் அனைவருக்கும் தன்னம்பிக்கை ஊட்டுகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட, கோவை தொழில் துறையினர் கூறியதாவது:


latest tamil newsநமக்கும்,பிறருக்கும் பாதுகாப்பு!கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தலைவர் ( கொடிசியா) ரமேஷ் பாபு: எந்த ஒரு தடுப்பூசி போட்டுக்கொண்டாலும் காய்ச்சல் வருவது இயல்புதான். காய்ச்சல் வந்தால் தடுப்பூசி வேலை செய்கிறது என்று அர்த்தம்.

காய்ச்சல் வரவில்லை என்றால், மருந்து வேலை செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. கொரோனா தடுப்பூசி போடும், 45 முதல், 60 வயது வரையிலானவர்களுக்கு காய்ச்சல், உடல் வலி வருகிறது. இது ஓரிரு நாளில் சரியாகிவிடும். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி போட்டு கொண்டு நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டு, பிறரையும் காப்பாற்ற வேண்டும்.


உயிருக்கு பாதுகாப்பு!தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்(சீமா) தலைவர் கார்த்திக்: எங்களது நிறுவனத்தில், 45 வயதிற்கும் மேற்பட்டவர்களுக்கு, 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளோம். அவர்களில் இருவருக்கு மட்டுமே லேசான காய்ச்சல் வந்தது.

அவர்களது குடும்பத்தினருக்கும் தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தியுள்ளோம். எனக்குத் தெரிந்து, முதல் தடுப்பூசி போட்டுக்கொண்டாலே உயிருக்கு ஆபத்தில்லை என தெரிகிறது. இரு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டால், 90 சதவீதம் பாதுகாப்பு என்கின்றனர். எனவே, அனைவரும் தைரியமாகவும், கட்டாயமாகவும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்.


பக்க விளைவு இல்லை!இந்திய தொழில் வர்த்தக சபை கோவை கிளை தலைவர் பாலசுப்பிரமணியன்: கொரோனா தடுப்பூசி தான் நமக்கு தடுப்பு மருந்து. மாஸ்க், கிருமிநாசினி போன்று தடுப்பூசியும் ஒரு முக்கிய அங்கம் தான். சரியான நேரத்தில் இரு தடுப்பு மருந்துகளையும் போட்டுக்கொள்ள வேண்டும். என்னுடன் சேர்ந்து, 500 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

யாருக்கும் எந்த பாதிப்பும், பக்கவிளைவுகளும் வரவில்லை. வெளிநாடுகளில், ரூ.18 ஆயிரத்து 500 செலவழித்து அதுவும் வரிசைகட்டி நின்று ஊசி போட்டு வருகின்றனர். ஆனால், நம் நாட்டில் அரசு மருத்துவமனைகள் இலவசமாகவும், தனியார் மருத்துவமனையில் நியாயமான விலையிலும் ஊசி போடப்படுகிறது. கொரோனா தடுப்பூசி என்பது உயிர் காப்பான் என்றே கூறலாம்.


அனைவரும் ஒத்துழைக்கணும்!தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்கம்(டேக்ட்) தலைவர் ஜேம்ஸ்: பாதுகாப்பு முறைக்குள் அனைவரும் வர கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம். தற்காப்பு நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைத்தால்தான் நோய் எதிர்ப்பு சக்தியை உள்வாங்க முடியும். இந்தியாவில், 13 கோடிக்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

சர்க்கரை உள்ளிட்ட நோய் பாதிப்புகளுக்கு ஆளானவர்கள் டாக்டர்கள் ஆலோசனைப்படி தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாங்களும் குறு, சிறு தொழில் முனைவோர் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த மருத்துவ முகாம் நடத்த ஏற்பாடு செய்து வருகிறோம்.


சமூகத்துக்கு பாதுகாப்பு!கோவை மாவட்ட கிரில் தயாரிப்பாளர்கள் நலச்சங்க தலைவர் ரவி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதால், எந்தவொரு பக்க விளைவுகளும் ஏற்படுவதில்லை. தடுப்பூசி போட்டுக் கொள்வதால் நம்மை மட்டுமின்றி, நம் சமூகத்தையும் பாதுகாக்கிறோம். அனைவரும் அரசுக்கு ஒத்துழைப்பு அளித்து சமூக கடமையாற்ற வேண்டும். 18வயது முதல் உள்ளவர்களுக்கும் இனி தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்பதால், அனைவரும் நாட்டின் நலனை கருத்தில் கொண்டு பங்களிப்பு அளிக்க வேண்டும்


இயல்புநிலை திரும்பும்!இந்திய ஜவுளித் தொழில் முனைவோர் கூட்டமைப்பு கன்வீனர் பிரபு தாமோதரன்: பிரிட்டன் நாட்டில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு அவர்கள் குறிப்பிடும் ஒரே காரணம் தடுப்பூசிதான். தமிழகம் போன்ற முன்னேறிய மாநிலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் ஆர்வம் செலுத்தி, மற்ற மாநிலங்களுக்கு முன் உதாரணமாக திகழ வேண்டும். எங்கள் உறுப்பினர்களின் ஆலைகளில் பணிபுரிபவர்கள், ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


'கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டதால், இரண்டாவது அலை வேகமாக பரவினாலும், உயிர் பயம் இன்றி, பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறோம். மக்கள் அனைவரும், தயங்காமல் ஊசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்' என, தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள், உற்சாகமாக தெரிவித்தனர்.இது குறித்து, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட மக்கள் தெரிவித்த கருத்து:


latest tamil news
நம்பகத்தன்மை அதிகரிக்கணும்!


தடுப்பூசி போட்டுக் கொள்வது நல்லது தான். நான் இரண்டு கட்ட தடுப்பூசியும் போட்டுக் கொண்டேன். ஆனால், ஒரு சிலருக்கு ஊசி போட்டுக் கொண்டதும் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய, உலக, தேசிய அளவிலான மருத்துவ ஆய்வுக் குழு உள்ளது. அக்குழுவின் அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் நம்பகத் தன்மை அதிகரிக்க வேண்டும்.வி.ராமாராவ், 79 -ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்.,ஊழியர், நங்கநல்லுார்.


பாதுகாப்பானது


தனியார் கம்பெனியில் வேலை செய்கிறேன்.நான் கொரோனா தடுப்பூசி, இரு முறை போட்டுக் கொண்டேன். தற்போது, நான் மிகவும் உற்சாகமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக உணர்கிறேன். எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படவில்லை. என் மனைவிக்கும், 2வது தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு, திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளேன்.எம்.ஜெயக்குமார், 57,தனியார் நிறுவன ஊழியர்,திருவள்ளூர்.


சிறு பாதிப்பும் இல்லை


கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம், கொரோனா பாதிப்பிற்கு ஆளாகி, மருத்துவ சிகிச்சை பெற்றேன். கடந்த மாதம் ஒன்றும், இம்மாதம் ஒன்றும் என, இரண்டு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனையில் செலுத்திக் கொண்டேன். தடுப்பூசி செலுத்திய பின், காய்ச்சல், உடல்வலி என, எந்த தொந்தரவு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.கே. தேவேந்திரன், 60விவசாயி, தேவராஞ்சேரி கிராமம், பொன்னேரி.


பயமின்றி இருக்கலாம்


இரண்டு முறை தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டேன். தலைவலி, உடல்வலி என, எந்தவொரு தொந்தரவும் ஏற்படவில்லை. சாதாரணமாக சளி தொந்தரவு இருக்கும் எனக்கு, தடுப்பூசி செலுத்திய பின் அதுவும் இல்லை. பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டு, தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும்.சு. சைலஸ்டி, 51செவிலியர்,வெள்ளிவாயல்சாவடி, மீஞ்சூர்.


பாதிப்பு இல்லை


கவரைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச் மாதம் 12ம் தேதி, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். அடுத்த வாரத்தில், இரண்டாவது டோஸ் போட இருக்கிறேன். எனக்கு ரத்த அழுத்தம் இருந்த போதிலும், தடுப்பூசியால் எந்த உடல் நிலை பாதிப்பும் ஏற்படவில்லை.சுமனா கிருஷ்ணமூர்த்தி, 73கும்மிடிப்பூண்டி.


பக்கவிளைவு இல்லை


கும்மிடிப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில், மார்ச், 17ம் தேதி, கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டேன். இரண்டு நாட்கள் கழித்து, மனைவியும் போட்டுக் கொண்டார். இருவருக்கும் லேசான உடல் வலி மட்டுமே இருந்தது. அதை தவிர, எந்த பக்க விளைவும் ஏற்படவில்லை. அடுத்த சில நாட்களில், இரண்டாவது டோஸ் போட இருக்கிறோம்.க.மோகன், 60,ஓய்வு பெற்ற மின் வாரிய அலுவலர்.ஆரம்பாக்கம்.


பாதுகாப்பு உணர்வு


அரசு பள்ளி ஆசிரியராக பணியாற்றும் நான், சமுதாயத்திற்கு முன்னோடியாக இருக்கவும், சுய பாதுகாப்பு கருதியும், கொரோனா முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசிகளை போட்டுக் கொண்டேன். நான் நலமாக இருக்கிறேன். முன்பை விட, தற்போது பாதுகாப்பாக இருப்பதாக உணர்கிறேன்.-கே.எஸ்.தமிழரசு, 36,முதுகலை ஆசிரியர், பொதட்டூர்பேட்டை.


ஆரோக்கியம் முக்கியம்


பஸ் நிலையத்தில், குளர்பான கடை நடத்தி வரும் நான், தினசரி ஏராளமான வாடிக்கையாளர்களுடன் பழகி வருகிறேன். சமூக இடைவெளி, முக கவசம் உள்ளிட்டவற்றை கடைப்பிடித்து வந்தாலும், நானாக முன்வந்து, இரண்டு கட்ட தடுப்பூசிகளை, அரசு மருத்துவமனையில் போட்டுக் கொண்டேன். தற்போது, காலை முதல், இரவு வரை, கடையில் ஆரோக்கியமாக வியாபாரம் மேற்கொண்டு வருகிறேன்.எம்.பாரத் சிங், 69,குளிர்பான கடைக்காரர்ஆர்.கே.பேட்டை.


நலமாக உள்ளேன்


கடம்பத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், மார்ச், 25ம் தேதி கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். வரும் வாரத்தில், இரண்டாவது டோஸ் போட உள்ளேன். விவசாயி ஆகிய நான், எவ்வித பாதிப்பும் இல்லாமல், வழக்கம் போல், வயலுக்கு சென்று பணியை தொடர்ந்து நலமுடன் செய்து வருகிறேன்.ப. தட்சிணாமூர்த்தி, 64,விவசாயி,பிஞ்சிவாக்கம் கிராமம், கடம்பத்துார்.


பக்க விளைவு இல்லை


பேரம்பாக்கம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில், கடந்த, 16ம் தேதி, கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டேன். 60 நாட்கள் கழித்து, இரண்டாவது டோஸ் போட வேண்டும். லேசான உடல் வலி மட்டுமே இருந்தது. வேறு எவ்வித பக்க விளைவும் ஏற்படவில்லை.ஆ. மகாதேவி, 47பம்ப் ஆப்பரேட்டர்பேரம்பாக்கம்.


வழக்கம் போல் செயல்படுகிறோம்


ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனையில், கடந்த மாதம், 20ம் தேதி, நான் மற்றும் என் மனைவி காஞ்சன்பாய் இருவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோம். எங்கள் இருவருக்கும், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவை உள்ளது. ஊசி போட்டவுடன், எவ்வித பிரச்னையும் இல்லை. வழக்கம் போல், சர்க்கரை, ரத்த அழுத்தம் ஆகியவற்றிற்கான மாத்திரைகள் சாப்பிட்டு வருகிறோம்.பி.கியான்சந்த்ஜெயின், 67ஊத்துக்கோட்டை.


தடுப்பூசி அவசியம்


மார்ச், 24ல், 'கோவாக்கின்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். இதுவரை, எந்த ஒரு பக்க விளைவும் இல்லை. ஊசி செலுத்திய இடத்தில் மட்டும், லேசாக வலி இருந்தது. இரண்டு நாட்கள் கழித்து, சரியாகி விட்டது. அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள், தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும்.ஆர். குருவிஷ்வநாத், 40,தனியார் நிறுவன ஊழியர்,திருவல்லிக்கேணி.


பாதிப்பு வராது


!கொரோனா தடுப்பு அலுவலர் என்ற முறையில், இரண்டு முறை கோவிஷீல்டு தடுப்பூசி போட்டுக்கொண்டேன். முதல்முறை, சிறிது உடல் அசதி இருந்தது. காய்ச்சல் வரவில்லை. இரண்டாவது முறை, எந்த பாதிப்பும் இல்லை. தினமும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் எங்களுக்கே, தடுப்பூசியால் எந்த பாதிப்பும் வராததால், எங்களை பார்த்து பொதுமக்களும், ஆர்வமுடன் போட்டுக் கொள்கின்றனர்.யு.அலமேலு, 45,உதவி பொறியாளர், சென்னை மாநகராட்சி.


அச்சம் தேவையில்லை!


முதல் முறை, கோவிஷீல்டு தடுப்பூசி போட்டேன். இரண்டு நாள், காய்ச்சல், உடல் அசதி இருந்தது. பாரசிட்டமால் மாத்திரை சாப்பிட்டதும், அதுவும் சரியாகி விட்டது. ஐந்து நாளில், இரண்டாவது தடுப்பூசி போட வேண்டும். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பூசி தான் தடுப்பு நடவடிக்கையாக இருக்கும். உலகம் முழுதும் தடுப்பூசி போடுவதால், அதில் எழும் அச்சம் தேவையில்லை.எம்.பாலகிருஷ்ணன், 53,வேளச்சேரி.


தடுப்பூசி பயனளிக்கும்!


முதல் தடுப்பூசி போட்டேன். ஒரு நாள் மட்டும், காய்ச்சல், அசதி இருந்தது. அடுத்த நாளில் இருந்து, எந்த அச்சமும் இல்லாமல் பணி புரிகிறேன். தடுப்பூசியை, பாதுகாப்பாக உணருகிறேன். முன்பைவிட, மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இரண்டாவது அலை பரவலை தடுக்க, தடுப்பூசி மிகவும் பயனளிக்கும்.எஸ்.மனோன்மணி, 44,மாநகராட்சி ஊழியர்


தைரியம் வேண்டும்


எனக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. அப்படியிருந்தும், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, 'கோவி ஷீல்ட்' தடுப்பூசி போட்டுக் கொண்டேன். அதனால், எந்தவித பக்க விளைவும் ஏற்படவில்லை. பொதுமக்கள் தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.சொ. பரசுராமன், 44,தனியார் நிறுவன ஊழியர்,படப்பை.


பக்கவிளைவு இல்லை


மார்ச், 18ம் தேதி, பம்மல் ஆரம்ப நிலையத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஊசி செலுத்திய இடத்தில் மட்டும், இரண்டு நாட்களுக்கு லேசான வலி இருந்தது. வேறு எந்த வித பக்க விளைவும் இல்லை. அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.எஸ். மாரியப்பன், 75,சங்கர் நகர், பம்மல்.


தடுப்பூசி அவசியம்


மார்ச், 9ம் தேதி, கிண்டி, கிங் இன்ஸ்டிடியூட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். ஏற்கனவே, நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டதால், தடுப்பூசி பயனுள்ளதாக அமைந்துள்ளது. நோய் தொற்றை தடுக்க, அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.நா. கண்ணன், 49,மாநில துணைச் செயலர்,பசுமை தாயகம்,குரோம்பேட்டை.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-202123:00:05 IST Report Abuse
ஆப்பு மன்சூர் அலிகான் சொன்னதை கேட்கறாங்கன்னா அவிங்க பொதுஅறிவு எப்படி இருக்கும்னு ஊகிச்சுரலாம். மெய்ப்பொருள் காண்பது அறிவு.
Rate this:
Cancel
Suppan - Mumbai,இந்தியா
21-ஏப்-202112:33:31 IST Report Abuse
Suppan மன்சூர் அலி கான் போன்ற "அறிவாளீகள்' வாக்சீனுக்கு எதிராகக் கூவுவதை ஒரு அரசியல் தலைவராவது கண்டிக்கவில்லை. "கருத்து சுதந்திரம்" என்ற பெயரில் இந்த மாதிரி ஆசாமிகள் நாட்டில் நடமாடுவது நம் துர்பாக்கியம் 
Rate this:
Cancel
Ramona - london,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-202111:40:03 IST Report Abuse
Ramona இதை கூட மக்களுக்கு எடுத்துறைக்கனும், அப்போ கூட மக்களுக்கு அரசு மேல் நம்பிக்கை வராது, நல்ல நாடு நம்ஹநாடு ,உன் உயிரை பாதுகாப்பது உன் கடமை என தெரியாதா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X