ஆக்சிஜன் சிலிண்டர் வசதி கொண்ட படுக்கைகள் ஹவுஸ்புல் | Dinamalar

எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

ஆக்சிஜன் சிலிண்டர் வசதி கொண்ட படுக்கைகள் 'ஹவுஸ்புல்'

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 20, 2021
Share
கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில், பெரும்பாலானவர்கள் மூச்சுத்திணறலுடன் வருவதால், அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்பு உடைய படுக்கைகள், 'ஹவுஸ்புல்' ஆகியுள்ளன. சிகிச்சைக்காக, கிராமங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கி வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், சாதாரண படுக்கைகளிலும், ஆக்சிஜன் இணைப்பு வசதிகளை ஏற்படுத்த, அரசு முயன்று
oxygen cylinder, bed, housefull

கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரில், பெரும்பாலானவர்கள் மூச்சுத்திணறலுடன் வருவதால், அரசு மருத்துவமனைகளில், ஆக்சிஜன் சிலிண்டர் இணைப்பு உடைய படுக்கைகள், 'ஹவுஸ்புல்' ஆகியுள்ளன. சிகிச்சைக்காக, கிராமங்களில் இருந்து நகர்ப்புறம் நோக்கி வரும் நோயாளிகள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், சாதாரண படுக்கைகளிலும், ஆக்சிஜன் இணைப்பு வசதிகளை ஏற்படுத்த, அரசு முயன்று வருகிறது.


400 டன் ஆக்சிஜன்


தமிழகத்தில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மக்களை பாடாய்படுத்தி வருகிறது. தினமும் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. கிராமங்களிலும் பாதிப்பு அதிகமாக உள்ளதால், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், கிராமப்புறங்களில் போதிய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி இல்லாததால், பெரும்பாலானோர் நகர்ப்புறங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக, அரசு மருத்துவமனைகளில், 32 ஆயிரத்து, 807 படுக்கைகள்; தனியார் மருத்துவமனைகளில், 21 ஆயிரத்து, 535 படுக்கைள் என, 54 ஆயிரத்து, 342 படுக்கைகள் உள்ளன. இதில், 25 ஆயிரத்து, 386 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதிகள் உள்ளன. ஆக்சிஜன் வசதிகளை பொறுத்தவரையில், அந்தந்த மாநில அரசுகளே ஏற்படுத்தி கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில், தினந்தோறும், 400 டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. இதில், 240 டன் ஆக்சிஜன் அரசு மருத்துவமனைகளுக்கு வழங்கப்படுகிறது. எனவே, ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.

ஆனால், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. அரசு மருத்துவமனைகளில், பெரிய அளவிலான, 'ஆக்சிஜன் டேங்க்' வசதி உள்ளது. இதன் வாயிலாக, ஒவ்வொரு படுக்கைக்கும், குழாய் வாயிலாக, ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த முடியும். தற்போதைய சூழலில், அரசு மருத்துவமனைகளில், சாதாரண படுக்கைகளிலும், குறித்த அளவில் ஆக்சிஜன் வசதியையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, 70 சதவீதத்துக்கும் மேலான படுக்கைகளுக்கு, ஆக்சிஜன் வசதி கிடைக்கும்.


நடவடிக்கை


கொரோனா கவனிப்பு சிறப்பு மையங்களில், 35 ஆயிரம் படுக்கைகள் உள்ளன. தொற்று பரவல் வேகம் காரணமாக, இந்த எண்ணிக்கையை, 80 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.தமிழகத்தில் உள்ள, அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும், மொத்தமுள்ள படுக்கைகளில், 50 சதவீத படுக்கைகளை, கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க அறிவுறுத்தி உள்ளோம். அவசரமில்லாத சாதாரண சிகிச்சைகளுக்கு, உள்நோயாளிகளை அனுமதிப்பதை குறைத்து கொள்ள வேண்டும்.அவசர தேவையில்லாத சிகிச்சைகளை ஒத்தி வைத்துவிட்டு, கொரோனா நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க உத்தரவிட்டுள்ளோம்.


latest tamil news
விபரங்கள்


அதன்படி, தினந்தோறும் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்த விபரங்களை, https://stopcorona.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றவும், மாவட்ட இணை சுகாதார இயக்குனர்களுக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளோம். இதனால், எதிர்வரும் காலம் சவாலானது தான்; அவற்றை எதிர்கொள்ள அரசு தயாராக உள்ளது. மக்களும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.


மற்ற மாநிலங்களில் எப்படி


டில்லியில் சில நாட்களாக தொற்று எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து வருவதை அடுத்து அங்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ''டில்லியில் வழக்கத்தை விட அதிகமான ஆக்சிஜன் தேவை உள்ளது. ஆனால் வழக்கமாக கிடைக்கும் அளவு கூட ஆக்சிஜன் கிடைப்பதில்லை. டில்லிக்கு கிடைக்க வேண்டிய ஆக்சிஜன் வேறு மாநிலங்களுக்கு திருப்பி விடப்படுகின்றன'' என டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார்.

இரண்டாவது அலையில் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலமான மஹாராஷ்டிராவின் ஒரு நாள் ஆக்சிஜன் தேவை 1300 மெட்ரிக் டன். அங்கு நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 1250 மெட்ரிக் டன் வரை மட்டுமே உற்பத்தி செய்ய வசதிகள் உள்ளன. கூடுதலாக தேவைப்படும் ஆக்சிஜன் தற்போதைக்கு குஜராத் மற்றும் சத்தீஸ்கரில் இருந்து பெறப்படுகிறது.

மும்பை நகரில் உள்ள ஆறு தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் கையிருப்பு தீர்ந்ததை அடுத்து 168 நோயாளிகள் அவசர அவசரமாக அரசு மருத்துவமனைகளுக்கு சமீபத்தில் மாற்றப்பட்டனர்.உத்தர பிரதேசத்தில் அடுத்த 15 நாட்களுக்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பை தொடர்ந்து கண்காணிக்கும்படி மாநில மருத்துவ கல்வி அமைச்சருக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். அனைத்து மருத்துவமனைகளும் 36 மணி நேரத்திற்கு தேவையான ஆக்சிஜன் கையிருப்பு வைத்திருக்க அறிவுத்தப்பட்டுள்ளது.ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2024 படுக்கைகள் பயன்பாட்டில் உள்ளன.

கோவாவில் ஒரு சில இடங்களில் மட்டும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தொழிற்சாலைக்கான ஆக்சிஜன்கள் மருத்துவமனைகளுக்கு திருப்பி விடப்பட்டதை அடுத்து நிலைமை சமாளிக்கப்பட்டதாக முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.பஞ்சாபில் மூன்று முக்கிய அரசு மருத்துவமனைகளில் சொந்தமான ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் இருப்பதால் அவர்களின் தேவை போக மற்ற மருத்துவமனைகளுக்கும் சப்ளை செய்கின்றனர். பஞ்சாபில் இப்போதைக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

கர்நாடகா கேரளா குஜராத் ஒடிசா மற்றும் ஜம்மு - காஷ்மீரில் கொரோனா எண்ணிக்கை வேகமாக உயர்ந்தாலும் தேவையான ஆக்சிஜன் சப்ளை இருப்பதாக அம்மாநில அரசுகள் தெரிவிக்கின்றன.கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள 17 அரசு மருத்துவமனைகள் 69 தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் வசதிகளுடன் கூடிய அவசர சிகிச்சை பிரிவுகளில் 96 சதவீத படுக்கைகள் நிரம்பி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள 12 மாநிலங்களுக்கு குறுகிய கால தீர்வாக வரும் 25 மற்றும் 30 தேதிகளில் முறையே 5619 மற்றும் 6593 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு வழங்க உள்ளது.


உதவிக்கு முப்படைகள் தயார்


கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ராணுவ உயரதிகாரிகளுடன் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று ஆய்வு செய்தார்.'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த இந்தக் கூட்டத்தில் மாநிலங்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி ராணுவ அதிகாரிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டார். இதையடுத்து மாநில அரசுகளுடன் ராணுவ உயரதிகாரிகள் பேசியுள்ளனர்.

மாநிலங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதற்கு முப்படைகளும் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ மருத்துவமனைகளில் சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு வருவதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்தனர்.மாநில அரசுகளுக்கு தேவையான ஆக்சிஜன் படுக்கை வசதிகளை ஏற்படுத்தி தரும்படி டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு உள்ளிட்ட ராணுவ பொதுத்துறை நிறுவனங்களுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.


'தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை'


சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று அளித்த பேட்டி:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, தங்கு தடையின்றி வினியோகம் செய்யப்படுகிறது. தடுப்பூசிகள் வீணாகாமல் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில், தினமும், 400 டன் ஆக்சிஜன் உற்பத்தியாகிறது. அதில், 240 டன் மட்டுமே மருத்துவமனைகளின் தேவையாக உள்ளது. எனவே, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை. வேலுார் மருத்துவமனையில், ஆக்சிஜன் தட்டுப்பட்டால் உயிரிழப்பு நடக்கவில்லை என, மருத்துவமனை நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் விளக்கம் அளித்துள்ளன.

வரும், 1ம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வழங்கிய பின், தமிழக அரசு முடிவெடுக்கும். இதனால், தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்படாது என, உறுதி அளிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X