பொது செய்தி

தமிழ்நாடு

ஏன் தடுப்பூசி அவசியம்? பரப்பப்படும் வதந்திகளும், நிபுணர்களின் விளக்கமும்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021 | கருத்துகள் (29)
Share
Advertisement
சென்னை :கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதுடன், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். எவ்வித ஆய்வறிக்கையும் இல்லாத தகவல்களை, சமூக வலைதளங்களில் வீணாக பகிர வேண்டாம் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.நம் நாட்டில், கொரோனா தொற்றை தடுக்க, கோவாக்சின், கோவிஷீல்டு என, இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது,
தடுப்பூசி, அவசியம், வதந்திகள், நிபுணர்கள், விளக்கமும்

சென்னை :கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதுடன், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். எவ்வித ஆய்வறிக்கையும் இல்லாத தகவல்களை, சமூக வலைதளங்களில் வீணாக பகிர வேண்டாம் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நம் நாட்டில், கொரோனா தொற்றை தடுக்க, கோவாக்சின், கோவிஷீல்டு என, இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சமூகத்தில் பரவலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே, 1ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டப்படி, அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டு கொள்ளும் பட்சத்தில், சமூக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தடுப்பூசி குறித்த பல்வகை சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார், பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை கட்டுப்படுத்துவதில், முக்கிய பங்காற்றி உள்ள இவர், தற்போது, மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள கொரோனா குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்தும் அளித்த பேட்டி:


latest tamil news
கொரோனா தடுப்பூசி வேகமாக கண்டுப்பிடிக்கப்பட்டதால் சந்தேகம் உள்ளதே?


உலகின் பல்வேறு நாடுகளில், 50 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே, தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. 'பயோ டெக்' எனப்படும், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்த வளர்ச்சி காரணமாக தான், கொரோனா பரவ ஆரம்பித்து, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். இரண்டு தடுப்பூசிகளும், 100 சதவீதம் பாதுகாப்பானவை.


தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுமா?


கொரோனா தடுப்பூசியால், மாரடைப்பு, ரத்தம் உறைதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, போன்ற சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். இவையும், அனைவருக்கும் ஏற்படுவதில்லை. மற்றபடி, தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.


தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை என்ன?


தடுப்பூசி போடுவதே நன்மை தான். அதனால், நமக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். குறிப்பாக, நாம் தடுப்பூசி போடுவதால், அதன் பின் தொற்று ஏற்பட்டாலும், நமது உடல் உள்ளுறுப்புகள் பெரியளவில் பாதிக்கப்படாது.நோயின் தாக்கமும் குறைவாக இருக்கும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அனைவரும் தடுப்பூசி போடுவதால், போலியோ, டெங்கு உள்ளிட்ட நோய்களை போல், கொரோனா தொற்றையும் நாம் கட்டுப்படுத்தலாம்.


தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை எவ்வளவு?


கொரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரையில், இவ்வளவு சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதல்ல. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதால், 90 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம். இதனால், ஆண்டாண்டுக்கு கொரோனாபரவலின் வீரியம் இருக்காது.


தடுப்பூசி போட்டப்பின், முக கவசம் ஏன் அணிய வேண்டும்?


தடுப்பூசி போட்ட உடனேயே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடாது. முதல் 'டோஸ்' தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும், நான்கு முதல், எட்டு வாரங்கள் இடைவெளி உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தான், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதன்பின், தொற்று ஏற்படாது என்றும் கூற முடியாது. அதனால், அனைவரும் தடுப்பூசி போட்டபின் தொற்று கட்டுக்குள் வரும் வரை, முககவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு மட்டும் முக கவசம் அல்ல. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் முக கவசம் அவசியம்.


கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டில் எது சிறந்தது?


இந்த இரண்டு மருந்துகளும், தயாரிப்பு முறையில் மட்டுமே மாற்றம் உள்ளன. மற்றபடி, இரண்டும், ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தியை தான் மக்களுக்கு வழங்குகின்றன. பெரிய அளவிலான பக்கவிளைவுகள் இல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.


தடுப்பூசிக்கு முன், சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை அவசியமா?


சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை என்பது, உடலில் வேறு ஏதேனும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டறிய தான் செய்யப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது, அவரது புற்றுநோய் கட்டியை வகைப்படுத்தி காட்டலாம். அவ்வாறு காட்டும்போது, அவர் தடுப்பூசி போடக்கூடாது என்றில்லை. அவர்களுக்கு தான், முக்கியமாக தடுப்பூசி தேவை. இந்த பரிசோதனை, தடுப்பூசி போட்டு கொள்ளலாமா, கூடாதா என்பதற்காக அல்ல. அதனால், தடுப்பூசி போடுவதற்கு முன், சி.ஆர்.பி., பரிசோதனை அவசியமில்லை. அதற்கு பதிலாக, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்வது போதுமானது.


யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?


அரசு அறிவித்துள்ள படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களே. கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட வேண்டாம். மற்ற அனைவரும் தடுப்பூசி போடலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயாளிகள், தடுப்பூசி போடுவதற்கு முன், அவர்கள் சிகிச்சை பெறும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின், போட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.


நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு


உலகம் முழுதும் பரவி உள்ள கொரோனா பாதிப்பை தடுக்க, தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது. அனைத்து தடுப்பூசிகளிலும், சிறு சிறு பாதிப்புகள் இருக்க தான் செய்யும். உதாரணமாக, போலியோ சொட்டு மருந்தை பொறுத்தவரையில், இரண்டு கோடி பேரில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். போலியோவை அனைவருக்கும் வழங்கியதால் தான், அந்நோயை கட்டுப்படுத்த முடிந்தது.இந்தியாவில், 1.7 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இயற்கையாகவே, 30 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருக்கும். மற்ற அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த வேண்டுமென்றால், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதுவரை, தடுப்பூசி போட்டு கொண்ட, 12 கோடி நபர்களில், யாருக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அது குறித்து ஆய்வுகளும் இல்லை. எனவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை புறம்தள்ளிவிட்டு, தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.


latest tamil news


Advertisement

- டாக்டர். ஜெயலால், தேசிய தலைவர், இந்திய மருத்துவ சங்கம்.


அச்சம் வேண்டாம்


டாக்டர் என்ற முறையில், என்னிடம் வரும் நோயாளியின் உயிரைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கவச உடை அணிந்து, நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். என் பெற்றோர், சக மருத்துவர்கள் அனைவரும், இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாள் காய்ச்சல் வந்தது. அவ்வளவு தான். இன்றைய நிலையில், தடுப்பூசி ஒன்று தான், தொற்றை வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே வழி. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


latest tamil news


டாக்டர் மன்சூர் ஷேக்,அவசர சிகிச்சை மருத்துவ ஆலோசகர், சென்னை.

'கோவாக்சின், கோவிஷீல்டு' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை. எங்கள் மருத்துவமனையில், நாள்தோறும், 400 முதல், 500 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.


latest tamil news


சி. பழனிவேல், 48,தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, தடுப்பு மருந்து போட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம், தற்போது அதிகமாகி விட்டது. இது அவசியம் இல்லாத ஒன்று. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், ஏற்கனவே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கலாம். குழந்தைப் பருவத்தில் அம்மைக்கு தடுப்பூசி போட்ட போது காய்ச்சல் வந்திருக்கும். அதுபோல தான் தற்போது சிலருக்கு காய்ச்சல் வருவது. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி போடாவிட்டால் தொற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.


latest tamil news


டாக்டர் நீலமேகம், தலைவர், குடல், இரைப்பை நுண் துளை துறை,போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை.

தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேகமாக தொற்று பரவுகிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான், இரண்டு பேரில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.


latest tamil news


டாக்டர் பி.கண்ணன்,மீனாட்சி மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மையம், மதுரை.

தடுப்பூசி நடைமுறைக்கு வந்து, இரண்டு டோஸ் போட்ட பின், தைரியமாக நோயாளியின் அருகில் சென்று சிகிச்சை தர முடிகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் லேசான உடல் வலி தவிர, பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. நமக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் அது நன்மை விளைவிக்கும்.


latest tamil news


டாக்டர் ரோஸ் ரேச்சல்,தலைவர், இன்டர்னல் மெடிசின், மேத்தா மருத்துவமனை, சென்னை.


ஒரே தீர்வு தடுப்பூசி!


latest tamil news


சாமிநாதன், பொது மருத்துவ துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனா என்ற கொடிய வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இருமுறை மரபு மாற்றம் அடைந்த வைரஸ் (டபுள் மியூட்டன்ட் வைரஸ்) என்பதால், வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதிலும், இணை நோய் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். தனி மனித பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இதற்கு ஒரே தீர்வு, தடுப்பூசி மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் இதை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.தடுப்பூசி போடுவதால், இறப்பு சதவீதம் குறைகிறது. மேலும், நோய் தொற்று ஏற்பட்டாலும், பெரியளவில் பாதிப்புகள் உண்டாக்குவதில்லை. அதேசமயம், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இணை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.


பக்கவிளைவுகள்இல்லை!latest tamil news


பூமா, குழந்தைகள் நல துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனாவுக்கு முன், 1940களில் உலகையே அச்சுறுத்திய, 'ஸ்பேனிஷ் ப்ளூ', அதன்பின் வந்த 'ஸ்வைன் ப்ளூ' போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது தடுப்பூசிகள்தான். எனவே, கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது, அரசே, 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை, வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை, 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.


வதந்திகளை நம்ப வேண்டாம்!latest tamil news


வெங்கடேஷ், மூளை நரம்பியல்தண்டுவட அறுவை சிகிச்சை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: தற்போதைய சூழலில், தடுப்பூசியின் பயனை காட்டிலும், அதனால் ஏற்படும் சிறிய விளைவுகளைதான் அதிகம் மிகைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் இல்லை. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.


இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது


latest tamil news!அலி சுல்தான், காது மூக்கு தொண்டை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: நானும் என் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். கடந்த சில தினங்களுக்கு முன், பரிசோதனை செய்து பார்த்ததில், நோய் எதிர்ப்பு சக்தி நிறையவே அதிகரித்திருந்ததை பார்க்க முடிந்தது. தற்போதுள்ள இரண்டு தடுப்பூசிகளில் எதுவாக இருந்தாலும், போட்டுக் கொள்ளலாம். ஆனால், முதல் முறை எந்த தடுப்பூசி பயன்படுத்துகிறோமோ, இரண்டாம் தவணையின்போதும் அதே தடுப்பூசிதான் பயன்படுத்த வேண்டும்.


டாக்டர்களிடம் கேளுங்கள்!


latest tamil news


அருள்செல்வன், குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவ உதவி பேராசிரியர், கோவை அரசு மருத்துவமனை: கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், சிலருக்கு உடல் அசதி, ஒன்று இரண்டு நாட்கள் காய்ச்சல் வரலாம். இதுதவிர, பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. உடலில் பெரிய அளவில் பாதிப்புகள் இருப்பவர்களும், டாக்டர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதேபோல், கல்லீரல் சுருக்கம், வயிறு வீக்கம், நீண்ட நாட்கள் மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதுபோன்ற நோயாளிகளும், டாக்டர்களின் அறிவுரை கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.


இணைநோய் கவலை வேண்டாம்!


latest tamil news


மோனி, மூத்த மனநலமருத்துவர், பாலாஜி மூளை நரம்பியல் மற்றும் மன நல மருத்துவ மையம்: எனக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து போன்ற இணை நோய்கள் இருக்கின்றன. இதற்காக, தினமும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். தடுப்பூசி போட்ட பின் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. மேலும், என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நிறைய பேர் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இணைநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து வரும், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

Advertisement
வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மணி - புதுகை,இந்தியா
22-ஏப்-202105:56:19 IST Report Abuse
மணி கொரோனா இருக்கா இல்லையா ஊசி நல்லதா கெட்டதா இப்படியே பேசிக்கிட்டே இருந்தா எப்படி? எதுவா இருந்தாலும் சீக்கிரமா நடத்தி முடிங்க, தடுப்பூசி போடமாட்டேன்னு சொன்னா பிடிச்சு மல்லுக்கட்டியாவது போட்டு பிரச்சினையை முடிச்சு விடுங்க, சாதாரண ஏழைபாலையெல்லாம் வாழ்வாதாரத்த இழந்து தவிக்குதுங்க.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-ஏப்-202119:54:29 IST Report Abuse
sankaseshan விசு ஐ யரு தத்துவம் எல்லாம் சொல்லறாரு ஆதி சங்கரர் சொன்னதை உதாரணம் சொல்லறாரு .
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-202116:08:49 IST Report Abuse
மலரின் மகள் படித்தவர்களில் சிலருக்கே நோய்கிருமி தொடருக்கும், வியாதிக்கும் வித்தியாசம் தெரிவதில்லை. வேறுபடுத்தி ஒப்புநோக்கி அறியும் பாங்கு வேண்டும். ஆகையால் தகவல்களை தரும்போது இரண்டையும் தெளிவாக்குவது கடைமை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X