வேலூர்: லத்தேரி பேருந்து நிலையம் அருகில் கடந்த 18ம் தேதி நடந்த பட்டாசு கடை வெடி விபத்தில் இரண்டு குழந்தை உட்பட மூன்று பேர் உடல் கருகி பலியாகினர். இதனையடுத்து மனவேதனையில் இருந்த குழந்தைகளின் தாய் இன்று (ஏப்.,21) ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பேருந்து நிலையம் அருகில் பட்டாசு கடை நடத்தி வருபவர் மோகன். இவர் கடந்த ஏப்.,18ம் தேதி கடைக்கு தனது பேரக்குழுநதைகளான தனுஷ் (8) மற்றும் தேஜஸ் (6) உடன் வழக்கம் போல் கடைக்கு வந்தார். அப்போது கடையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதில், கடையின் உரிமையாளர் மோகன் மற்றும் அவரது பேரக்குழுந்தைகளான தனுஷ், தேஜஸ் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே கருகி பலியாகினர்.

இதனையடுத்து இறந்த சிறுவர்களின் தாயாரும் இறந்த மோகனின் மகளுமான வித்யாலட்சுமி (வயது 33) மிகுந்த மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், லத்தேரி ரயில் நிலையம் அருகே ஓடும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். தலை மற்றும் உடல் சிதறி இறந்த அவரது உடலை மீட்ட ஜோலார்பேட்டை தென்னக ரயில்வே போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தாத்தா மற்றும் பேரன்கள் இறந்த சோகம் ஆறுவதற்குள் நடந்த இந்த சோகம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE