புதுடில்லி : கொரோனா தடுப்பூசி தொடர்பாக சீரம் இன்ஸ்டியூட் நிறுவனம் விலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இது டுவிட்டரில் காரசாரமான விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை அதிதீவிரமாக மாறி வருகிறது. நாள் ஒன்றுக்கு சராசரியாக 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிரா, டில்லி, தமிழகம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. குறிப்பாக தலைநகர் டில்லியில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததுடன், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் அதிகமாகி உள்ளது. இதுதொடர்பாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தயவு செய்து ஆக்ஸிஜன் கொடுங்க என மன்றாடி கேட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க நாடு முழுக்க கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடக்கிறது.
மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. மேலும், தடுப்பூசி உற்பத்தியாளர்கள் 50 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசுக்கும், மீதமுள்ள தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கும், திறந்த சந்தைகளிலும் விற்க அனுமதி அளித்தது. இவ்வாறு விநியோகிக்கப்படும் தடுப்பூசிகளின் விலையை உற்பத்தியாளர்களே நிர்ணயிக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி, சீரம் நிறுவனம் தயாரித்து வரும் 'கோவிஷீல்டு' தடுப்பூசிக்கான விலையை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதன்படி மாநில அரசுகளுக்கு, ஒரு டோஸ் தடுப்பூசியின் விலை ரூ.400 என்றும், தனியார் மருத்துவமனையில் ரூ.600 எனவும் விலை நிர்ணயம் செய்து அறிவித்துள்ளது. இவை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவின் கொரோனா தடுப்பூசி விலையை விட மலிவானது எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 50 சதவீதம், மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி அந்த தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு ரூ.150 விலையிலேயே இந்நிறுவனம் வழங்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் சீரம் நிறுவனம் அறிவித்துள்ள தடுப்பூசியின் விலை பட்டியல் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக டுவிட்டரில் காரசாரமான விவாதம் நடந்து வருகிறது. இதனால் டுவிட்டரில் #Covishield, #CRs 150, #CRs 400, #SerumInstituteofIndia உள்ளிட்ட ஹேஷ்டாக்குகள் தேசிய அளவில் டிரெண்ட் ஆகின. இந்த ஹேஷ்டாக்கில் இவர்கள் முன்வைக்கும் கருத்துக்கள் என்னவென்று சிலவற்றை பார்ப்போம்.
* காங்கிரஸின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் டுவிட்டரில், ‛‛கோவிஷீல்டிற்கு மத்திய அரசு ஒரு டோஸுக்கு ரூ.150 செலுத்தும். மாநில அரசுகளுக்கு இப்போது ஒரு டோஸ் ரூ.400 வசூலிக்கப்படும். இது கூட்டுறவு கூட்டாச்சி அல்ல. ஏற்கனவே மாநில அரசுகள் நிதி பிரச்னையால் தள்ளாடி வரும் சூழலில் இது மேலும் சிக்கலை ஏற்படுத்தும்'' என பதிவிட்டுள்ளார்.
* மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியின் சீதாராம் யெச்சூரி டுவிட்டரில், ‛‛இது ஏற்றுக்கொள்ள முடியாதது. மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி, மாநில அரசுகளுக்கு இலவசமாக சமமான முறையில் விநியோகிக்க வேண்டும். இதற்காக பிரதமரின் நிதியில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள லட்சம் கோடி பணத்தை செலவிடலாமே'' என தெரிவித்துள்ளார்.
* கோவிட்ஷீல்ட் தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150. ஆனால் மாநில அரசுகளுக்கு ரூ.400 ஏன்? எல்லா மாநில அரசுகளும் நிதி பிரச்னையால் சிரமப்பட்டு வருகின்றன. மருந்துகள் வழங்குவதில் இதுபோன்ற வேறுபாடுகளை எங்களால் ஏற்க முடியாது.
* ஒரே நாடு, மூன்று விதமான தடுப்பூசி விலை. வேறொன்றும் இல்லை. இது திட்டமிட்ட கொள்ளை.
* நாட்டிற்கே நிதி வழங்கும் மத்திய அரசு ரூ.150 செலுத்துகிறது. அதே நேரத்தில் நிதிக்காக போராடும் மாநில அரசுகள் தடுப்பூசிக்கு ரூ.400 செலுத்த வேண்டும். இது எந்த மாதிரியான கொள்கை அல்லது முதலாளித்துவம்.
* மத்திய அரசு கொடுக்கும் விலைக்கே ஏன் மாநில மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு சீரம் நிறுவனம் வழங்கக்கூடாது. ஒரு ரூ.50 அதிக விலை என்றால் கூட பரவாயில்லை. அப்படியே இரட்டிப்பு விலை.
* தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும், கொரோனா முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்த, 100 மில்லியன் தடுப்பபூசிகளை ரூ.150 விலையில் பெற மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. 100 மில்லியன் தடுப்பூசி வழங்கப்பட்டதும் மத்திய அரசுமே ரூ.400 விலைக்கு தான் வாங்கும்.
* ரூ.150 என்பது பா.ஜ., ஆளும் மாநிலங்களுக்கான விலை, ரூ.400 என்பது மற்ற கட்சியினர் ஆளும் மாநிலங்களுக்கான விலை.
* மத்திய அரசே ரூ.150 விலைக்கு வாங்கி மாநிலங்களுக்கு இலவசமாக கொடுக்கலாமே. எதற்கு இப்படி மூன்று விதமான விலை பட்டியல். நாட்டு மக்கள் கொரோனா பிரச்னையால் தவிக்கும்போது போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுத்து தடுப்பூசிகளை செலுத்தும் பணியை விரைவுப்படுத்தலாமே.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE