சென்னை: கொரோனாவில் இருந்து மக்களை காக்க, மத்திய மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூறி உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: தடுப்பூசிகளை வீண்டித்துள்ள மாநிலங்களில், தமிழகம் முதல் இடத்தில் இருப்பதும், நாடு முழுவதும் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் 9,300 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது பேரதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ள நேரத்தில், மாநிலத்தில் இருந்து 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை தமிழக அரசுக்கே தெரியாமல், மத்திய அரசு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைத்தது வேதனை அளிக்கிறது.
கொரோனா நோய்தொற்று மேலாண்மையில் எந்தவித வெளிப்படைத்தன்மையும் இல்லாமல் பா.ஜ., அரசு திணறுவது மட்டுமல்லாமல், மாநில அரசுகளை கிள்ளுக்கீரையாக நினைக்கும் போக்குடன் நடந்து கொள்கிறது.
தமிழகம் முழுவதும் தடுப்பூசிகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மாநிலத்தில் மட்டும் 12.10 சதவீத தடுப்பூசிகள் விரயமாக்கப்பட்டுள்ளது, ரத்தக்கண்ணீர் வர வைக்கிறது. அனைவரின் உயிர்காக்கும் தடுப்பூசிகள் இவ்வாறு மக்களுக்கு பயன்படாமல் வீணடிக்கப் பட்டுள்ளதும், அதற்கு தமிழக அரசு சொல்லும் காரணமும் ஏற்று கொள்ளும்படியாக இல்லை.

கொரோனா முதல் அலை போல், இரண்டாவது அலையிலும், அதிமுக அரசின் இவ்வளவு அலட்சியம் மிகுந்த செயல்பாடு கண்டனத்திற்குரியது. தினமும் அதிகரிக்கும் கொரோனா தொற்று பொது மக்களை அச்சுறுத்தி வருகிறது. கொரோனாவினால் பாதிக்கப்பட்டோர் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைக்காமல், கொரோனா தொற்றிற்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை எடுத்து கொள்ள இயலாமல் அவமதிப்படுகின்றனர் என்ற தகவல் கவலை அளிக்கிறது.
தடுப்பூசி விரயம் ஆவதை தடுப்பது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை அளிக்க வேண்டும். ரெம்டெசிவிர் மருந்து, தட்டுப்பாடின்றி ஆக்சிஜன், கொரோனாவுக்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும். கொரோனாவுக்கு எதிராக தமிழக அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாப்பதற்கு மத்திய மாநில அரசுகள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE