'உயிர் முக்கியமா... தேர்தல் முடிவு முக்கியமா... 'மேல் மாடி காலி போல...' என, சரியாக சிந்திக்காதவர்களைப் பற்றி சின்ன பசங்க கிண்டலடிப்பாங்க... அது தான் நினைவுக்கு வருது...' என, சொல்லத் தோன்றும் வகையில், தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜா அறிக்கை: ஓட்டு எண்ணிக்கையை தாமதப்படுத்த சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏற்கனவே ஓட்டுப்பதிவு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன; அதனால் இயந்திரங்கள் அதிகரித்துள்ளன. கொரோனா கெடுபிடிகளை காரணம் காட்டி, முடிவு அறிவிப்பதை இழுத்தடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
'பொறுமை கடலினும் பெரியது; இப்போதைய தேவை, பெருங்கடல் அளவு...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை: கொரோனா வெறியாட்டம் தீவிரமாகி கொண்டிருக்கிறது. மருத்துவர்கள் அரும்பாடு படுகின்றனர்; செவிலியர்கள் தியாகம் செய்கின்றனர். மக்களுக்கு தற்போதைய தேவை பொறுமை; தேவையில்லாதது கோபம். பொறுமை காக்கும்; சினம் அழிக்கும்.
'இடைக்கால அரசு இது என, உங்களுக்கு யார் சொன்னது? இந்த அரசின் பதவிக்காலம், மே 16 வரை உள்ளது...' என, நினைவுகூரத் துாண்டும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிக்கை: தமிழகத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சி இல்லாத சூழலில், இடைக்கால அரசின் தலைமைச் செயலர், கொரோனா அவசர நிலையை எதிர்கொள்வதற்கான, உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மருந்துகளை போதுமான அளவில் கையிருப்பு செய்ய வேண்டும்.
'இங்கே தமிழகத்தில், கம்யூ.,க்கள், காங்கிரசார், 'தடுப்பூசியை பிற நாடுகளுக்கு பிரதமர் ஏற்றுமதி செய்து விட்டார்; இங்கே, தட்டுப்பாடு வந்து விட்டது' என, குய்யோ முறையோ எனக் கூப்பாடு போடுகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ராணா அறிக்கை: கோவாவில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு, 20 ஆயிரம் லிட்டர் திரவ ஆக்சிஜனை வழங்கிய, கேரள சுகாதார துறைக்கு நன்றி. கொரோனாவுக்கு எதிரான எங்கள் போராட்டத்தில், நீங்கள் அளித்த ஆதரவுக்கு, கோவா மக்கள் நன்றியுள்ளவர்களாக உள்ளனர்.
'நீங்கள் கேட்ட உடன், பிரதமரும் அனுமதி அளித்து விட்டாரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிக்கை: கொரோனா தடுப்பூசிகளை வெளிச்சந்தையில் விற்க அனுமதிக்க வேண்டும். அதை வசதியானவர்கள் வாங்கிக் கொள்வர். அதன் மூலம், நலிந்த பிரிவினருக்கு தடுப்பூசி கிடைக்கச் செய்வதில், மாநில அரசுகள் கவனம் செலுத்த முடியும்.
'பார்ப்போம், எவ்வளவு துாரம் செய்றீங்கன்னு...' என, சொல்லத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: பொள்ளாச்சியில் நடைபெற்று வரும், படம் ஒன்றின், 'ரீமேக்' படப்பிடிப்பில் பங்கேற்றேன். மறைந்த நடிகர் விவேக் படத்துக்கு படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு மரியாதை செய்தோம். சமூக மாற்றத்துக்காகவும், சுற்றுச்சூழலை காக்கவும் குரல் கொடுத்த விவேக் வழி நடப்போம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE