எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளுக்கு ஆக்ஸிஜன் தேவை அதிகரிப்பு :உற்பத்தி குறைவால் வினியோகிப்பதில் சிக்கல்

Updated : ஏப் 21, 2021 | Added : ஏப் 21, 2021
Share
Advertisement
கோவை : கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவையை விட தயாரிப்பு குறைவாக இருப்பதால், சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மட்டும் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 700க்கும் மேல் உள்ளது.
 மருத்துவமனைகள், ஆக்ஸிஜன்,அதிகரிப்பு,உற்பத்தி, சிக்கல்

கோவை : கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தேவையை விட தயாரிப்பு குறைவாக இருப்பதால், சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், தினமும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கோவையில் மட்டும் தினமும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, 700க்கும் மேல் உள்ளது. தற்சமயம், கோவையில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை இறந்தவர்களில், 60 சதவீதத்துக்கும் அதிகமானோர், நுரையீரல் செயலிழப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, நுரையீரலை செயல்பட வைப்பதற்கு, செயற்கை சுவாச சிகிச்சை அவசியமாக இருக்கிறது. அதற்கு முக்கிய தேவையான ஆக்ஸிஜன்தான் தற்போது பற்றாக்குறையாக உள்ளது.

தொழிற்சாலைகளில் இரும்பு பொருட்களை வெட்டவும், ஒட்ட வைப்பதற்கும் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. கொரோனாவுக்கு முன், தமிழகத்தில் உற்பத்தியாகும், 400 டன் ஆக்ஸிஜனில், 150 டன் மட்டுமே மருத்துவமனைகளுக்கும், 250 டன் தொழிற்சாலைகளுக்கும் பயன்பட்டு வந்தது. ஆனால், தற்போது மருத்துவமனைகளுக்கு மட்டுமே, 500 டன் அளவிற்கு ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதனால், உற்பத்தியாளர்கள் செய்வதறியாது திணறி வருகின்றனர்.


நுரையீரல் செயலிழப்பு ஏன்?



கோவை அரசு மருத்துவமனை நுரையீரல் நோயியல் துறை தலைவர், கீர்த்திவாசன் கூறியதாவது:ஆக்ஸிஜன்தான், உடலில் நடக்கும் எல்லா ரசாயன மாற்றங்களுக்கும், வளர்சிதை மாற்றங்களுக்கும் முக்கியமானதாக இருக்கிறது. சாதாரணமாக காற்றில், 20 சதவீதம் ஆக்ஸிஜன், 80 சதவீதம் நைட்ரஜன் உள்ளது. மனித உடம்பில் உள்ள நுரையீரல், அந்த 20 சதவீதம் ஆக்ஸிஜனை எடுத்துக் கொண்டு, ரத்தத்தில், 100 சதவீதம் ஆக்ஸிஜனாக மாற்றி கொடுக்கிறது.

சராசரியாக ஒரு மனிதனால், ஒரு நிமிடத்துக்கு 12 முதல் 16 முறை சுவாசிக்கப்படுகிறது. ஒவ்வொரு முறை சுவாசிக்கும்போதும், 500 மி.லி., காற்று உள்ளேயும், 500 மி.லி., காற்று வெளியேயும் செல்கிறது. இந்த, 500 மி.லி.,யில், ஆக்ஸிஜன் எவ்வளவு இருக்கிறது என்பதை பரிசோதனை தெரிந்து கொள்ள முடியும்.

உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை, இரண்டு விதமாக பரிசோதனை செய்யமுடியும். ஒன்று, பல்ஸ்ஆக்ஸி மீட்டர். இந்த முறையில், சராசரியாக, 98 முதல் 100 சதவீதம் வரை ஆக்ஸிஜன் அளவு இருக்க வேண்டும். அந்த வகையில், 94 சதவீதத்துக்கு கீழ் சென்றால், கட்டாயம் செயற்கை சுவாச சிகிச்சை தேவைப்படுகிறது. மற்றொன்று, ஏ.பி.ஜி., முறையில் ரத்த மாதிரிகள் சேகரித்து அதில் உள்ள ஆக்ஸிஜன் அளவை பரிசோதிப்பது. இதில், 98ல் இருந்து 100 மில்லி மீட்டர் ரத்த அழுத்தம் இருக்க வேண்டும்.

ஒருவேளை 60 சதவீதத்துக்கும் கீழ் போகும்போது, நுரையீரல் செயலிழந்து விடும். அவ்வாறு பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நோயாளிக்கு, 40 முதல் 100 சதவீதம் வரை செயற்கை சுவாசம் அளிக்கப்படும்போது, உடலில் உள்ள ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க செய்ய முடிகிறது.


செயற்கை சுவாசம்



கொரோனா பாதிப்புடன் வரும் நோயாளிகளுக்கு பெரும்பாலும், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் வைத்து பரிசோதனை செய்யப்படுகிறது. அதன்படி, நோயாளிகளுக்கு வெண்டிலேட்டரில், 20 முதல் 100 சதவீதம் வரைக்கும் செயற்கை சுவாசம் அளிக்கப்படுகிறது. நோயாளியின் தானாக சுவாசிக்கும் திறனை அறிய, அரைமணி நேரம் வெண்டிலேட்டர் நீக்கி பரிசோதிக்கப்படும். அப்போது, ஆக்ஸிஜன் அளவு, 94க்கு மேல் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அவர்களுக்கு, ஆக்ஸிஜன் தேவையில்லை என்று அர்த்தம். சிலருக்கு, நடக்கும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும்.

அதையும் கருத்தில் கொண்டே, அவருக்கு செயற்கை சுவாசம் தேவையா இல்லையா என்று முடிவு செய்யப்படும். கோவை அரசு மருத்துவமனையில், பொதுப்பிரிவுக்கு, 13 கிலோ லிட்டர், அவசர சிகிச்சை பிரிவுக்கு 2 கிலோ லிட்டர் என, மொத்தம், 15 கிலோ லிட்டர் கொள்ளளவு கொண்ட இரு ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் உள்ளன.இவ்வாறு, அவர் கூறினார்


தட்டுப்பாடுக்கு தீர்வு என்ன?



அனைத்திந்திய தொழிற்சாலை காஸ் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர் ஜெயக்குமார் கூறியதாவது;கோவை மருத்துவமனைகளுக்கு, கஞ்சிக்கோடு,பெருந்துறை, திருச்சி ஆகிய இடங்களில் இருந்துதான், திரவ ஆக்ஸிஜன் சப்ளையாகின்றன. தனியாக, ஆக்ஸிஜன் தயாரிப்பு தொழிற்சாலைகள் இல்லை. வெளியில் இருந்து கொண்டு வரப்படும் ஆக்ஸிஜனை நிரப்புவதற்கு என, கோவையில் ஐந்துக்கும் மேற்பட்ட, 'ரீ பாட்டிலிங்' தொழிற்சாலைகள் உள்ளன.
வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படும், திரவ நிலை ஆக்ஸிஜன் இந்த தொழிற்சாலைகளில், சேமித்து வைக்கப்பட்டு, பின்னர் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்யப்படுகின்றன. கொரோனாவுக்கு முன் உற்பத்தி செய்யப்படும் திரவ ஆக்ஸிஜன்களில், 70 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 30 சதவீதம் மட்டுமே மருத்துவமனைகளுக்கு தேவைப்பட்டு வந்தது. ஆனால், தற்போது கொரோனா வேகமாக பரவி வருவதால், மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் தேவை அதிகரித்துள்ளது. இதனால், தேவைக்கு அதிகமாக வினியோகிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மருத்துவமனைகளுக்கு மட்டுமே 500 டன் தேவைப்படுகிறது. மாதத்துக்கு 10 டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்ட மருத்துவமனைக்கு இன்று, 50 டன் தேவைப்படுகிறது. இதில், கோவை அரசு மருத்துவமனைக்கு மட்டும் நாள் ஒன்றுக்கு, எட்டு டன் வரை தேவைப்படுகிறது. இனியும் கொரோனா தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், தொழிற்சாலைகளுக்கு அனுப்புவது முற்றிலும் நிறுத்தப்பட்டால் மட்டுமே, மருத்துவமனைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X