மும்பை : ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில் கோல்கட்டாவை 18 ரன்னில் வீழ்த்தியது. டுபிளசி 95, ருதுராஜ் 64 ரன்கள் எடுத்து கைகொடுத்தனர்.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை அணி, இயான் மார்கனின் கோல்கட்டாவை சந்தித்தது. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார். சென்னை அணியில் பிராவோவுக்கு ஓய்வு தரப்பட்டு லுங்கிடி சேர்க்கப்பட்டார்.
டுபிளசி மிரட்டல்
சென்னை அணிக்கு டுபிளசி, ருதுராஜ் ஜோடி துவக்கம் கொடுத்தது. கடந்த மூன்று போட்டியில் ஏமாற்றிய ருதுராஜ், இம்முறை சுதாரித்துக் கொண்டார். இத்தொடரில் முதல் மற்றும் ஐ.பி.எல்., அரங்கில் நான்காவது அரைசதம் கடந்தார். பின் வருண் 'சுழலில்' ருதுராஜ் (64) அவுட்டானார். டுபிளசி ஐ.பி.எல்., அரங்கில் 17 வது அரைசதம் அடித்தார். மொயீன் அலி (25), தோனி (17) சற்று உதவினர். கம்மின்ஸ் வீசிய கடைசி ஓவரில் 2 சிக்சர் விளாசினார் டுபிளசி. சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 220 ரன்கள் குவித்தது. டுபிளசி (95 ரன், 60 பந்து), ஜடேஜா (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

ரசல் ஆறுதல்
கடின இலக்கை துரத்திய கோல்கட்டா அணி, தீபக் சகார் 'வேகத்தில்' ஆட்டங்கண்டது. சுப்மன் (0), ராணா (9), மார்கன் (7), நரைன் (4) என வரிசையாக இவரிடம் சரண் அடைந்தனர். திரிபாதி (8) ஏமாற்றினார். ரசல் (54) 21 பந்தில் அரைசதம் அடிக்க, சற்று பதட்டம் ஏற்பட்டது. நல்ல வேளையாக இவரை சாம் கர்ரான் போல்டாக்கினார்.

சாம் கர்ரானின் வீசிய 16வது ஓவரில் 30 ரன்கள் விளாசிய கம்மின்ஸ், 23 பந்தில் அரைசதம் அடிக்க, மீண்டும் 'டென்ஷன்' ஏற்பட்டது. மறுபக்கம் வருண் (0), கடைசி ஓவரில் பிரசித் (0) ரன் அவுட்டாக, கோல்கட்டா அணி 19.1 ஓவரில் 202 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. கம்மின்ஸ் (66) அவுட்டாகாமல் இருந்தார். கடைசி நேரத்தில் 18 ரன்னில் சென்னை வெற்றி பெற்றது, ரசிகர்களுக்கு வெல்லமாக இனித்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE