'ஆக்சிஜன் இல்லாமல் பிற மாநிலங்கள் தள்ளாடும் போது, பார்த்துக் கொண்டிருக்க, மத்திய அரசு அடாவடி அரசு அல்ல. பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் தான், தமிழர் இயல்பு. அதைத் தான், மத்திய - மாநில அரசுகள் செய்துள்ளன...' என, கூறத் துாண்டும் வகையில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் அறிக்கை: அண்டை மாநிலங்களுக்கு உதவ வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம், 4-வது இடத்தில் உள்ள போது, இங்கு உற்பத்தியாகும் ஆக்சிஜனை வேறு மாநிலங்களுக்கு துாக்கி கொடுப்பது தமிழக மக்களுக்கு, மத்திய அரசும், தமிழக அரசும் செய்யும் துரோகம்.
'தமிழகத்தில் ஸ்டாலின், கர்நாடகாவில் சித்தராமையா, கேரளாவில் முள்ளப்பள்ளி போல, தெலுங்கானாவில் நீங்கள் தான், ஆளும் அரசுக்கு குடைச்சல் கொடுப்பவரோ...' என, சொல்லத் தோன்றும் வகையில், ஐதராபாத் முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவர் அசாதுதீன் ஓவைசி எம்.பி., அறிக்கை: கொரோனாவை கட்டுப்படுத்த, இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என, நீதிமன்றம் உத்தரவிட்ட பின், தெலுங்கானா மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. கொள்கை முடிவுகளில் கூட, நீதிமன்றங்கள் தலையிடும் அளவுக்கு, மாநில அரசு நிர்வாகம் இருப்பது துரதிருஷ்டவசமானது.
'உங்கள் கூட்டணியின் தலைவர் ஸ்டாலின் மேற்கொண்ட பிரமாண்ட பொதுக்கூட்டங்களை சாடுகிறீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., தலைவர் அழகிரி பேச்சு: தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில், மிகப் பெரிய அளவில் தேர்தல் பிரசாரத்திற்கு, தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்க வேண்டும். அதனால் தான், மக்கள் அதிகமாக கூடி இப்போது, கொரோனா கட்டுக்கடங்காத அளவுக்கு உயர்ந்துள்ளது.
'கம்யூ.,க்கள் களத்தில் இறங்கினால் தான், கொரோனா என்ன, அதன் தாயகமான சீனாவே சிதறி ஓடுமே...' என, கிண்டலாக கூறத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் பொலிட்பீரோ உறுப்பினர் ராமகிருஷ்ணன் அறிக்கை: கொரோனா முதல் அலையின் பாதிப்பு, ஒரு கட்டத்தில் குறைந்து வந்த போது, 'உலகிலேயே கொரோனாவை வேகமாக கட்டுப்படுத்தியதில் இந்தியா முதலிடம்' என்றார், பிரதமர் மோடி. ஆனால், அடுத்தடுத்த அலைகளை தடுக்க, முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றி அவரோ, மத்திய சுகாதார அமைச்சரோ துளியும் கவலைப்படவில்லை.
'நம் வயிறு நிறைந்த பின், பசித்திருப்பவர்களுக்கு பங்கிடுவதில் தப்பில்லை...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: தமிழக அரசை கேட்காமல், தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் மத்திய அரசின் முடிவு கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமானது. தமிழகத்தின், 80 ஆயிரம் கொரோனா நோயாளிகளுக்கு தடையில்லாமல் கிடைக்க வேண்டிய ஆக்சிஜனை, மாநில அரசை கேட்காமல், மற்ற மாநிலங்களுக்கு மடைமாற்றுவது சரியா?
'நம்ம நாட்டில் உடனடி உற்பத்தி செய்து விடலாம். மிகவும் ஏழ்மையான, நம்மையே நம்பி இருக்கும் வங்கதேசத்திற்கு உதவினால் ஒன்றும் கெட்டு விடாது; ஸ்டெர்லைட்டை செயல்பட விடுங்க; ஒரு நாளில், 1,000 டன் ஆக்சிஜனை வழங்கும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி., ரவிகுமார் அறிக்கை: டில்லியில் இப்போது, 500 நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. மோடி அரசோ, அதை வங்கதேசத்திற்கு ஏற்றுமதி செய்திருக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE