தூத்துக்குடி : 'தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக என்னிடம் ஆதாரங்கள், ஆவணங்கள் எதுவுமில்லை' என, விசாரணை கமிஷனுக்கு, கடிதம் மூலம் நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில், 2018 மே, 22ல் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில், 13 பேர் பலியாயினர். இதுகுறித்து, உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், 27வது கட்ட விசாரணையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், ஆணைய கமிஷன் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகர் கூறியதாவது:சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்த, 48 பேர் வாக்குமூலம் அளித்தனர். சி.பி.ஐ., முதற்கட்டமாக, 27 பேர் மீதும், தொடர்ந்து, 44 பேரையும் குற்றவாளிகளாக சேர்த்தது.
சம்பவத்தன்று கைதான வர்களை, சட்டவிரோதமாக வல்லநாடு துப்பாக்கி சுடும் தளத்தில் வைத்து விசாரித்ததற்காக, புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் திருமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அப்போதைய கலெக்டர், எஸ்.பி., போலீசாரிடம் விசாரிக்க உள்ளோம். இதுவரை, 1,052 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டதில், 719 பேர் விளக்கம் அளித்துள்ளனர். 1,126 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டுள்ளன.அடுத்த விசாரணை மே. 17 முதல், 21 வரை நடக்கும். ரஜினிக்கு ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. அவர் வழக்கறிஞர் மூலம் எழுத்துபூர்வமாக பதில்அளித்துள்ளார்.
அதில், 'தூத்துக்குடிக்கு வந்து சென்றபோது, பத்திரிகையாளர் சந்திப்பில் எதார்த்தமாக பேசினேன். நான் பேசியதற்கு அடிப்படை ஆதாரங்களோ, ஆவணங்களோ இல்லை' என கூறியுள்ளார். இருப்பினும் இன்னும் சில சந்தேகங்கள் உள்ளன. தற்போது, கொரோனா மீண்டும் பரவ துவங்கிஉள்ளதால், பின் அவரிடம் விசாரணை மேற்கொள்வோம்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE