வாஷிங்டன் : அமெரிக்காவின் இணை அட்டர்னி ஜெனரலாக, இந்தியாவை பூர்வீகமாக உடைய வனிதா குப்தாவை, 45, நியமிக்க, பார்லிமென்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியாவை பூர்வீகமாக உடைய வனிதா குப்தா, சமூக உரிமைகள் தொடர்பான விஷயத்தில், அமெரிக்காவில் தலைச்சிறந்த வழக்கறிஞர். ஒபாமா அதிபராக இருந்தபோது, உதவி அட்டர்னி ஜெனரலாக பணியாற்றியுள்ளார். ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் அதிபராக பதவியேற்ற பின், நீதித் துறையில் மூன்றாவது உயரிய பதவியான, இணை அட்டர்னி ஜெனரலாக, வனிதா குப்தாவை நியமித்தார்.

அவரது நியமனத்தை உறுதி செய்வதற்காக, பார்லிமென்டின் செனட் சபையில் ஓட்டெடுப்பு நடந்தது.மொத்தம், 100 உறுப்பினர்கள் உள்ள செனட் சபையில், ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசு கட்சிக்கு தலா, 50 உறுப்பினர்கள் உள்ளனர்.குடியரசு கட்சியின் லிசா முர்கோவ்ஸி ஆதரித்து ஓட்டளித்ததால், 51 - 49 என்ற ஓட்டு விகிதத்தில், வனிதா குப்தா நியமனத்துக்கு, செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.
அவரது இந்த நியமனத்துக்கு, அமெரிக்க வாழ் இந்தியர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். கறுப்பினத்தவருக்கு எதிரான இனவெறி தொடர்பான வழக்குகளில் வென்றுள்ள வனிதா குப்தாவுக்கு, கறுப்பின மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.