புதுடில்லி: கொரோனா தடுப்பூசி வினியோகத்திற்கு, 'டிரோன்' எனப்படும், ஆளில்லா குட்டி விமானத்தை பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு, விமான போக்குவரத்து அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்தியாவில், மே 1 முதல், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போட, அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், மலைப் பிரதேசங்களில் தடுப்பூசிக்கான தேவை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அத்தகைய சூழலில், டிரோன்களை பயன்படுத்துவது சாத்தியமா என, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இதையொட்டி, விமான போக்குவரத்து அமைச்சகம், டிரோன் மூலம் தடுப்பூசி விநியோகிப்பது குறித்து ஆய்வு செய்ய, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

ஏற்கனவே, உத்தரகண்டில், டேராடூன், ஹரித்துவார் உள்ளிட்ட நான்கு நகரங்களில், அசையா சொத்துக்களின் தகவல்களை சேகரிக்க, டிரோன்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல, ரயில் விபத்து பகுதிகளையும், ரயில்வே சொத்துக்களையும் அடையாளம் காண, மேற்கு மத்திய ரயில்வே, டிரோன் பயன்படுத்த ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தனியார் துறையில், வேதாந்தா குழுமத்திற்கு, அதன் கனிம வளங்களை ஆய்வு செய்ய, நிபந்தனைகளுடன் டிரோன் பயன்படுத்த அனுமதி தரப்பட்டுள்ளது.