தூத்துக்குடி: கொரோனா நோயாளிகளுக்கான ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை சமாளிக்க ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாமா ? என்ற கருத்துகேட்பு கூட்டத்தில் காரசார மோதல் ஏற்பட்டது. அரசியல் கட்சியினர் மற்றும் சில தன்னார்வ அமைப்பினரிடம் பேச்சு நடந்தது. இதில் அரசு தரப்பில் ஆலை திறக்க அனுமதிக்க மாட்டோம் என உறுதி அளித்தனர்.
தமிழகத்தின் துாத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாக, 2018ல் போராட்டங்கள் நடந்தன. அப்போது ஏற்பட்ட வன்முறையின்போது, போலீசார் சுட்டதில், 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, அந்த ஆலை மூடப்பட்டது.

இந்நிலையில், ஸ்டெர்லைட் வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்வதற்கு அனுமதி கோரி, அதை இயக்கி வரும், 'வேதாந்தா' குழுமம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.''ஆக்சிஜன் ஆலையில், நாளொன்றுக்கு, 1,000 டன்னுக்கு மேல் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியும். அதை, மக்களுக்கு இலவசமாக வழங்கவும் தயாராக உள்ளோம். ஆலையை இயக்க அனுமதிக்க வேண்டும்,'' என, வேதாந்தா நிறுவனம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே வலியுறுத்தினார்.

இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என கூறிய தமிழக அரசு, ஆலையைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், 'ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு அனுமதிக்கலாம்' என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 'ஆக்சிஜனுக்கான தேவை, தேசிய அவசர நிலையாக உள்ளது. சுற்றுச்சூழல் விதிகளுக்கு உட்பட்டு, ஆக்சிஜன் ஆலையை மட்டும் இயக்க அனுமதிப்பதில், என்ன பிரச்னை உள்ளது? இந்த வழக்கு இன்று விசாரிக்கப்படும்' என, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, உச்ச நீதிமன்ற அமர்வு தெரிவித்தது.
அரசு நடத்தலாமே !
இதனையடுத்து இன்று நடந்த விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்ஸிஜன் உற்பத்தி என்பது தற்போதைய காலக்கட்டத்தின் அவசியத்தை உணர வேண்டும். இதனை அரசே முன் நின்று செய்யலாமே என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அரசு தரப்பில் முழு விவரத்தை மனுவாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு வரும் திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE