'எல்லாம் சரி. எப்போது இது போன்ற, யாருக்கும் உதவாத அறிக்கைகளை தவிர்க்கப் போகிறீர்கள். சொல்லுங்கள்...' எனக் கேட்கத் துாண்டும் வகையில், திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை: ஓய்வுக்கு பின் பதவி அளிக்கும் முறை ஒழிக்கப்பட வேண்டும். மேற்கு வங்கத்தில் எட்டு கட்ட தேர்தல் என்பது அரசியல் நோக்கமுடையதே. தேர்தல் ஆணையம் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு இயங்க வேண்டும். மக்களுக்காகவே சட்டமும், விதிகளும் என்பதே முக்கியம்!
'சரக்கு வாகனங்களை இரவிலும், பயணியர் போக்குவரத்தை பகலிலும் அனுமதிக்கலாமே...' எனக் கூறத் தோன்றும் வகையில், இந்திய கட்டுனர் வல்லுனர் சங்க மாநில செயலர் ராமபிரபு பேட்டி: கட்டுமான பணிகளுக்கு தேவையான சிமென்ட், மணல், ஜல்லி, கம்பி போன்ற பொருட்கள் இரவு நேரங்களில் தான் லாரிகள் வாயிலாக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும்.
'அரசியல் கட்சியை துவக்கி விட்டோம் என்பதற்காக, வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசக் கூடாது. தமிழகமும், இந்தியாவில் தான் உள்ளது. தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தேவை போதுமான அளவில் உள்ளதால் அனுப்பப்பட்டுள்ளது...' என, பதிலளிக்கத் தோன்றும் வகையில், அ.ம.மு.க., பொதுச் செயலர் தினகரன் அறிக்கை: தமிழக மக்களுக்கு, ஆக்சிஜன் தேவை இருக்கும்போது, தமிழக அரசு நிர்வாகத்தை கலந்தாலோசிக்காமல், வெளி மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பும் மத்திய அரசின் முடிவு கண்டனத்திற்குரியது
'தி.மு.க.,வினருக்கு மட்டும் ஏன் இந்த சந்தேகம் வருகிறது என்பதே மிகப் பெரிய சந்தேகமாக உள்ளது...' எனக் கூறத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., தலைவர் முருகன் அறிக்கை: ஓட்டு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளின் பாதுகாப்பு குறித்து, அடிக்கடி சந்தேகம் எழுப்பும் கட்சியாக, தி.மு.க., உள்ளது. பாதுகாப்பின்மை நிலவுவதாக கருதினால், கோர்ட்டுக்கு சென்று நியாயம் கேட்கலாமே!
'தடுப்பூசி முகாம் துவங்கிய ஒரு மாதத்தில், 12 கோடி பேருக்கு போடப்பட்டுள்ளது. தெருவுக்கு தெரு துவக்கி விட்டால், ஒன்றிரண்டு வாரங்களில் கூட முடித்து விடலாமே...' என, நம்பிக்கை ஏற்படுத்த தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தி தொடர்பாளர் கோபண்ணா அறிக்கை: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள், 94 கோடி பேர் உள்ளனர். இரண்டு முறை தடுப்பூசி போட, 188 கோடி டோஸ் தேவை. ஒருநாளில், 30 லட்சம் டோஸ் போடப்படுகிறது. இளைஞர்கள் அனைவரும் தடுப்பூசி போட, 626 நாட்கள் தேவை.
.
'ஆளாளுக்கு குழப்பமான ஐடியாக்களை கொடுப்பீங்க... அதை தேர்தல் கமிஷன் கேட்க வேண்டுமா...' என, சொல்லத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கையின் போது, ஓட்டு எண்ணும் மேஜைகளின் எண்ணிக்கையை குறைக்க கூடாது. இதனால், ஓட்டு எண்ணிக்கை முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்படும். இந்த விவகாரம் குறித்து, அனைத்து கட்சிகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE