உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :
வி.எஸ்.ராமு, செம்பட்டி, திண்டுக்கல் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: நீலகிரி மாவட்டத்தில், அரசு பழங்குடியின மாணவர் விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களுக்கு வழங்க வேண்டிய, விடுதி மற்றும் கல்வி உதவி தொகை, 7,300 ரூபாயை, 'ஆட்டையை' போட்ட, இரண்டு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். பள்ளி மாணவியரிடம் தவறாக நடந்து, 'போக்சோ' சட்டத்தின் கீழ், ஆசிரியர்கள் சிலர் கைதாவது ஒரு பக்கம் என்றால், மாணவருக்கு வழங்க வேண்டிய உதவித்தொகையில் கை வைப்பது, இன்னொரு பக்கம் அதிகரித்து வருகிறது.

ஓராண்டுக்கு மேலாக, பள்ளி மூடியிருக்கும் போதும், ஆசிரியர்களுக்கு மாதம்தோறும் சம்பளத்தை குறைக்காமல் தமிழக அரசு வழங்கி வருகிறது. அவர்களும் வளமான வாழ்க்கை தான் வாழ்கின்றனர். பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ள மாணவ - மாணவியரே, அரசு பள்ளியில் அதிக அளவில் படித்து வருகின்றனர். அரசு பள்ளி ஆசிரியர்கள், தங்கள் சொந்த பணத்தில் இருந்து, அந்த ஏழை மாணவர்களுக்கு ஏதாவது உதவி செய்வது சிறப்பானதாகும். அதிகளவில் பெறும் மாதச் சம்பளத்தில் இருந்து, மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை, அரசு வழங்கும் பல்வேறு இலவச பொருட்கள், கல்வி உதவி தொகை, மானியம் ஆகியவற்றில், 'கை வைக்காமல்' இருக்கலாமே!

ஆசிரியர் பணி அறப்பணி. அதை சிறப்பான முறையில் செய்து, இந்த சமூகத்திற்கு சிறந்த முன்மாதிரியாக, ஆசிரியர்கள் திகழ வேண்டும். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில், ஒரு சில ஆசிரியர்கள் தான், சமூகத்திற்கு முன்மாதிரியாக இருக்கின்றனர். நெருக்கடியான இக்காலகட்டத்தில் ஆசிரியர்கள், தம் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ, உளவியல் ஆலோசனைகளை வழங்க வேண்டும். குழந்தைத் திருமணம், குழந்தை தொழிலாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை, தடுக்க வேண்டும். மாணவர்களுக்கு வழங்க வேண்டிய நிதியில், 'கை வைத்து'ஆசிரியர்கள் கைது என்பது, பெரிய தலைகுனிவாக அமைகிறது. சமூகத்தை மாற்றும் ஆசிரியரின் சக்தி, கூர்மையாக இருக்க வேண்டும்; அந்த கூர்மையில், விஷம் தடவி இருக்கக் கூடாது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE