'எப்படியோ, மாநில அரசு சார்பில், இலவசமாக அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி கிடைக்கிறதே; அது வரைக்கும் நல்லது தானே...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை: போலியோ, காசநோய் தட்டம்மை, காலரா, மலேரியா, குழந்தைகள் சொட்டு மருந்து என, அனைத்தையும் மத்திய அரசு மக்களுக்கு இதுவரை விலையில்லாமலேயே வழங்கியது. இந்திய வரலாற்றில் தடுப்பு மருந்தை, மக்களுக்கு அளிக்கும் பொறுப்பை, மாநில அரசுகள் மீது சுமத்திய, முதல் அரசு மோடி அரசு தான்.
'நீங்கள் இப்படி சொல்கிறீர்கள்; ஆனால், உங்கள் கட்சியினர், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு என, செயற்கை தட்டுப்பாட்டை அல்லவா ஏற்படுத்தி வருகின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், கேரள மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் அறிக்கை: கேரளாவில், 1.65 லட்சம் பேர், 18 - 45 வயதுக்குள் உள்ளனர். அவர்களுக்கு, மே 1 முதல் தடுப்பூசி போட, முறையான வழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இரண்டு அல்லது மூன்று கட்டங்களாக தடுப்பூசி போடப்படும். ஏற்கனவே பிறநோய்கள் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
'கட்சி தலைமையை எதிர்த்து பேசுவது ஜனநாயகமா அல்லது தலைமையை பக்குவமாக விமர்சித்து, கட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவது ஜனநாயகமா சொல்லுங்கள்...' என, பாடம் நடத்தத் தோன்றும் வகையில், கரூர் காங்., - எம்.பி., ஜோதிமணி பேட்டி: காங்கிரஸ் கட்சியை பலமுறை விமர்சித்திருக்கிறேன். இது தான் காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை. நான் மட்டுமல்ல, ஏற்கனவே பலர் கட்சியின் தலைமையை எதிர்த்து கூடப் பேசியிருக்கின்றனர். இப்படிப்பட்ட வெளிப்படைத்தன்மை கொண்ட கட்சியாக இருப்பதாலேயே, நானும் காங்கிரசில் இருக்கிறேன்.
'அதுவும், இப்போது தான் வெளிப்படையாக, அரசை எதிர்த்து கேள்வி கேட்கின்றனர்; அவர்களை முடக்கி விடாதீர்கள்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேட்டி: ஹிந்து மத குருமார்கள் நம் நாட்டின் யோகா, தர்மம் போன்ற கருத்துகளுக்காக, உலக அளவில் பிரபலமடைந்துள்ளனர். அவர்கள் யாரும், 'கோவில் சொத்துகளை எங்களிடம் ஒப்படையுங்கள்' என்று கேட்கவில்லை. மற்ற மதத்தினரைப் போலவே, 'ஹிந்து கோவில்களை ஹிந்து மக்களே நிர்வாகம் செய்ய வேண்டும்' என்ற உரிமையைத் தான் கேட்கின்றனர்.
'கட்சியினருக்கு தனி கொள்கை; தலைவர்களுக்கு தனி செயல்பாடு கொண்ட கட்சிகள் அவை என்பதை இப்போது தான் அறிந்தீர்களா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக பா.ஜ., கலாசார பிரிவு தலைவர், நடிகை காயத்ரி ரகுராம் அறிக்கை: தடுப்பூசி குறித்து தவறான கருத்துகளை பரப்பி, தி.மு.க., - காங்., கூட்டணி மக்களிடம் அச்சத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்தியது. தடுப்பூசிகள் தமிழகத்தில் வீணாக காரணம், இவர்கள் தான். ஆனால், தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
'அபராதம் விதிப்பதை அதிகரித்த பிறகு தான், முக கவசம் அணிவது பரவலாகியுள்ளது. சில நேரங்களில், அபராதம் போன்ற தண்டனைகள் தான் சரிப்பட்டு வரும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர், தி.மு.க.,வைச் சேர்ந்த சுப்பிரமணியன் பேட்டி: தமிழக அரசு, மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தத் தவறியதே கொரோனா தொற்று மீண்டும் அதிகரிப்பதற்குக் காரணம். விழிப்புணர்வை ஏற்படுத்துவது, சம்பந்தப்பட்ட அத்தனை அரசுத் துறைகளின் கட்டாயக் கடமை. அதை விடுத்து, கொரோனா பெருந்தொற்றுச் சூழலில், ஏதோ சொத்து வரி வசூலிப்பதுபோல, இலக்கு நிர்ணயித்து வணிக நோக்கில் பணம் பிடுங்குவது அக்கிரமம்.
'மொத்தத்தில், உங்களால் மூடப்பட்ட ஸ்டெர்லைட்டை, எந்தச் சூழ்நிலையிலும் திறக்கவிடக் கூடாது. இது தானே, உங்கள் நல்ல எண்ணம்... வாழ்க வளமுடன்...' என, கூறத் தோன்றும் வகையில், ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ அறிக்கை: தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை; அகில இந்திய அளவிலும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு இல்லை. எனவே, அந்த காரணத்தை காட்டி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கும் முயற்சிக்கு, தமிழக அரசு துணை போகக் கூடாது.
'இந்த கொரோனா நேரத்திலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது உங்களுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சி போல, மத்திய அரசு இல்லை. கார்ப்பரேட் நலனை விட, மக்கள் நலன், உயிர் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பதால் தான், இந்த முடிவுக்கு வந்துள்ளது...' என, சொல்லத் தோன்றும் வகையில், மாநில மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை: தடுப்பூசி தயாரிப்பில், பொதுத்துறை நிறுவனங்களை புறக்கணித்து, தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு உள்ளது. கொரோனாவிலும் மக்களிடம் கொள்ளையடிக்க கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு சலுகை காட்டுவது நியாயமா?
'இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். தேர்தல் முடிந்ததும், கட்சியை மக்கள் மறந்துவிடக் கூடாது என்பதற்காக, 'உள்ளேன் அய்யா' என்பது போல, இதுபோன்ற குளறுபடிகளை செய்கின்றனர்...' என, சொல்லத் தோன்றும் வகையில், பா.ஜ., முன்னாள் தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: ஓட்டு பெட்டிகள், கால்குலேட்டர் போன்றவை. அவற்றை, வெளியில் இருந்து திருத்த முடியாது. அவ்வாறு செய்ய முடியும் என்றால், பார்லி., தேர்தலில், எங்களால் ஏன் ஒரு இடம் கூட வாங்க முடியாமல் போயிற்று; தி.மு.க., கூட்டணிக்கு, எப்படி, 38 இடங்கள் கிடைத்தன?
'தேவை வரும் போது தான், புதிய கண்டுபிடிப்புகள் வரும் என்பதற்கு, உங்கள் முயற்சியே அடையாளம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், சென்னை ஓமந்துாரார் அரசு மருத்துவமனை, 'டீன்' ஜெயந்தி பேட்டி: ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளவர்களின் மூச்சு விடும் திறனை அதிகரிக்க, குப்புற படுக்கச் செய்கிறோம். மேலும், நீண்ட நேரம் படுத்திருக்காமல் நிமிர்ந்து உட்காரச் செய்கிறோம். இதனால், மூச்சுத்திணறல் குறைகிறது.
'மொத்தத்தில், தி.க., மற்றும் தி.மு.க., தன் சுயரூபத்தை இழந்து விட்டது என்கிறீர்கள்... அது சரி, அ.தி.மு.க., மட்டும் அப்படியே இருக்கிறதா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் அறிக்கை: ஈ.வெ.ரா., கண்ட, திராவிட அரசியல் களத்தை, வீரமணி சின்ன வட்டமாக்கி, சின்னாபின்னப்படுத்தினார். அண்ணாதுரை கண்ட தி.மு.க., அவரது மறைவுக்கு பின், கருணாநிதியால், பணக்காரர்களின் பஞ்சு மெத்தை ஆகிவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE